மட்டக்களப்பு மண்வாசனைச் சொற்கள்

* அந்த வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய பிரதேசங்களை விட மட்டக்களப்பு மாநிலத்தில் மட்டுமே வழங்குகின்ற மட்டக்களப்புப் பிரதேச வழக்காற்றுச் சொற்கள் பலவுள்ளன. அச்சொற்களையே மண்வாசனைச் சொற்கள் என அழைக்கின்றோம். 

* இங்கே மட்டக்களப்பு மாநிலம் என அழைக்கப்படுவது கிழக்கு மாகாணத்தில் வடக்கே வெருகல் ஆற்றையும் தெற்கே குமுக்கன் ஆற்றையும் கிழக்கே வங்காள விரிகுடாக் கடலையும் மேற்கேஊவாமலைக்   குன்றுகளையும் எல்லைகளாகக்கொண்ட நிலப்பரப்பாகும். 

* மட்டக்களப்பு மண் வாசனைச் சொற்கள் எனும்போது முதலில் வருவது மட்டக்களப்புமாநிலத்துக்கு மட்டுமே உரித்தான ‘கா’ எனும் அசைச்சொல்லாகும். இந்தக் ‘கா’ எனும் அசைச்சொல் தமிழுலகில் வழக்கொழிந்து போனதும் தொல்காப்பியர் காலத்துமான அசைநிலை இடைச் சொற் பிரயோகம் என்று அமரபண்டிதர் வி.சீ.கந்தையா அவர்கள் தான் எழுதிய ‘மட்டக்களப்புத் தமிழகம்’ (1964) எனும் நூலில் பெருமையோடு பதிவு செய்கிறார். 

யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது என வரூஉம் ஆயேழ் சொல்லும் அசைநிலைக்கிளவி”  

என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தினால் சுட்டப்படும் ஏழு அசைச் சொற்களில் ‘கா’ வும் ஒன்று. மட்டுமல்லாமல், நன்னூலாசிரியர் காலத்தில் ‘கா’ என்பது உயர்ந்தோர் வழக்காக அழைக்கப்பட்டதைநன்னூலில் காணலாமென்கிறார். இவ்வழக்கு பின்பு காலவோட்டத்தில் அருகி மறைந்து போயிற்றுஎனலாம். 

தற்காலத்தில் நெருக்கமான உரித்துக்காரரைப் பெரும்பாலும் பெண்கள் பெண்களை விளிக்கும் போது இந்தக் ‘கா’ போட்டு அழைப்பார்கள். வாகா, போகா, இரிகா, சாப்பிடுகா என்று அன்போடும்- உரித்தோடும் கூறுவர். ஆனால் ஆண்பெண் பால் வேறுபாடுகளின்றியும் இக் ‘கா’ பாவனையிலுண்டு. கணவன் மனைவியரும் தங்களுக்குள்ளே இக் ‘கா’ போட்டும் விளிப்பர். ‘கா’ என்ற இவ்வசைச்சொல் பேச்சு வழக்கில் மட்டுமல்ல கவிஞர்களின் எழுத்திலும் ஏறி இலக்கிய அந்தஸ்தையும் பெற்றதொன்றாகும். உதாரணத்திற்கு, அமர் கவிஞர் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடக்கத்தில், வயலுக்குப் போக வெளிக்கிட்ட கந்தப்போடிக்கு மனைவி பொன்னம்மா உணவுபரிமாறிக் கொண்டிருக்கையில் கந்தப்போடி தனது மனைவியை விளித்து 

சோக்கான கறிகாதோலிச் 

சுண்டலில்வை; முன்னால் நான் 

கேட்காமல் அள்ளி வைப்பாய் 

கிழவனாய்ப்போனேன்பாரு!….” 

இங்கே கணவன்-மனைவி அன்னியோன்னியத்திற்குக் ‘கா’ அசைந்து கொடுக்கிறது. 

அதே காவியத்தில், தன் வீட்டிற்கு வந்த தன் மச்சாள் கனகம்மாவை (கந்தப்போடியின் தங்கை) 

வா மச்சாள் வாகா! உள்ளே”என வரவேற்கிறாள் பொன்னம்மா.

அதேபோல் நீலாவணனின் ‘வேளாண்மை’க் காவியத்தின் தொடர்ச்சியாகச் செங்கதிரோன் எழுதிய ‘விளைச்சல்’ என்னும் குறுங் காவியத்தில் மட்டக்களப்பு மாநிலக் கிராமமொன்றில் கல்யாணம் கேட்டுப்போகும் காட்சி வருகிறது. பெண் வீட்டார் சீர்வரிசைப் பொருட்களுடன் மாப்பிள்ளை வீட்டை அடைகின்றனர். அங்கே, 

வட்டாவைக்கனகம்நீட்ட 

வாகா! வா மச்சாள் என்று 

தட்டோடு பொன்னுவாங்க 

தயாராகி நின்ற மற்றக் 

கிட்டடிச் சொந்தக்காரர் 

கிரமமாய் முன்னே வந்து 

பெட்டிகள் பெற்றுப் போனார்….”  என்று வருகிறது. இங்கே பொன்னு எனும் பொன்னம்மா தனது மச்சாள் கனகம் எனும் கனகம்மாவை “வாகா! வா!” என்று வாஞ்சையோடு வரவேற்கிறாள். 

மேலும், அமரர் பண்டிதர் வி.சீ.கந்தையா தனது மேற்படி நூலில் எலுவன், எல்லா, ஏலா என்ற பண்டைய விளிப்புப் பெயர்களின் திரிபான ‘இல’ என்பதுடன் ‘கா’ என்ற அசை சேர்ந்து ‘இலக்கா’ எனும் விளிப்புப் பெயராகியும் மட்டக்களப்பு மாநிலக் கிராமங்களிடையே வழங்கி வருவதையும் எடுத்துக் கூறியுள்ளார்.  

மட்டக்களப்பு மாநிலக் கிராமங்களிலே பெண்கள் ஒருவரையொருவர் விளிக்கும்போது ‘இலக்கா’- ‘இலக்கோ’ – ‘லக்கா’ – ‘லக்கோ என அழைப்பதைக்காது குளிரக் கேட்கலாம். 

பெண்கள் பெண்களை விளிக்கும்போது மட்டுமல்ல ஆண்களை விளிக்கும்போது கூட இந்த ‘கா’ அசைச்சொல் வருவதுண்டு. அதுபோல் ஆண்கள் பெண்களை விளிக்கும்போதும் இக் ‘கா’ வருவதுண்டு. ஆண்கள் ஆண்களை விளிக்கும்போது பெரும்பாலும் வயதானவர்கள் நாவிலும் இக் ‘கா’வரும் வழக்குண்டு. மட்டக்களப்பு மாநில நாட்டுப் பாடல்களிலே இக் ‘கா’ நர்த்தனமிடுவதைப் பார்க்கலாம். 

காதலி தன் காதலனைச் – மச்சானை- சந்திக்க வருமாறு இப்படி அழைக்கிறாள். 

சந்தன மரத்த மச்சான்சந்திக்கவேணுமெண்டா 

பூவலடிக்கு மச்சான் பொழுது பட வந்துடுகா”. (பூவல் = கிணறு) 

தனது காதலனின்- மச்சானின் அழகில் மயங்கிய காதலி மச்சானைப் பார்த்து, 

வட்ட முகமும் உண்ட வடிவிலுயர் மூக்கழகும்  

கட்டு உடலும் மச்சான் என் கருத்தழியச் செய்யுதுகா.” என்கிறாள்.  

அதேபோல் காதலன் தன் காதலியிடம், 

குஞ்சு முகமும் உண்ட கூர் விழுந்த மூக்கழகும் 

நெற்றி இளம்பிறையும் கண்ணே நித்திரையில் தோணுதுகா.” என்கிறான். 

களவொழுக்கச் சம்பவமொன்று இங்கே ஒருவரால் இன்னொருவருக்குச் சங்கேத மொழியில் அல்லது குறியீட்டுப் பாணியில் செய்தியாகச் சொல்லப்படுகிறது. 

வில்லுக்கு வந்து கொம்பன் விடியளவும் புல்லருந்திக் 

கல்லில் முதுகுரஞ்சிக் கொம்பன் காடேறிப் போகுதுகா.  

வயற்காட்டில் தங்கியிருக்கும் தன் கணவனுக்கு இங்கே ஊரில் – வீட்டில்- தன் மகள் சமைந்த செய்தியை ஆதம் காக்கா மூலம் (முஸ்லீம்கள் தமையனைக் ‘காக்கா’ வென்று அழைப்பார்கள்) சொல்லியனுப்புகிறாள் ஒரு பெண். 

ஆதங்காக்கா!ஆதங்காக்கா!                                                                                                                                                     அவரைக் கண்டாச் சொல்லிடுகா

பூவரசம் கன்னியொண்டு பூ மலர்ந்து போச்சிதெண்டு” 

குமரிப் பெண்ணொருத்தி குடத்தில் தண்ணீர் மொள்ளுவதைக் கண்ட ஒருவர் இன்னொருவருக்கு அதை எடுத்துச் சொல்வதை 

பூவலைக் கிண்டி புதுக்குடத்தக் கிட்ட வச்சு

ஆரம் விழுந்த கிளி அள்ளுதுகா  நல்லதண்ணி 

எனும் நாட்டுப்பாடல் நவில்கிறது. 

முறை மச்சாளை விளித்து மச்சான் கூறும் கூற்று இது. 

தாலிக்கொடியே!- எண்ட 

தாய்மாமனீண்ட கண்டே 

மாமிக்கொரு மகளே – மச்சி 

மறுகுதல பண்ணாதகா”  

இங்கேயும் ‘கா’ களிநடனம் புரிகிறது. 

மட்டக்களப்பு மாநிலக் கிராமங்களில், 

“நெல்லுருக்குதாகா”….. என்று நெல்லு வாங்கும் பெண்கள் கூவிக் கேட்க, “இருக்குது வாகா……” என்று கொடுப்பார் கூவி அழைப்பர். நெல் இல்லையென்றால் “இல்ல கா….” என்று பதில் கொடுப்பர். 

”புள்ளலெக்கா புள்ளலெக்கா -உன்ர 

புருசனெங்க போனதுகா 

கல்லூட்டுத் திண்ணையில 

கதபழகப் போனதுகா” 

என்று நாட்டுக் கவி வழக்கில் ‘கா’ முன்னிலைக்கேற்ற அசையாகி இரு பெண்களின் கேள்வியும் பதிலுமாக அமைந்திருக்கும். 

இவ்வாறு பேச்சு வழக்கிலும் – ஏடறியா வாய்மொழி இலக்கியமான நாட்டுப் பாடல்களிலும் – எழுத்திலக்கியங்களிலும் ‘கா’ மட்டகளப்பு மாநிலத்திலே மவுசுடன் விளங்குகிறது. 

இங்கெல்லாம் அதாவது இதுவரை கூறப்பட்ட உதாரணங்களிலெல்லாம் அசைச் சொல்லாக அணிசேர்க்கும் ‘கா’ இன்னொரு சந்தர்ப்பத்தில் பெயர்ச் சொல்லாகவும் வரும். அது என்னவென்றுபார்ப்போம். 

‘கா’ பெயர்ச் சொல்லாக வரும் சந்தர்ப்பம் என்னவெனில், பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் சுமந்து செல்வதற்கு, முறியாமல் நன்கு வளையக்கூடிய மரக்கம்பு ஒன்றைத் தோளின் குறுக்காக வைத்து அந்தக்கம்பின் இரு அந்தங்கங்களிலும் பொருட்களைக்கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே தமது தோளில் காவிச் செல்லும் இப் பொறியைக் ‘கா’ என அழைப்பர். ‘கா’ என்பது இப் பொறியோடு சேர்த்துக் கொண்டு செல்லப்படும் பொருட்களையும் உள்ளடக்கியதாயிற்று. கல்யாணம் கேட்டுப் போகும் போதும் பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு இக் ‘கா’ கொண்டு செல்வர். இக்காவில் தயிர், வாழைக்குலை போன்ற பொருட்களெல்லாம் உள்ளடங்கும். 

முன்பு கூறப்பெற்ற “விளைச்சல்” என்னும் குறுங்காவியத்திலே பெண் வீட்டார் மாப்பிள்ளைவீட்டாருக்குக் ‘கா’ கொண்டு செல்லும் காட்சி இவ்வாறு பதிவாகியிருக்கிறது. 

” கொழுக்கட்டைப்பெட்டிபின்னால் 

குலையுடன் கோழிச்சூடன் 

முழுக்கட்டை போல வெள்ளை 

மொந்தனும் தயிரும் காவில்…”

இங்கே கோழிச்சூடன் என்பது பறங்கி வாழைப்பழமாகும். வெள்ளை மொந்தன் என்பது கறி வாழைக்காயின் இன்னொருவகை. அத்துடன் தயிரும் காவில் கொண்டு செல்லப்படுகின்றன. 

இதைத்தான் மட்டக்களப்பு மாநிலத்தின் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், 

“ஆடவர் தோளிலும் கா 

அரிவையர் நாவிலும் கா 

என்று கூறுவர். ஆடவர் தோளிலே ‘கா’ பெயர்ச் சொல்லாகவும் அரிவையர் நாவிலே ‘கா’ அசைச் சொல்லாகவும் கம்பீரமாக வீற்றிருக்கிறது.  

தோளிலே காவிச் செல்வதால்தான் ‘காவடி’ எனப் பெயர் வந்தது எனக் கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டுமுள்ளார். கவிஞர் காசிஆனந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாநிலத்தைச் சேர்ந்தவரென்பதால் ‘கா’ அவரைக் கவர்ந்திருக்கிறது. ‘கா’வை அருகிவிடாமல் அடுத்த சந்ததிக்கும் காவிச்செல்வோமாக.