மோடி ஏன் கைவிடப்பட்டார்?

மக்களவைத் தேர்தலுக்கு ஆறே மாதங்கள் இருக்கும் நிலையில், ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜகவைக் கலங்கடித்திருக்கின்றன. மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, ஆட்சிக்கு எதிரான மக்களின் மனநிலையைக் குறைத்து மதிப்பிட்டுவிட்டது. உளவுத் துறையின் அறிக்கை, தேர்தல் கணிப்பாளர்களின் கணிப்புகள் இவற்றுக்கெல்லாம் பிறகு, நிலைமையைக் கட்சி உணர்ந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

பொருளாதாரம் எவ்வளவு மோசமாக மக்களைப் பாதித்துக்கொண்டிருக்கிறது என்பதை மோடி அரசு உணரவே இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நடந்த உத்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தலில் பாஜக 312 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. உண்மையில், அப்போது தேச நன்மைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பணமதிப்பு நீக்கத்துக்கு பாஜகவினர் முன்வைத்த காரணங்களை உண்மை என்று நம்பிய ஏழை மக்கள், அதைப் பொறுத்துக்கொண்டனர். ஆனால், நிலைமை சீராகாததும், கருப்புப்பண ஆதிக்கத்தில் அது பெரிய மாற்றத்தை உருவாக்காததும் மக்களிடம் நாளடைவில் அதிருப்தியை உண்டாக்கியது. தொடர்ந்து, ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளூர் பொருளாதாரத்தை மேலும் சிதைத்தது.

மக்களின் கோபம் ஜனவரி முதல் நவம்பர் வரை நடந்த இடைத்தேர்தல்களில் வரிசையாக எதிரொலித்தது. ஏழு மாநிலங்களில் மக்களவை, சட்ட மன்றத் தொகுதிகளுக்கு நடந்த 13 இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் மூன்று இடங்களிலும், காங்கிரஸின் கூட்டணிக் கட்சிகள் ஐந்து இடங்களிலும் வென்றன. பாஜகவுக்கு இரண்டே இடங்களே கிடைத்தன. சங்கப் பரிவாரங்கள் தொடர்ந்து மதவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். ‘பசுகுண்டர்கள்’ ஏற்படுத்திய மோசமான விளைவு, கால்நடை வளர்ப்பில் பெரும் பாதிப்பானது. இறைச்சி ஏற்றுமதியிலும் சரிவு ஏற்பட்டது. ஏற்கெனவே சரிந்திருந்த கிராமப்புறப் பொருளாதாரத்தை இது மேலும் சரித்தது. சட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் மீது மக்களுக்கு அதிருப்தி இருந்ததை மோடி – அமித் ஷா இருவரும் அறிந்தனர். ஒருகட்டத்தில், 50% வேட்பாளர்களைப் புதியவர்களாகக் களமிறக்க இருவரும் திட்டமிட்டனர். ஆனால், அதுவும் தோல்வியில் முடியும்பட்சத்தில் புதிதாக உருவாகும் பகை மக்களவைத் தேர்தலிலும் கட்சிக்குள் எதிரொலிக்கும் என்று அந்த வியூகத்தைக் கைவிட்டனர். கடைசிக் கட்டமாக தீவிரமான பிரச்சாரங்களுக்குத் திட்டமிடப்பட்டது. மோடி 30 பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு கடுமையாகப் பிரச்சாரம் செய்தார். அமித் ஷா 170-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சாரம் செய்தார். எதுவும் இந்த முறை பெரிதாகக் கைகொடுக்கவில்லை.

கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியோடு சேர்த்து, பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் என்று மொத்தம் ஐந்து மாநிலங்கள் இப்போது காங்கிரஸ் ஆட்சியின் கீழ் வந்திருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களின் பட்டியலோடு ஒப்பிட்டால் இது பெரிய விஷயம் இல்லைதான். ஆனால், காங்கிரஸுக்கு இது புத்துயிர் ஊட்டியிருக்கிறது. மோடிக்கு எதிர் யார் என்ற கேள்விக்கு இந்தத் தேர்தல் பதில் தந்திருக்கிறது. முக்கியமாக பாஜகவின் இதயமான இந்தி மாநிலங்களில் காங்கிரஸ் தொடுத்திருக்கும் தாக்குதல் பாஜகவின் நிம்மதியைக் குலைத்திருக்கிறது. மோடியைக் கைவிட மக்கள் தயாராகிவிட்டனர் என்பதும், வெறும் வாக்குறுதிகளால் யாரும் நீடிக்க முடியாது என்பதுமே இத்தேர்தல் முடிவுகள் சொல்லும் முக்கியமான செய்தி!