மீன்பிடிப் பிரச்சினையும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் அரசியலும்

இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையிலான மோதல், மீகநீண்ட காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும், பல உயிர்களையும் பலிவாங்கிய துர்ப்பாக்கியம் என்பதில், யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

ஆனால், எல்லாவற்றுக்கும் இனச்சாயம் பூசும் அரசியலை, அரசியலில் இலாபமீட்டும் அரசியல்வாதிகள் செய்வதே அசிங்கமானது எனும் போது, பல்கலைக்கழக மாணவர்களும் அத்தகைய அறிவுத் தன்மையோடு, இயைபுறாத சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுப்பது, கவலைக்கு மட்டுமல்ல கண்டனத்துக்கும் உரியது.

அந்த அறிக்கையின் கடைசிப் பந்தியில்,‘முகங்களைத் துணிகளால் மூடியவாறு, எல்லைதாண்டும் இந்திய மீனவர்கள், நமது தாயக மீனவர்களது வலைகளை அறுக்கின்ற சம்பவங்களும், அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்பிலும் எழுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில், தமிழ்நாடு அரசு கூரிய கவனம் செலுத்தவேண்டுவதோடு…’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இங்கு, துணிகளால் மூடியவாறு எல்லைதாண்டும், தமிழ்நாட்டிலிருந்து வரும் இந்திய மீனவர்கள் யார்? தமிழர்கள். அவர்கள், வலையை அறுத்து வயிற்றிலடிக்கும் இலங்கையின் வடக்கைச் சார்ந்த மீனவர்கள் யார்? தமிழர்கள். இதுதான் உண்மை!

மிகநீண்ட காலமாக, இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக, இலங்கை மீனவர்கள், குறிப்பாக வடக்கைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள், கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் கூட, இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலால் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு கோரி, முல்லைத்தீவில் கடற்றொழில் அமைப்புகளும் மீனவர்களும் இணைந்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேதினம், யாழ்ப்பாணத்திலும் யாழ். மாவட்ட கடற்றொழில் அமைப்புகளும் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

தம்மக்கள் மீது, அதீத அக்கறையும் இனப்பற்றும் கொண்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு, வட மாகாணத் தமிழ் மீனவர்களின் இந்தப் போராட்டங்கள் கண்ணிற்படவில்லைப் போலும். இத்தகைய போராட்டங்களை, வடமாகாணத் தமிழ் மீனவர்கள் பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். ஆனால், அவர்களுடைய வலைகள் அறுக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவர்கள் வயிற்றில், இந்தியத் தமிழ் மீனவர்கள் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, இது இனப்பிரச்சினை அல்ல; இது வளப் பிரச்சினை; இது தொழில் பிரச்சினை.

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், அவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்பதாலேனும், இந்தப் பிரச்சினை பற்றித் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய அவசியப்பாடு இருக்கிறது. இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படையினருக்கும் இடையேயான பிரச்சினை என்பது, வெறும் எல்லை தாண்டும் பிரச்சினையாக மட்டும் பார்க்கப்பட வேண்டியதொன்றல்ல. சில அரசியல்வாதிகள், குறிப்பாக இலங்கையிலும், தமிழகத்திலும் உள்ள தமிழ் அரசியல்வாதிகள், இதை இனவாதப் பிரச்சினையாக உருவகப்படுத்துகிறார்கள்.ஆனால், இது வளப் பிரச்சினையாகவும் தொழிற்பிரச்சினையாகவும் சூழலியல் பிரச்சினையாகவும் அணுகப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

இலங்கைக் கடலுக்குள் அத்துமீறி உள்நுழையும் பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள், ‘ட்றோலர்’ எனப்படும் இழுவைப் படகுகளாக இருக்கின்றன. இழுவை மீன்பிடி முறையால் மீன்வளத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி, பலரும் பலமுறை எடுத்துரைத்து இருக்கிறார்கள்.

கடலடி வரையான இழுவை மீன்பிடி (bottom trawling) என்பது, ஓர் அழிவுகரமான, தொழில்மயமாக்கப்பட்ட மீன்பிடித்தல் முறையாகும். இதில், பெரிய படகுகள் கடலடிவரை பரவும் பாரிய வலைகளை இழுத்துச் செல்கின்றன, அவற்றின் பாதையில் உள்ள அனைத்தையும் கண்மூடித்தனமாக இந்த வலைகள் அள்ளிச் செல்லும். இதன் விளைவாக, அந்த வலைக்குள் சிக்கும் பெரும்பாலானவை, உண்ணக்கூடிய மீன்களாக மட்டும் இருப்பதில்லை. மாறாக, மீன் குஞ்சுகள், பவளப்பாறைகள், பிற கடல்வாழ் உயிரினங்களும் அடங்கும். அவற்றில் பெரும்பாலானவை, மீண்டும் கடலில் குப்பைகளாக வீசப்படுகின்றன.

2015இல், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஆ. சுமந்திரனால், தனிநபர் சட்டமூலமாக முன்மொழியப்பட்ட கடலடி வரையான இழுவை மீன்பிடியைத் தடைசெய்யும் சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள், 2017இல் 1996ஆம் ஆண்டின் மீன்பிடி மற்றும் நீர்வளச் சட்டத்துக்கான திருத்தச் சட்டமூலமாக அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, இலங்கையில் கடலடி வரையான, இழுவை மீன்பிடி தடைசெய்யப்பட்டது.

இந்தத் தடைச் சட்டத்தை, வடக்கு மாகாண மீனவர்கள் வரவேற்றிருந்தார்கள். இந்தத் தடையை அதிகம் வேண்டியவர்களும் அவர்கள்தான். இந்தத் தடையானது, வட மாகாணத் தமிழ் மீனவர்களின் வெற்றி என்றுதான் சொல்லப்பட வேண்டும்.இழுவை மீன்பிடியை, இலங்கை, சிலி, ஹொங்கொங் ஆகிய நாடுகள் முற்றாகவும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே உள்ளிட்ட நாடுகள் பகுதியளவிலும் தடைசெய்துள்ளன. மீனவளத்தையும் கடல்வளத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதில் இந்தத் தடை மிக முக்கிய படியாகிறது.

இந்திய இழுவைப்படகுகள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைவது என்பது, வெறும் ஆட்புல இறைமை சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல; அல்லது, இலங்கையின் மீன்வளத்தைக் களவாடும் பிரச்சினை மட்டுமல்ல; மாறாக, அது இலங்கையின் மீன்வளத்தையும் கடல் வளத்தையும் சுற்றுச்சூழலையும் அழிக்கும் ஒரு பாரதூரமான பிரச்சினை.

இலங்கையின் வடக்கிலுள்ள மீன்வளமும் கடல் வளமும் சுற்றுச்சூழலும் அழிந்தால், அதனால் முதலாவதாகவும், அடிப்படையாகவும் பாதிக்கப்படப்போவது வட மாகாணத்தில் பெரும்பான்மையாகவுள்ள தமிழ் மீனவர்கள் என்பதுதான் உண்மை.
இலங்கையின் சட்டம், அத்துமீறி அந்நிய நாட்டவர் இலங்கைக்குள் நுழைவதைத் தடைசெய்கிறது. இலங்கையின் சட்டம், கடலடி வரையான இழுவை மீன்பிடியைத் தடைசெய்கிறது. ஆகவே, இந்த இரண்டையும் செய்பவர்கள், யாராக இருந்தாலும், இலங்கையின் சட்டமும் அதனை நடைமுறைப்படுத்தும் அரச இயந்திரமும் நடவடிக்கை எடுக்கவேண்டும்; எடுக்கத்தான் செய்யும்.

இலங்கையின் அரச இயந்திரம் எந்த நடவடிக்கையும் எடுக்காவிட்டால், அதனால் முதலாவதாகவும் அடிப்படையாகவும் பாதிக்கப்படப்போவது வட மாகாணத் தமிழ் மீனவர்கள்தான். ஆகவே, எல்லாவற்றுக்கும் இனச்சாயம் பூசி, இனவாத அரசியல் கண்கொண்டு பார்க்க வேண்டிய அவசியமில்லை.

உலக நாடுகளில், இந்தியா 18ஆவது மிகப் பெரிய தனியுடமை பொருளாதார வலயத்தை, கடற்பரப்பில் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், இலங்கையின் கடற்பரப்பிலும், இந்தியர்கள் அத்துமீறி நுழைவது எந்தவகையிலும் நியாயப்படுத்தக்கூடிய ஒன்றல்ல.

மறுபுறத்தில், இலங்கைக் கடற்படை, அப்பாவி மீனவர்களைச் சுட்டுக்கொல்லத் தேவையில்லை என்று கருத்திலும் நிறைய நியாயங்கள் இருக்கின்றன. ஒரு நாட்டுக்குள் அத்துமீறி நுழைபவனைச் சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது காட்டாட்சியில் மட்டும் காணப்படும் நீதியாகும்.

ஆனால், இந்திய மீனவர் பிரச்சினையில், தமது மீனவர்களைப் பாதுகாக்க, இந்தியா செய்ய வேண்டிய விடயங்கள் நிறையவே இருக்கின்றன. இந்தியாவிடம் மிகப் பலமான கடற்படையும் கரையோர பாதுகாப்புப் படையும் இருக்கிறது. இவற்றின் உதவியுடன், இந்திய மீனவர்கள் எல்லைதாண்டுவதைத் தடுக்க, இந்தியா பொருத்தமான உபாயங்களைக் கையாள வேண்டும். தன்னுடைய குடிமக்களின் உயிரைப் பாதுகாக்கும் முதற்பொறுப்பும், இந்திய அரசுக்கானது.

பல்கலைக்கழகம் என்பது, சிந்தனைக்கான வௌியாக இருக்க வேண்டும். பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சமூகப் பொறுப்பு, அரசியல் வகிபாகம் ஆகியவை இருக்கின்றன என்பது உண்மை. ஆனால், அவை அறிவின் பாற்பட்டனவாக இருக்கவேண்டும்.

காலங்காலமாக அரசியல்வாதிகள் வகுத்துத் திணித்த அதே இனவாத அரசியலைக் கண்ணை மூடிக்கொண்டு சுவீகரிப்பதற்குப் பல்கலைக்கழகமும் பட்டங்களும் தேவையில்லை. பல்கலைக்கழக மாணவர்கள், ‘எடுப்பார் கைப்பிள்ளை’களாகவும் சொன்னதையே திரும்பச் சொல்லும் ‘கிளிப்பிள்ளை’களாகவும் இருப்பதை விடுத்து, அறிவின்பாலான சிந்தனை உடையவர்களாகவும், அதனூடாகத் தமது சமூகத்துக்கான சரியான வழிகளை, அவை பிரபல்யமற்றவையாக இருப்பினும்கூட, அவற்றைத் துணிவோடு முன்வைப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஒன்பதாம் வகுப்புப் படித்தவனுக்கும், பல்கலைக்கழகத்தில் படிப்பவனுக்கும் அறிவின் முதிர்ச்சியில் வேறுபாடு இல்லையென்றால், இந்தப் பல்கலைக்கழக முறையில் ஏதோ அடிப்படைத் தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தமாகிறது. மாணவர்கள் சிந்திப்பார்களாக!