புலம்பெயர் சமூகத்திடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

(எஸ்.கருணாகரன்)
புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன? அல்லது அவர்கள் எத்தகைய செயற்றிட்டங்களுக்கு உதவவேண்டும்”? என்று இரண்டு நாட்களுக்கு முன்பு, கேட்டார் புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வாழ்கின்ற நண்பர் ஒருவர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. இன்னும் சொல்லப்போனால், யுத்தத்துக்குப் பிறகு, இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்த பிற்பாடு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது.

இந்த இரண்டு தேர்தல்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரும்பான்மையாக வெற்றியடைந்த பிறகு, எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. வெற்றியடைந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகளின் பிரமுகர்களும் பல தடவை புலம்பெயர் தேசங்களுக்குப் பயணங்களைச் செய்து திரும்பிய பின்னர் எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது. எல்லாவற்றையும் விட, நான்கு ஆண்டுகளாக வடமாகாண சபையின் ஆட்சி நடந்த பிறகு எழுப்பப்பட்டிருக்கும் கேள்வி இது.

இவ்வளவுக்கும் இந்தக் கேள்வி ஒன்றும் மிகச் சிக்கலான அரசியலையோ சர்ச்சைகளையோ உண்டாக்கக்கூடிய விவகாரங்களைக் கொண்டதல்ல மிக எளிய கேள்வி. ஆனால், கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படையைக் கொண்டுள்ளது.

யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் கடந்த இந்தக் காலப்பகுதியில், இலங்கை அரசியலிலும் தமிழ்ச் சூழலிலும் மேற்குறிப்பிட்ட விடயங்கள் (தேர்தல்களும் வெளிநாட்டுப் பயணங்களும்) நடந்துள்ளன. ஆனாலும், போரினால் பாதிக்கப்பட்ட மண்ணையும் மக்களையும் மீள்நிலைப்படுத்துவதற்குரிய வேலைகள் சரியாக நடக்கவில்லை. இதனால், இன்னும் யுத்தத்தின் வலியைச் சுமந்தபடியே யுத்தப் பிரதேச மக்கள் வாழ்கின்றனர்.

‘வாழ்கின்றனர்’ என்று சொல்வதை விட வாழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்வதே சரியானது. அந்தளவுக்கு இந்த மக்களின் வாழ்க்கை மிகுந்த நெருக்கடிக்கும் அவலத்துக்கும் உள்ளாகியுள்ளது. மிக மிகப் பின்தங்கிய நிலையில், ஒருவேளை உணவுக்கே வழியற்றிருக்கிறார்கள். தமிழ் மக்களின் சமூக அரசியல் வளர்ச்சிக்கு முறையான பங்களிப்புகளையும் பங்கேற்புகளையும் புலம்பெயர் சமூகம் வழங்கவில்லை.

இவ்வாறு கூறுவதன் மூலம், புலம்பெயர் மக்களின் பணிகளைப் புறக்கணிப்பதாகவோ அவற்றைப் பொருட்படுத்தாமல் பேசுவதாகவோ கருதத் தேவையில்லை. தனிப்பட்ட முறையிலும் சிறிய அமைப்புகளின் வழியாகவும் பலவிதமான உதவிகளைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் புலம்பெயர் உறவுகள் செய்து வருவது உண்மை.

ஆனால், இதை ஓர் ஒழுங்கு முறைக்குள் வகுத்துச் செயற்படுத்துவதற்கு யாரும் இதுவரையில் முன்வரவில்லை. இதனால், இவ்வாறான உதவிகள் உரிய பயனை விளைவிக்கவில்லை. செய்யப்படும் உதவிகள் ஆறுதலாகவும் வளர்ச்சிக்கு உதவக்கூடியவாறும் அமைய வேண்டும். அதுவே பயனுள்ளது. ஆனால், அவ்வாறு அமையவில்லை என்பதே இங்கே கவனிக்கப்பட வேண்டியது.

ஆனால், இவ்வளவுக்கும் செய்யப்பட்ட இந்த உதவிகளைப் புலம்பெயர் மக்கள் தங்களுடைய கடினமான உழைப்பின் வழியாகவே திரட்டி உதவினார்கள். அப்படிக் கடின உழைப்பின் வழியாகத் திரட்டப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கைக்கு உதவவேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் செய்யப்பட்ட உதவிகள் உரிய பயனைப் பெறவில்லை என்றால், அதற்குப் பின்னாலுள்ள காரணங்களைக் கண்டறிய வேண்டுமல்லவா.

அந்தக் காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்ற உட்தொனியுடன் எழுப்பப்பட்டதே நண்பர் எழுப்பிய கேள்வியாகும். “புலம்பெயர்ந்திருக்கும் சமூகத்தினரிடமிருந்து தாயக மக்கள் எதிர்பார்ப்பது என்ன?” என்பது இதுவரை செய்யப்பட்ட உதவிகளுக்கும் அப்பால், மெய்யான அர்த்தத்தைப் பெறக்கூடிய உதவியாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. “இதற்கான செயற்றிட்டங்கள் எத்தகையன?” என்பது இதனோடு இணைந்த இரண்டாவது அவசியக் கேள்வியாகும்.

இந்தக் கேள்விகள் இன்னொரு கோணத்தில் ஆழமான அரசியல் விமர்சனத்தையும் கொண்டுள்ளன. ஆனால், அதை இவை பேசாப் பொருளாகப் பேசுகின்றன.

1. கடந்த எட்டு ஆண்டுகளிலும் தமிழ் அரசியல் சக்திகள் எவையும், முறையான செயற்திட்டங்களை உருவாக்கவில்லை.

2. மாகாணசபை கூட அப்படியான ஒரு திட்டத்தை வரையவில்லை.

3. புலம்பெயர் நாடுகளுக்குப் பல சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் கூட, உருப்படியான திட்டங்களை முன்வைத்துப் பேசவில்லை; திட்டங்களை உருவாக்கவும் இல்லை.

4. நாடுகடந்த தமிழீழ அரசும் அதை ஆதரித்து நிற்கும் புத்திஜீவிகளும் ஆதரவாளர்களும் கூட இது குறித்துச் சிந்தித்ததாக இல்லை. அப்படிச் சிந்தித்திருந்தால் அவர்களால் பயன்பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்கியிருக்க முடியும்.

5. புலம்பெயர் நாடுகளில் உள்ளவர்கள்கூட, முறையான திட்டங்களைத் தாயகத்துக்கு அறிமுகப்படுத்தவில்லை. தாயகத்திலிருந்து புலம்பெயர் நாடுகளுக்கு வந்துபோகும் அரசியல் தலைவர்களிடத்திலும் பிரமுகர்களிடத்திலும் இந்த விடயங்கள் குறித்து உரையாடவும் இல்லை; கேள்விகளை எழுப்பவும் இல்லை; முறையான திட்டங்களை இணைந்து உருவாக்கவும் இல்லை.

பதிலாக சில புலம்பெயர் அணியினர் அல்லது அமைப்புகள் தமிழ் அரசியல் தரப்பின் மீது நம்பிக்கையீனமடைந்து, அரசாங்கத்துடன் பேசித் தனியாகச் சில வேலைத்திட்டங்களைச் செய்ய முயற்சித்திருக்கின்றன.

அவற்றில் சில வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் ஆங்காங்கே இயங்கிக் கொண்டிருக்கின்றன. இது ஏதோ அவற்றின் ஆத்ம திருப்திக்காகவும் சுய முயற்சியின் ஆர்வத்தின்பாற்பட்டவையுமாகும். ஆனால், இதெற்கெல்லாம் அப்பால், புலம்பெயர் சமூகத்தின் பெரும் பங்களிப்பைத் தாயக மக்கள் பெறக்கூடியதாக மாற்றியமைக்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் தாராளமாகவே உண்டு.

யுத்தம் முடிந்த கையோடு, அடுத்ததாக என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிர்க்கதி நிலை, இருண்ட நிலை இருந்தது உண்மை. அப்போதிருந்த சூழலும் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியும் எதைப்பற்றியும் நிதானமாகச் சிந்திப்பதற்கான இடைவெளியை உருவாக்கியிருக்கவில்லை.

இருந்தபோதும் சில அமைப்புகளும் சில தனியாட்களும் தங்களால் முடிந்த அளவுக்குச் சில முயற்சிகளை மேற்கொண்டு, சில உதவித்திட்டங்களை முன்மொழிந்ததுண்டு.

ஆனால், அவை வளர்த்தெடுக்கப்படவில்லை. தவிர, பரவலான முறையில் ஓர் ஒழுங்கு முறைப்படுத்தப்பட்டதாகவும் அவை அமையவில்லை. இதற்குத் தமிழ் அரசியல் மனோபாவமும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு பொது நிலைப்பாட்டுக்கு வர முடியாதவாறு தியாகி, துரோகி, அரச ஆதரவு, அரச எதிர்ப்பு, புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற பிரிநிலை மனோபாவம் எதையும் ஒரு முகப்படுத்திச் சிந்திக்க முடியாதவாறு பலவீனமாக இருந்தது இன்னும் இருக்கிறது. இதனால் எதைக்குறித்தும் சரியாகச் சிந்திக்க முடியாத ஓர் அவல நிலை, பலவீனமான நிலை தமிழ்ச் சூழலில் நிலவிக் கொண்டிருக்கிறது.

இதனாலேயே பல விடயங்கள் பேசப்படாமல், திட்டமிடப்படாமல், திட்டமிட்டவையும் செயற்படுத்தப்பட முடியாமல் உள்ளன. அவற்றில் ஒன்றாகவே புலம்பெயர் சமூகத்தின் வளத்தையும் பங்களிப்பையும் தாயக மக்களின் மேம்பாட்டுக்கும் தமிழ் அரசியலுக்கும் பயன்படுத்திக் கொள்ள முடியாதிருக்கிறது.

ஏறக்குறைய இது குறித்து, கடந்த ஆண்டு கனடாவில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன், சில அவதானங்களை வெளிப்படுத்தியிருந்தார். சில ஆலோசனைகளையும் கூறியிருந்தார். அதில் முக்கியமானது, ஒருங்கிணைக்கப்பட்ட நிதிமூலத்தைப் புலம்பெயர் தமிழர்கள் உருவாக்க வேண்டும் என்பதாகும்.

இதைப் பயன்படுத்துவதற்கான முறையான திட்டங்களை உருவாக்கிக் கொண்டு, இந்தநிதி மூலத்தைத் திரட்டுவதற்கு முயற்சித்திருந்தால் அதை வைத்துப் பல காரியங்களைச் செய்திருக்க முடியும். சமூகம் மெல்ல முன்னோக்கியதாக அசைவியக்கம் கொண்டிருக்கும்.

இவ்வாறு திரட்டப்படும் நிதிமூலத்தைச் செயற்படுத்துவதற்கான முறையான திட்டங்களை வகுத்து, அதைப் பற்றி மக்களுக்குத் தெரியப்படுத்தும்போதே, அதற்கான ஆதரவை மக்கள் வழங்குவர். ஆகவே, முக்கியமாகத் தாயகத்துக்குத் தேவையான, அடிப்படையான சில திட்டங்களை இங்கே குறிப்பிடலாம்.

1. பொருளாதார மேம்பாட்டுக்கானது:

(அ) ஆலோசனை

(ஆ) திட்டங்கள் (வளமதிப்பீடு, வள உருவாக்கம், பாரம்பரியத் தொழில்முறை மற்றும் புதிய தொழில் திட்டங்களின் அறிமுகம்)

(இ) செயற்படுத்துவதற்கான வழிமுறைகள்

(ஈ) ஒத்துழைப்பு அல்லது ஆதரவு (வளர்ச்சிக் காலம் வரையான உத்தரவாதம்)

(உ) நிதிப்பங்களிப்பு மற்றும் முதலீடுகள் (தனி நபராகவோ அமைப்பாகவோ குழுவாகவோ)
2. அரசியல் ரீதியானது:

(அ) சட்ட ஆலோசனைக் கட்டமைப்புகள்

(ஆ) ஆய்வு மையங்கள்

(இ) அரசியல் தொடர்பாடலுக்கான கட்டமைப்பு (சர்வதேச அளவில்)

(ஈ) பல்மொழி ஊடகங்கள் மற்றும் வெளியீடுகள்

(உ) மனித உரிமைகள் தொடர்பான விவகாரங்களுக்கான அமைப்பு (இதையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசு செய்வதற்கு இருந்தது என்று யாரும் சொல்லக்கூடும். ஆனால், செயற்பாட்டு அடையாளத்தைக் கொள்ளாத எதையும் யாரும் கவனத்தில் கொள்வதில்லை)

3. கல்வி மற்றும் பிற சமூகக் கட்டமைப்பு:

(அ) வள உருவாக்கம்

(ஆ) புதிய சாத்தியங்களை ஏற்படுத்துதல்

(இ) உலகத்திசை எங்குமிருந்து திரட்டிய கலைச் செல்வத்தை, கல்வி அறிவைப் பகர்வதற்கான பொறிமுறையை உருவாக்குதல் (குறிப்பாக தமிழர்களின் உயர் கல்வியில்)
இதைப்போல பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், இளைய தலைமுறையினரின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான தொழில்வாய்ப்புகளையும் தொழிற்றுறைகளையும் உருவாக்கியிருக்க வேண்டும்.

இவ்வாறு செய்திருந்தால், இன்று தாயக மக்களின் அரசியல், பொருளாதார, கல்வி, சமூகத்தளம் உயர்ந்து பலமடைந்திருக்கும். தாயகத்துக்கும் புலம்பெயர் சமூகத்துக்கும் இடையிலான பிணைப்பும் பல நிலைகளிலும் வலுப்பெற்றிருக்கும்.

இதைச்செயற்படுத்துவதற்கான அரசியல் தலைமைத்துவம் இல்லை என்பதே அடிப்படை உண்மையாகும். தூர நோக்கத்துடனும் மக்கள் நேயத்துடனும் சிந்திக்கத் தெரியாத தலைமைத்துவங்களால் பிரச்சினைகளை உணரவும் முடியாது; அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டடையவும் முடியாது.

இதுவே தமிழர் அரசியலில் உள்ள பலவீனமாகும். இதை மீறி எழுவது எப்போது? எப்படி அது நிகழும்? யார் அதைச் சாத்தியப்படுத்துவது? மக்களால் சாத்தியப்படுத்த முடியாது என்று எதுமே இல்லை என்று வரலாறு எடுத்துரைக்கிறது. அதைப் பொருட்படுத்துவது எப்போது?