போட்டோ ரீக்கோ: வங்குரோத்தான அமெரிக்காவின் நவகொலனி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

நாடுகள் சுதந்திரமானவை. ஒருபுறம் இக்கூற்று உண்மையாக இருக்கிறபோதும், மறுபுறம் இக்கூற்று எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல என்பதை நாமறிவோம். பல நாடுகள் சுதந்திர நாடுகள் போல் தோற்றங் காட்டினாலும் அவை அதன் இயங்குநிலையில் அவ்வாறல்ல. குறிப்பாக கொலனித்துவ ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்த நாடுகள் பல நீண்டகாலத்துக்கு கொலனித்துவ ஆதிக்கவாதிகளின் நலன்களுக்குப் பங்கமில்லாமல் நடந்து கொண்டன. ஆனால் அது என்றென்றைக்கும் ஆனதல்ல என்பதைப் பலநாடுகளில் உருப்பெற்ற தேசிய விடுதலைப் போராட்டங்கள் காட்டி நின்றன.

இன்று காலம் மாறிவிட்டது. நாடுகளைக் கட்டுப்படுத்தும், செல்வாக்குச் செலுத்தும் வழிமுறைகளும் மாறிவிட்டன. அதன் பொருள் கொலனியாதிக்கம் முழுமையாக முடிந்துவிட்டது என்பதல்ல.

கடந்தவாரம், போட்டோ ரீக்கோவானது வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டதாகவும் கடன்தொகையான 123 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலுத்தவியலாது எனவும் அறிவித்தது. இது உலகளாவிய பொருளாதார நெருக்கடியானது இன்னொரு வகையில் புதிய கட்டத்துக்கு நகர்வதைக் கோடி காட்டி நின்றது. போட்டோ ரீக்காவின் இந்நிலையானது பொருளாதார ரீதியில் மட்டுமன்றி, அரசியல் ரீதியிலும் ஒரு நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது. போட்டோ ரீக்கோ ஒரு சுதந்திரத் தனிநாடன்று. இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாலும் அமெரிக்காவுடன் நிலத்தால் ஒன்றுபடாத, ஆனால் அமெரிக்காவின் நிலப்பரப்பாகவும் நிர்வாக ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவும் திகழ்கிறது.

கொலனியாதிக்கத்தின் வரலாறு நீண்டது. உலகெங்கும் பல்வேறு கொலனிகள் நீண்டகாலமாக இயங்கி வந்துள்ளன. இரண்டாம் உலகப்போரும் அதைத் தொடர்ந்த விடுதலைப் போராட்டங்களும் கொலனியாதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பிரதான ஊக்கிகளாக அமைந்தன. இதன் விளைவாக ஆசியா, ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கக் கண்டங்களில் உள்ள பல நாடுகள் சுதந்திர நாடுகளாக மலர்ந்தன. அவ்வாறு பெறப்பட்ட சுதந்திரம் முழுமையானதா என்ற கேள்வி ஒருபுறமிருந்தாலும் பிரித்தானிய, பிரெஞ்சு, போர்த்துக்கேய, ஒல்லாந்து, இத்தாலி மற்றும் ஸ்பானிய கொலனியாதிக்கங்கள் பெருமளவுக்கு முடிவுக்கு வந்தன.

‘பொதுநலவாய போட்டோ ரீக்கோ’ என இப்போது அழைக்கப்படுகின்ற போட்டோ ரீக்காவானது 3.4 மில்லியன் மக்கள் தொகையை உடைய வடகிழக்கு கரீபியன் கடற்பரப்பில் அமைந்துள்ள தீவுக் கூட்டமாகும். அரவாக்கன் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தாய்னோ இனக்குழுவைச் சேர்ந்த பழங்குடிகள் வாழ்ந்த பகுதியான போட்டோ ரீக்கோ 1493இல் கொலம்பஸின் வருகையை அடுத்து ஸ்பானியாவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியாகியது. 1898இல் ஸ்பானிய-அமெரிக்க யுத்தத்தின் முடிவில் எட்டப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையின்படி, ஸ்பெயினின் கொலனிகளை அமெரிக்காவிடம் கையளித்தது. அவ்வாறு கையளிக்கப்பட்டவைகளில் போட்டோ ரீக்கோ, கியூபா, பிலிப்பைன்ஸ் என்பன முக்கியமானவை. அன்றுமுதல் போட்டோ ரீக்கோ அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட பகுதியாக இருந்து வருகிறது.

இதை அமெரிக்காவின் கொலனி என அழைப்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன. போட்டோ ரீக்கன்கள் அமெரிக்கப் குடிமகன்களாகக் கருதப்பட்டாலும் அமெரிக்கக் குடிமகன் அனுபவிக்கும் சலுகைகள் இவர்களுக்கு இல்லை. அச்சலுகைகளை அனுபவிக்க அவர்கள் அமெரிக்கப் பெருநிலப்பரப்புக்குள் வசிக்க வேண்டும். போட்டோ ரீக்கோவில் வசிக்கும் போது அவர்கள் பெயரளவிலான அமெரிக்கக் குடிமகன்கள் மட்டுமே. அமெரிக்காவின் அரசியலமைப்பு உறுதிசெய்துள்ள குடியுரிமைகள் இவர்களுக்குரியதல்ல.

அமெரிக்காவின் தேர்தல்களில் இவர்கள் வாக்களிப்பதில்லை. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், அமெரிக்கக் காங்கிரஸின் மேலவை மற்றும் கீழவை உறுப்பினர்களைத் தெரிவதற்கான தேர்தல்கள் போட்டோ ரீக்கோவில் நடப்பதில்லை.

போட்டோ ரீக்கோவால் எதையும் நேரடியாக இறக்குமதி செய்யவியலாது. போட்டோ ரீக்கோவினால் இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்கள், முதலில் அமெரிக்கப் பெருநிலப்பரப்பின் துறைமுகத்திலோ அல்லது விமான நிலையத்திலோ இறக்கப்பட்டு, பின்னர் அமெரிக்க கப்பல் அல்லது விமானம் மூலமே போட்டோ ரீக்கோவுக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவற்றின் பின்னணியிலேயே இன்று போட்டோ ரீக்கோ எதிர்நோக்குகின்ற நெருக்கடியை நோக்க வேண்டியுள்ளது. போட்டோ ரீக்கோ, அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட காலம் முதல் தொடர்ச்சியான நெருக்கடியைச் சந்தித்து வந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்படுகின்ற மாற்றங்கள் விலக்கின்றி இங்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. அவ்வகையில் ஒரு தசாப்த காலத்துக்கு முந்தைய உலகப் பொருளாதார நெருக்கடியின் விளைவுகளின் கூட்டுப் பாதிப்பை இன்று போட்டோ ரீக்கோ எதிர்நோக்குகின்றது.

இங்கு 45 சதவீதமானவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். இதில் குறிப்பாக சிறார்களில் 60 சதவீதமானவர்கள் வறுமைக் கோட்டுக் கீழே வாழுகிறார்கள். சுயபொருளாதாரத்தைக் கொண்டிருப்பதற்கான வாய்ப்பை அமெரிக்கா மறுத்துள்ள நிலையில், பொருளாதார ரீதியில் பாரிய நெருக்கடியை நோக்கி போட்டோ ரீக்கோ நகர்ந்தது. இதை வாய்ப்பாக்கிய பொருளாதார வல்லூறுகள் கடன் என்கிற பெயரில் போட்டோ ரீக்கோவைத் தொடர்ந்து சூறையாடின.

போட்டோ ரீக்கன்கள், அமெரிக்காவில் இருந்து பிரிந்து சுதந்திரத் தனிநாடாவதற்கு அனுமதிக்குமாறு தொடர்ச்சியாகக் கோரி வந்துள்ளனர். 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுசன வாக்கெடுப்பில் 54 சதவீதமானவர்கள் அமெரிக்காவில் இருந்து பிரிந்து தனிநாடாவதற்கான விருப்பை வெளியிட்டனர். அமெரிக்கக் காங்கிரஸ் இதை ஏற்க மறுத்துவிட்டது. 1953 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை, போட்டோ ரீக்கோவின் அரசியல் நிலை குறித்து விவாதித்து வந்துள்ளது. கொலனியாதிக்கத்திலிருந்து விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நடந்த விவாதங்களின் விளைவால், 1978 ஆம் ஆண்டு, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்காவின் கொலனியாக போட்டோ ரீக்கோவை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இருந்த போதிலும் தனது அறிக்கைகளில் ஐ.நா, போட்டோ ரீக்கோவை ‘தேசம்’ என்று அடையாளப்படுத்தி வருகிறது. தங்களுக்கெனத் தனியான தேசிய அடையாளங்களை உடைய மக்கள் கூட்டமாகவும் அமெரிக்கர்கள் அல்லாத கரீபிய மக்கள் தொகையாகவும் போட்டோ ரீக்கோவை ஐ.நா ஏற்றுக் கொள்ளுகிறது.

இவ்விடத்தில் கவனிக்கப் பெறுமதியான சில விடயங்கள் உள்ளன. ஒரு சமூகப் பொருளாதார அமைப்பாக உள்ள மக்கள் திரள்கட்குச் சுயாதீனமான இருப்பு தேவைப்பட்ட போதே தேசம் என்பதற்கான வரைவிலக்கணம் தேவைப்பட்டது. ஐரோப்பாவில் முதலாளியம் ஏகாதிபத்தியமாக விருத்திபெற்ற போது, தம்மினும் வலியதான ஒரு நாட்டின் ஆளும் வர்க்கத்தால், தேச நலனின் பேரில், ஒடுக்குமுறை ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடுகளும் மக்களும் தமக்கெனச் சுதந்திரமான அரசுகளைக் கோரினர். இவ்வகையிலேயே தேசமாதலின் அடிப்படையில் தேச அரசுகளின் தோற்றம் நிகழ்ந்தது. தேச அரசு என்பது முதலாளியத்தின் துணை விளைவு.

இனமும் பிரதேசமும் சார்ந்த அடையாளங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. ஆயினும், முதலாளியத்தின் தோற்றம் வரை, அவ் அடையாளங்கள் தேசங்களாக அமையப் பெறவில்லை. தேசம் என்ற கருத்தும் அதை அரசொன்றுடன் அடையாளப்படுத்தும் நடைமுறையும், உருவாகி வளர்ந்துவந்த முதலாளி வர்க்கம் ஒன்றின் தேவைகட்கமையவே எழுந்தன. தேசியம், முதலாளிய அரசுக்குத் ‘தேசஅரசு’ என்ற மதிப்பான அடையாளத்தை வழங்கியதன் மூலம், அந்த அரசில் தமக்கும் ஒரு பங்குண்டு என ஒடுக்கப்பட்ட வர்க்கங்களும் நம்பி ஏமாற உதவியது. இவ்வாறு, தேசியம் முதலாளிய நலன்களுக்கு, குறிப்பாக ஏகாதிபத்திய நலன்களுக்கு நன்கு உதவியது.

2016 ஆம் ஆண்டு ஜுன் மாதமளவில் போட்டோ ரீக்கோ தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் ‘கொலனியாதிக்க விடுதலைக்கான சிறப்புக் குழு’வினால் முன்வைக்கப்பட்ட அறிக்கை, ‘போட்டோ ரீக்கன்கள் சுயநிர்ணய அடிப்படையில், தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கப்பட வேண்டும்’ எனக் கோரியது. இக்கோரிக்கையை இன்றுவரை அமெரிக்கா ஏற்கத் தயாராகவில்லை. இது இன்னொரு வலிய செய்தியைச் சொல்கிறது.

அமெரிக்காவுக்குத் தேசிய இனப்பிரச்சினை தொடர்பாக என்ன நிலைப்பாடு இருக்கிறது என்ற கேள்விக்குத், தேசங்களினதும் தேசிய இனங்களினதும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான ஒரு விடை தேடுவது கடினம்.

ஏகாதிபத்தியம் தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கின்றதா என்ற கேள்விக்கும் திட்டவட்டமான ஒரு விடை கிடையாது. கொலனிய யுகத்திலிருந்தே தேசங்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிய கேள்விக்கான திட்டவட்டமான ஒரு விடையை ஒடுக்கப்படுகின்ற தேசத்தின் நோக்கிலோ ஒடுக்குகின்ற தேசத்தின் நோக்கிலோ கூடப் பெற இயலாமலே இருந்தது.

ஆதிக்க நோக்கத்தையுடைய ஒவ்வொரு நாட்டினதும் (உண்மையில் அந்த நாட்டின் உண்மையான எசமானர்களான ஏகபோக முதலாளிய நிறுவனங்களினதும்) நலன்களை முன்வைத்தே அந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தமது உள்நாட்டு, அயல்நாட்டுக் கொள்கைகளை வகுக்கின்றனர்.

கொலனிய யுகத்தில் ஒரு கொலனிய வல்லரசு இன்னொரு கொலனிய வல்லரசின் கீழுள்ள நாட்டில் விடுதலைப் போராட்டங்களை ஆதரித்திருக்கிறது. ஆனால், அந்த ஆதரவுக்கு இரண்டு நோக்கங்கள் இருந்தன. ஒன்று தனக்குப் போட்டியாக இருக்கின்ற வல்லரசைப் பலவீனப்படுத்துவது. மற்றையது, கொலனி ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட நாட்டைத் தன் வசமாக்குவது. இவ்வாறான உலக ஆதிக்கத்துக்கான போட்டியே இரண்டு உலகப் போர்களுக்குக் காரணமாயிருந்தது. இன்று ஏகாதிபத்தியங்களுக்கிடையே மேலாதிக்கத்துக்கான அப்படிப்பட்ட வெளிவெளியான மோதல் ஒன்றைக் காண முடியாது. ஏனெனில், அமெரிக்காவே உலகின் மிக வலிய மேலாதிக்க வல்லரசாக உள்ளது.
நேரடியான கொலனி ஆட்சியின் இடத்தை நவகொலனியம் என்னும் பொருளியல் வழியிலான ஆதிக்கம் பிடித்துக் கொண்டுள்ளது. கொலனிய ஆட்சியாளரின் படைகள் செய்த காரியத்தை உள்ளூர் அரசின் படைகள் செய்கின்றன. நிலைமைகள் கட்டுக்கடங்காமல் போகும்போது, அதாவது மேலாதிக்கத்துக்கு எதிரான சவால்கள் வலுப்படும் போது, மட்டுமே அமெரிக்கா தனது படைகளைப் பயன்படுத்துகிறது. முடிந்தால், அதையும் கூட ஐ.நா பாதுகாப்புச் சபையின் பேரில் செய்து கொள்கிறது. சுயநிர்ணயமும் இவ்வாறே அரசியல் தேவைகளுக்கான கருவியானது. ஒருபுறம் கொசோவாவை சேர்பியாவில் இருந்து பிரித்தெடுக்கவும் சூடானிலிருந்து தென் சூடான் பிரிவினைக்கு கோட்பாட்டு ரீதியான நியாயத்தை வழங்கவும் அமெரிக்காவுக்கு சுயநிர்ணயம் பயன்பட்டது. அதேவேளை குர்து, பாலஸ்தீன விடுதலைப் போராட்டங்கள் பயங்கரவாதமாக அமெரிக்காவின் கண்களுக்குத் தெரிகின்றன. அமெரிக்கா, சுயநிர்ணயத்தைத் தனது ஆதிக்க நோக்கங்களுக்கே பயன்படுத்தி வந்துள்ளது. போட்டோ ரீக்கோவின் விடயத்தில் சுயநிர்ணயத்தை ஏற்க அமெரிக்கா மறுப்பது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

இன்று போட்டோ ரீக்கோ எதிர்நோக்கும் பொருளாதார வங்குரோத்தை அமெரிக்கா கையாளும் விதம் தனது மக்களை அமெரிக்கா எவ்வாறு நடத்துகிறது என்பதற்கான சிறந்த உதாரணம். இம்மாதம் 184 அரச பாடசாலைகள் மூடப்படுகின்றன. இதனால் 27,000 மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பை இழக்கிறார்கள். ஏற்கெனவே கடந்த ஐந்து ஆண்டுகளில் 150 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. பாடசாலைகளை மூடுவதன் மூலம், அரச செலவீனங்களைக் குறைப்பதன் ஊடு, பொருளாதார நெருக்கடி நிலையைக் கட்டுப்படுத்தவியலும் என அமெரிக்க அதிகாரிகள் சொல்கிறார்கள். இச்செயலை வரவேற்கும் ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை ‘கல்வியறிவற்ற, எளிமையான சிந்தனையுடைய, அக்கறையற்ற போட்டோ ரீக்கன்கள் வைன், பெண்கள், இசை மற்றும் ஆடல் ஆகியவற்றில் மட்டும் விருப்புடையவர்கள்’ என எழுதி போட்டோ ரீக்கன்களுக்கான கல்வி மறுக்கப்படும் செயலுக்கு ஒத்தூதுகிறது.

பொருளாதாரத்தை மீட்கும் இன்னொரு நடவடிக்கையாக, 11 வளாகங்களையும் 70,000 மாணவர்களையும் உடைய போட்டோ ரீக்கோ பல்கலைக்கழகத்துக்கான நிதி ஒதுக்கீடு அரைவாசியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மாணவர்கள் வீதிகளில் இறங்கிப் போராடுகிறார்கள். போட்டோ ரீக்கன்கள் தங்களது எதிர்காலத்தைத் தாங்களே தீர்மானிக்க அனுமதிக்குமாறும் அமெரிக்காவை வெளியேறுமாறும் கோருகிறார்கள். போட்டோ ரீக்காவில் அமெரிக்க ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள் முன்னெப்போதும் இல்லாதளவு அதிகரித்துள்ளன.

போட்டோ ரீக்காவை இழக்க அமெரிக்கா விரும்பாது. அதேவேளை அதைப் பிணையெடுக்கும் நிலையிலும் அமெரிக்கா இல்லை. இதனால் இக்கட்டான சூழலை நோக்கி போட்டோ ரீக்கோ நகர்கிறது. மறுபுறம் உலகப் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வந்துவிடவில்லை என்பதை எடுத்துக் காட்டும் இன்னொரு உதாரணமாக போட்டோ ரீக்கோ திகழ்கிறது.

போட்டோ ரீக்கன்களுக்கு தங்கள் உரிமைகளுக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடுவதே வழி. அவ்வளவில் அவர்கள் முற்போக்கான திசையில் நகர்கிறார்கள். உலகம் போராடும் மக்களின் கைகளிலேயே உள்ளது என்பதை அவர்கள் உணரத் தொடங்கும்போது உலகம் வெல்லப்படக் கூடியதே.