யாரு கண்ணுபட்டுப் போனதோ….? அந்த மாதிரி இருந்த ஊரு இந்த மாதிரிப் போனதே…..?

(சாகரன்)

2009 ம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவுற்று சில வருடங்களில் கிழக்கின் உதயம், வடக்கின் வசந்தம் என்றும் தமிழர் பிரதேசம் எங்கும் கட்டுமானங்கள் நடைபெற்றன. இலங்கையின் ஏனைய பாகங்களுடன் தமிழ் பிரதேசங்கள் வேக வழிச்சாலைகள் உருவாக்கப்பட்டன. பின்பு படிப்படியாக வீதித் தடைச் சோதனைகளும் அகற்றப்பட்டன. புலம் பெயர் தேசத்து உறவுகள் தாயகம் திரும்பி தமது ஊர்களுக்கு சென்று தாம் நிரந்தரமாக தங்கிவிடும் புலம் பெயர் தேசத்திற்கு திரும்பி வந்ததும் ஊர் எப்படி இருக்கின்றது என்றதற்கு ‘….அந்த மாதிரி இருக்குது ஊர்…” என்று கூவி மகிழ்ந்ததற்குள் இந்த பெரும் தெரு வேக இணைப்புகளும் மக்களின் அன்றாட தேவைகளுக்கான அபிவிருத்திகளும் தங்கு தடையற்ற வடக்கு கிழக்கிற்கு அப்பால் தெற்கிற்கும் பயணம் செய்து இடங்களைப் பார்த்து வருவதற்கும் உரிய இயல்பு நிலையொன்றும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது என்ற செய்திகளே ஒழித்திருந்தன.