வடக்கு முதல்வர் வினோத செயல்!?.

வடக்கு முதல்வர் மீது தமக்கு நம்பிக்கையும் தமது தொடர் ஆதரவும் இருப்பதாக ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவித்து அதில் கையொப்பம் இட்டவர்களில் 15வது பெயரும் கையொப்பமும் சாட்சாத் வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் அவர்களுடையதே.


ஆங்கிலத்தில் உள்ள அந்த கடிதத்தின் சாராம்சம் கீழ்வருமாறு.

கீழே கையொப்பம் இட்டுள்ள நாம் உங்களுக்கு எழுத்துமூலம் அறியத்தருவது எமது முதலமைச்சரான கௌரவ நீதியரசர் விக்னேஸ்வரனை தொடர்ந்தும் நாம் ஆதரிக்கிறோம் என்றும் பதவியில் உள்ள முதல் அமைச்சர் தொடர்ந்து பணியாற்ற எமது பெரும்பான்மையினரின் தொடர் ஆதரவு அவருக்கு உண்டு என்பதையும் சிறீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு அரசியல் அமைப்பின் 154 F (4) பிரிவின் படியான அதிகாரத்தை அவர் கொண்டுள்ளார் என்பதையும் அறியத்தருகிறோம்.

இதன்படி தான் தொடர்ந்து முதல்வர் பதவி வகிக்க தனது ஆதரவு தனக்கு உண்டு என்று முதல்வரே கையொப்பம் இட்ட செயல் வினோதம் அல்லவா? எப்படியோ கூட்டு களவாணிகள் கூடி கும்மியடித்து விடயம் முடிவுக்கு வரும்போல தெரிகிறது. இதில் இன்னும் ஒரு சம்பிரதாயம் மீறிய செயலும் இடம் பெற்றது.
பொதுவாக யார் மீதாவது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதானால் அதை சபை தலைவரிடம் தான் கையளிக்க வேண்டும். மாறாக இங்கு சபை தலைவர் சி வி கே சிவஞானம் தானே ஆளுநரிடம் கையளித்தார். ஒருவேளை ஆளுநர் முதல்வரிடம் பெரும்பான்மையை நிரூபிக்க சொன்னால் யார் தலைமையில் சபை நடவடிக்கையை முன் எடுப்பது?
காரணம் சபை தலைவர் பக்கசார்பாக ஏற்க்கனவே செயல்ப்பட்டுவிட்டார். தவிரவும் இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை சபையில் முன்வைக்க பட்டிருந்தால் முதல்வர் இது கொழும்பின் சதி என புரணிபாடி தன்னை நியாயப்படுத்தி இருக்க முடியாது. நடந்த ஊர்வலங்களும் மக்களுக்கு சிரமம் ஏற்ப்படுத்திய ஹர்த்தாலும் நடந்தேறியிராது.
கடைசியில் நடந்தது என்ன? தேரை இழுத்து தெருவில் விட்டு தென்னிலங்கை வரை நாறிய பின் மத தலைவர்கள் மத்தியஸ்த்தம் செய்த பின் ஏற்க்கனவே மக்கள் பணத்தில் 24லட்சம் விசாரணைக்கு என செலவிட்டது போக மேலும் 24 லட்சம் மக்கள் பணம் வீணாக போகிறது. ஊரன் வீட்டு நெய்தானே என அள்ளி இறைக்கட்டும்.
மாற்றம் வரும் என நம்பி வாக்களித்த மக்கள் நாக்கு வழிக்க தென்னோலை ஈக்கிலை தேடட்டும். அடுத்த தேர்தலில் புதிய மொந்தையுடன் வருவார்கள். வீட்டுக்கோ அல்லது சென்ற பொது தேர்தலில் முதல்வர் அறிக்கை விட்டது போல வீட்டுக்கு வெளியே வந்து சயிக்கிளுக்கோ வாக்கு போட்டு வெறும் வாயை மெல்ல வேண்டியது தான்.
“அது எப்பவோ முடிந்த காரியம்”. – யோகர் சுவாமிகள் –
(குருப்பிரமா குருவிஸ்ணு குருதேவோ மகேஸ்வரா குரு சாட்சாத் பரப்பிரம்மா குருவே நமக. வடக்கு முதல்வர் சொல்லும் சுலோகம்)

– ராம் –