மரியாதைக்கு செய்ய கூடிய முஸ்லிம் தலைவர்கள் இன்று இல்லை!

கேள்வி:- உங்கள் குடும்பத்தின் அரசியல் பின்னணி என்ன?
பதில்:- எனது தந்தை கே. கே. மரைக்கார். பெயர் எடுத்த முன்னணி வர்த்தகர். இவர் கல்முனை பட்டினசபை தலைவராக விளங்கினார். சுயேச்சையாக தேர்தல் கேட்டு வென்றிருந்தார்.. இவருடைய காலத்தில் கல்முனை பல துறைகளிலும் செழித்து காணப்பட்டது. இவரே எனக்கு முன்னுதாரணம் ஆவார்.

தமிழர்களுக்கென்றோர் ஒழுங்கான அரசியல் பாரம்பரியம் உள்ளது, இதனால்தான் எல்லோரும் ஐயா என்று எழுந்து நின்று மரியாதை செய்ய கூடிய தமிழ் தலைவர்கள் இன்னமும் உள்ளனர், உதாரணமாக சம்பந்தர் ஐயாவை சொல்லலாம், ஆனால் எழுந்து நின்று எல்லோரும் மரியாதை செய்ய கூடிய அளவில் முஸ்லிம் தலைவர்கள் ஒருவரும் இன்று இல்லை என்று கல்முனை வர்த்தகர் சங்க தலைவர் ஷாபி ஹாத்திம் எமக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-
கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் உங்கள் சகோதரர் ஆவார். அதை தணிக்கை செய்து விட்டீர்களே?
பதில்:- சகோதரர் என்கிற அழகான உறவு அவருக்கும், எனக்கும் என்றென்றும் உள்ளது. ஆனால் அவருடைய அரசியலில் எனக்கு நாட்டமும் இல்லை. சம்பந்தமும் இல்லை. இன்னும் தெளிவாக சொன்னால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எந்தவொரு விடயத்திலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதன் நடவடிக்கையில் ஆரம்பம் தொட்டே திருப்தி இல்லை.

கேள்வி:- உங்கள் சகோதரரால் அண்மையில் வெளியிடப்பட்ட தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் நூல் குறித்து உங்கள் கருத்து என்ன?
பதில்:- தாருஸ்ஸலாம் மறைக்கப்படாத உண்மைகள் நூலை நான் பார்வையிடவில்லை. அதே நேரம் அதற்கு முன்னர் வந்த தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட மர்மங்கள் நூலையும் பார்வையிட்டு இருக்கவில்லை. தாருஸ்ஸலாம் சொத்துக்கள் கையாடப்பட்டது குறித்த அறிவு எனக்கு ஏற்கனவே உள்ள நிலையில் படித்து அறிய வேண்டிய தேவை கிடையாது.

கேள்வி:- தேசிய அரசியலில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்:- நான் தேசிய அரசியலில் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்கின்றேன். ஏனென்றால் அவர்களிடம் கொள்கை பற்று, தூர நோக்கு, இலட்சியம் ஆகியன உள்ளன. மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் இல்லாமல் செய்யப்பட்டது இறைவனின் தீர்ப்பு ஆகும். ஏனென்றால் அவர்கள் யுத்த வெற்றியை வைத்து கொண்டு தனிப்பட்ட நபர்களை பழி வாங்குகின்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்துள்ள மைத்திரி – ரணில் அரசாங்கம் முன்னோக்கி செல்ல முடியாமல் கையாலாகாத்தனத்தில் உள்ளது என்பது வேறு விடயம் ஆகும்.

கேள்வி:- முஸ்லிம் அரசியல் குறித்த உங்கள் அவதானம் என்ன?
பதில்:- ஒரு நல்ல ஆன்மீகவாதி ஒரு நல்ல அரசியல்வாதியாக விளங்குவான் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும். இதற்கு இஸ்லாமிய வரலாற்றில் மிக சிறந்த உதாரணமாக ஹலிபா உமர் ரலி அவர்கள் விளங்குகின்றார். நீதிக்கும், நேர்மைக்கும் பெயர் போன இவருடைய ஆட்சி காலம் உண்மையில் பொற்காலமாக காணப்பட்டது. இயற்கைகூட இவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு நடந்தது.
ஆனால் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகளில் அநேகர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தும் ஆசைகளுக்கு அடிமைப்பட்டு காணப்படுகின்றனர். எனவே சமுதாய நோக்குடைய புத்திஜீவி இளையோர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அரசியல் கட்சி ஒன்றில் உறுப்பினராக இருப்பதை விட அவ்வாறான இயக்கம் ஒன்றில் செயற்பாட்டாளராக, ஆலோசகராக இருக்க விரும்புகின்றேன். கிழக்கின் எழுச்சி இயக்கத்தின் நடவடிக்கைகளை மிக நெருக்கமாக அவதானித்து வருகின்றேன்.
இன்றைய முஸ்லிம்களின் அரசியலை பார்க்கின்றபோது முட்டாள்களான மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற அயோக்கியர்கள்தான் அரசியல்வாதிகள் என்கிற வாசகம்தான் என் நினைவில் நிற்கின்றது
ரவூப் ஹக்கீம், பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி, ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அதாவுல்லா போன்றவர்களால் முஸ்லிம் சமூகத்துக்கு தலைமை தாங்க முடியாது.
ஆயினும் ரிசாத் பதியுதீன் மீது ஓரளவு நல்ல அபிப்பிராயம் எனக்கு உள்ளது. ஏனென்றால் வடக்கில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீளெழுச்சிக்காக தனியொருவராக பாடுபடுகின்றார். அதற்காக அவரின் எல்லா விடயத்திலும் எனக்கு உடன்பாடு என்று இல்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்புக்கு நல்ல பக்கம் ஒன்றும் உள்ளது. ஆளுமையும், திறமையும் உடையவராக விளங்கினார். நய வஞ்சகத்தின் இன்னொரு பெயர்தான் இராஜதந்திரம் அல்லது சாணக்கியம். அந்த வகையில் ரவூப் ஹக்கீம் ஒரு சாணக்கியன்தான்.
ரவூப் ஹக்கீமின் பிழையான தலைமைத்துவத்துக்கு ஒரு காலத்தில் துணையாக இருந்து விட்டு இப்போது வெளியில் நின்று நல்ல பிள்ளைகள் போல பேசுகின்ற பஷீர் சேகுதாவூத், ஹசன் அலி போன்றோர் மக்கள் முன்னிலையில் அரசியல் குற்றவாளிகள் ஆவர்.
என்னை பொறுத்த வரை முன்னாள் அமைச்சர் ஏ. ஆர். மன்சூருக்கு பிற்பாடு நல்ல ஒரு முஸ்லிம் தலைவர் பிறக்கவே இல்லை.
கல்முனை வீரம் விளைந்த மண். கிழக்கிலங்கையில் நாகரிகத்தின் கருவூலமாக கல்முனை மண் வரலாற்றில் அறியப்பட்டது. இம்மண்ணுக்கு உரியவர்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள். எனவே இம்மண்ணில் இருந்துதான் உண்மையான முஸ்லிம் தலைவன் பிறப்பெடுக்க முடியும்.

கேள்வி:- கிழக்கு மாகாண சபை ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?
அவிவேக பூரண குருவும், முட்டாள் சீடர்களும் என்கிற பரமார்த்த குரு கதைதான் கிழக்கு மாகாண சபை ஆட்சியை பார்க்கின்றபோது என் நினைவில் உள்ளது. கோமாளி கூத்து நடக்கின்றது. நான் தமிழர்களின் ஆட்சியை இங்கு சொல்லவில்லை.

கேள்வி:- உங்கள் பார்வையில் கல்முனை மண்ணின் இன்றைய நிலை என்ன?
பதில்:- ஒரு காலத்தில் இலங்கையின் தலை சிறந்த மூன்று நகரங்களில் ஒன்றாக கல்முனை விளங்கியது. ஆனால் இன்று நாட்டின் மிக மோசமான நகரம் ஆகி உள்ளது. நாட்டின் மிக மோசமான சந்தையை பார்க்க வேண்டுமானால் கல்முனை சந்தைக்கு வாருங்கள். மாநகர சபையின் நடவடிக்கைகள்கூட ஒழுங்காக நடப்பதில்லை.
கல்முனை மண் திட்டமிடப்பட்ட வகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளால் பாழடிக்கப்பட்டு உள்ளது என்பதே உண்மை ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டு இம்மண் திட்டமிடப்பட்ட வகையில் சிதைக்கப்படுகின்றது. கல்முனை முஸ்லிம் மக்கள் அரசியல் விழிப்பூட்டல் பெற கூடாது என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் அவதானமாக உள்ளனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இன்றைய பிரதி அமைச்சர் ஒருவரின் வீட்டில் சாதாரண பணியாளாக அன்று வேலை பார்த்த ஒருவரே கல்முனை மாநகர சபையின் முதலாவது மேயராக நியமிக்கப்பட்டார் என்பதை உதாரணத்துக்கு இங்கு சுட்டி காட்ட முடியும். அவரை விட தகுதியும், தகைமையும் உடைய பலர் இருந்தபோதும் அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் கல்முனை முஸ்லிம் மக்கள் அரசியல் விழிப்புணர்வு அடைகின்ற பட்சத்தில் இங்கிருந்து புதிய அரசியல் கலாசாரம் ஒன்று தோற்றம் பெற்று விடும். உண்மையான தலைவன் தோற்றம் பெற்று விடுவான்.

கேள்வி:- கல்முனை மாநகர சபை மேயராக இம்மண்ணை சேர்ந்த நிசாம் காரியப்பர் விளங்கி உள்ளாரே?
பதில்:- அவர் கல்முனை மாநகர சபை தேர்தலுக்கு நின்றபோது எமது மக்களிடம் புதிய உற்சாகம், உத்வேகம் ஆகியன தோன்றின. எமது மண்ணின் மைந்தன், படிப்பாளி, அறிவாளி, கொழும்பில் வாதாடுகின்ற சட்டத்தரணி, அஷ்ரப்பின் உறவினர் தேர்தல் கேட்கின்றார், இவரை முதலில் மேயர் ஆக்க வேண்டும், பிற்பாடு நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும், பின்னர் அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக்க வேண்டும் என்று எமது மக்கள் கனவு காண தொடங்கினர். பெண்கள்கூட அதீத ஆர்வத்துடன் தேர்தலில் முண்டி அடித்து வாக்களித்தனர்.
முதலில் அவர் பிரதி மேயராகவும், பிற்பாடு மேயராகவும் செயற்பட்டார். ஆனால் அவர் இக்கால பகுதிகளில் கொழும்பில் இருந்த நாட்களே அதிகம். கல்முனை வரலாற்றில் மிக மோசமான மேயர் இவர்தான் என்று நினைக்கின்றேன். பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அவரை சார்ந்த மக்களை முன்னேற்றுவதில் வெற்றி கண்டார் என்பதற்காக அவரை நான் மதிக்கின்றேன்.

கேள்வி:- கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிட இருந்தீர்களே?
பதில்:- காலமும், நேரமும் கை கூடுகின்றபோது நான் நிச்சயம் அரசியலில் ஈடுபடுவேன். அதற்கான வேளை நெருங்குகின்றது என்று நினைக்கின்றேன். இருப்பினும் அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னர் சில கேள்விகளுக்கு நான் விடைகள் காண வேண்டி உள்ளது.

கேள்வி:- தமிழர்களின் அரசியல் குறித்து என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்:- தமிழர்களுக்கென்றோர் ஒழுங்கான அரசியல் பாரம்பரியம் உள்ளது. இதனால்தான் எல்லோரும் ஐயா என்று எழுந்து நின்று மரியாதை செய்ய கூடிய தமிழ் தலைவர்கள் இன்னமும் உள்ளனர். உதாரணமாக சம்பந்தர் ஐயாவை சொல்லலாம். ஆனால் எழுந்து நின்று எல்லோரும் மரியாதை செய்ய கூடிய அளவில் முஸ்லிம் தலைவர்கள் ஒருவரும் இன்று இல்லை.

கேள்வி:- தமிழ் – முஸ்லிம் உறவை மேம்படுத்த என்ன செய்யலாம்?
பதில்:- என்னை பொறுத்த வரை நான் ஒரு தமிழன், ஏனென்றால் எனது மொழி தமிழ். ஆனால் எனது தர்மம் இஸ்லாம் ஆகும். இந்த உண்மையான நிலை முஸ்லிம்களிடம் ஏற்பட வேண்டும். அதே போல முஸ்லிம்கள் மீது தமிழ் மக்களும் உச்ச பட்ச நம்பிக்கை வைத்து செயற்பட வேண்டும்.

கேள்வி:- அரசியலில் முஸ்லிம் பெண்கள் ஈடுபடலாமா?
பதில்:- இஸ்லாமிய கலாசாரம், பாரம்பரியம் ஆகியவற்றை விட்டு கொடுக்காத வகையில் முஸ்லிம் பெண்கள் அரசியலில் நிச்சயம் ஈடுபட முடியும். உலக அளவில் இதற்கு நல்ல முன்னுதாரணமாக ஈரான் விளங்குகின்றது. அமெரிக்காவிலும் முஸ்லிம் பெண்கள் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இலங்கையை பொறுத்த வரை மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய அஞ்சன் உம்மாவை என்னால் மிக நல்ல உதாரணமாக சொல்ல முடியும்.
ஆனால் இப்போதைய சூழலில் மக்கள் விடுதலை முன்னணியில் போய் அரசியல் செய்ய முடியும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போய் பெண்கள் அரசியல் செய்ய கூடாது.

Attachments area