வடக்கில் மையம் கொண்ட எழுகதமிழ் புயல் கிழக்கு நோக்கி நகர்கிறது!?

காலநிலை அவதான நிலையத்தில் வேலைசெய்பவன் போலாகிவிட்டது எனது நிலை. அங்கு மையம் கொண்ட புயல் கிளம்பி, இங்கு சுழன்று இடையில் கரையை கடக்கும் என்பது போலவே, ஈழத்தமிழர் அரசியல் நிலவரமும் ஆகிவிட்டது. இடியுடன் மழை வரலாம், சில இடங்களில் மேக மூட்டம் மட்டும் காணப்படும். ஒரு சில இடங்களில் காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என கூறுவது போலவே எமது உரிமைகளை நாம் வென்றெடுக்க சமஸ்டி, இணைந்த வடக்கு கிழக்கு, ஒருநாடு இருதேசம், கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை என மக்களை போட்டுக், குழப்பு குழப்பு என்று குழப்பி, எதுவுமே கைகூடா வேளையில் வடக்கில் அரங்கேற்றிய எழுகதமிழ் பேரணியை, கிழக்கிற்கு நகர்த்தும் செயலும் ஓரளவு மக்களின் ஆதரவை பெறலாம், மாபெரும் வெற்றி என சில பத்திரிக்கைகள் சங்கூதலாம்

காரணம் வரலாற்றில் முதல் தடைவையாக பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு கிடைத்த அன்பளிப்பு கவர். உள்ளே இருந்தது ஐந்நூறு ரூபா மட்டுமே என பரவலாக செய்திகள் கிடைத்தாலும், கூவான்கோழி சொன்ன தகவல்ப்படி, நிகழ்ச்சி அன்று ஆயிரம் ரூபா உட்பட உணவும், செய்தி பிரசுரமான பின்பு, தனிப்பட்ட கவனிப்புக்கும் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாம்.

இதுவரை முக்கியமான மக்கள் பிரதிநிதிகள் இருவருக்கு, தலா பத்துலட்சம் கைசேர்ந்து விட்டதை கூறிய கூவான்கோழி, அதில் ஐந்து லட்சத்தை அவர்கள் தங்கள் சொந்த நிதியத்தில் சேர்த்து விடுவர் என, தனது அனுபவ பகிர்வை என்னோடு பகிர்ந்து கொண்டார். முக்கிய தலையாரிக்கு நோர்வே, சுவிஸ் நாடுகளில் இருந்து மட்டும் அனுப்பப்பட்ட பணம், இலங்கை மதிப்பில் முன்னூறு லட்ச்சமாம்.

இது ஊரான் வீட்டு நெய்யே என்பெண்டாட்டி கையே என, முக்கியமானார் தம்முள் பகிர்வை முடித்துக் கொண்டு. எச்சில் கையால் காகம் விரட்ட, அந்தப் பருக்கைகளை பொறுக்க காத்திருப்பவரும் சிலர். உரிமைப் போராட்டம் நடத்த, குரல் கொடுக்க, ஒன்று கூட, துண்டுப்பிரசுரம் விநியோகித்து ஊர் ஊராய் தெருத்தெருவாய் 2017 லும் அலையும் அவலநிலை, காலத்தின் கோலம் அன்றி வேறொன்றும் இல்லை.

கடந்த காலத்தில் நடந்த போராட்டங்கள் தோல்வியில் முடிந்திருக்கலாம். ஆனால் அவை எல்லாமே எம்மவரால் இதய சுத்தியுடன் நடத்தப்பட்டவை. சத்தியாக்கிரகப் போராட்டம் என்றாலும், ஆயுதப் போராட்டம் என்றாலும், தம் வீடுகளை விட்டு வெளிக்கிடும் போது, கிடைக்கும் லாபங்களைப் பற்றிய கனவில் எவரும் புறப்படவில்லை. அடையக் கூடிய பாதகங்கள் பற்றியும் அவர்கள் பயப்படவில்லை.

இழப்புகள் பற்றிய கவலை அகிம்சை வழி போராட்டம் நடத்திய, அரசியல் தலைவர்களுக்கு அன்று இருக்கவில்லை. தாங்கள் தமது சொத்துக்களை இழந்தாலும், தாம் செய்த தொழில்களை துறந்தாலும், ஏற்ப்படும் நஸ்டங்களை ஈடு செய்ய, பண்ணாகத்து காணிகளை விற்ற அமிர்தலிங்கமும், உடுவில் நிலங்களை இழந்த தருமலிங்கமும் அரசியலில் நிலைத்து நின்ற காலம் அது.

ஆயுதப்போராட்ட ஆரம்ப காலம் பற்றி நான் கூறத்தேவை இல்லை. இந்தியா தப்பி செல்ல பணமின்றி தவித்த சிவகுமாரன், பொலிசாரிடம் இருந்து தப்பிக்க சயனைட் அருந்தி மரணிக்கும் அளவிற்கு நிதி வளம் இல்லா நிலை. பின்பு வீடு தோறும் சோற்றுப் பாசல் சேகரித்து பயிற்சி முகாங்கள் இயங்கிய காலம். ஈழ மாணவர் பொது மன்றம் வீதியோர விழிப்புணர்வு நாடகங்கள் போட்டு, மக்களை அணி திரட்டிய காலம்.

அரசியல் தலைமைகளும் சரி, போராட்ட தலைமைகளும் சரி, அனைத்தும் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த போது நிலை தடுமாறவில்லை. தமிழ் ஈழம் தான் முடிந்த முடிவு என, வட்டுக்கோட்டையில் முழங்கிய தலைமை எதிர்க்கட்சி தலைவர் பதவி வந்ததும், வசதிகளை பெறுவது தவறில்லை என முடிவெடுத்து, கிடைத்த ஜப்பான் மிற்சுபிசி ஜீப்பில் ஏறித்தான் தமிழ் ஈழத்தை நோக்கிப் பயணித்தது.

அகிம்சைவாதிகள் செயல் இளையவரை அவர்தம் கையில் ஆயுதம் ஏந்தவைத்தபோது, ஆரம்பத்தில் அவர்களும் சொக்கத் தங்கம் போலவே இருந்தார்கள். சோதனையாக இந்திய உளவுப் பிரிவினரின் ஊடுருவல், அவர்களுள் மனக் கலப்படம் செய்து, ஜல்லிக்கட்டு போட்டியை இல்லாமல் செய்த பீற்ரா போலவே, ஈழத்துக்காய் போராட புறப்பட்டவர், தம்முள் மோதி அழிய வழி வகுத்ததுக் கொடுத்தது.

எம் ஜி ஆர் என்ற ஆளுமை கொடுத்த கோடிக்கணக்கான பணம் தந்த ஆயுத பலம், லட்சங்களை பங்கிட்டு கொடுத்த கருணாநிதியிடம் நிதி பெற்றவர்களை மோதி அழித்தது. அதனால் வீழ்ந்து பட்டதே எம் ஈழ விடுதலை போராட்டம். இன்று ஜல்லிக்கட்டு மீண்டும் வேண்டும் என மெரீனாவில் போராடும் இளையவர் போல, மக்கள் தாமே முன் வந்தால் எழுக தமிழ் வெற்றி பெறும் என நம்பலாம்.

முள்ளிவாய்கால் பேரவலத்தின் பின் தேர்தல்கள் எல்லாம், புலம்பெயர் நிதிமூலங்களின் பின்னணியில். அரசியல் என்றால் முதல் இழந்து செய்த நிலை மாறி, அவரவர் வசதி வாய்ப்பை கூட்டும் முதலீடாக மாறியதை, மாறுவதை எம் மக்கள் மௌனிகளாக பார்த்துக்கொண்டு இருப்பதை, இவர்கள் தமக்கு சாதகமாக எடுத்து, தமது பதவி அரசியலை அடுத்த தேர்தலுக்கு உயிர்ப்புற செய்வதற்கே எழுகதமிழ்.

மாறாக இதயசுத்தியுடன், நிச்சயம் அடையக்கூடிய விடயத்துக்கான முயற்சி என்றால், வடக்கில் நடந்த எழுகதமிழ் பெற்ற பெறுபேறுகளை, சாதிக்க முடிந்த விடையங்களை பட்டியல் இடுங்கள். அதற்க்கு முன் அந்த எழுச்சிக்கு வந்த பணத்துக்கு நடந்தது என்ன என்ற, உள்ளக விசாரணை முடிவை மக்கள் முன் பகிரங்கப் படுத்துங்கள். அன்று பதினைந்தாயிரம் மக்கள் கூடியதில், மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது என்பதை அறியத்தாருங்கள்.

நீங்கள் எழுக தமிழ் நடத்தும் கிழக்கு மண் இன்று கண்ணீரில் நனைகிறது. காரணம் கடும் வறட்சியால் மழை நீரின்றி குளங்கள் வற்றிப்போனதால், வயல்கள் எல்லாம் கரிசல் காடுகளாக காட்சி தருகிறது. விவசாயிகளின் அடிவயிறு எரிகிறது. நிவாரணத்துக்காக அவர்கள் கரங்கள் நீள்கிறது. அரவணைக்க அரசை மட்டுமே அவர்கள் நம்பவேண்டிய நிலையில் உதவும் கரங்களாக, புலம்பெயர் தேசத்து பெரு நிதியை பயன்படுத்த முடியாதா?

ஒரு நாள் கூடி முழக்கம் இட்டு தீர்மானம் நிறைவேற்றி நீங்கள் திரும்பி சென்றபின், அடுத்த போகம் தன் வயலை விதைப்புக்கு தயார்ப்படுத்தும் நிலைக்கு, அவர்களைத் தயார்ப்படுத்துவீர்களா?. அதுவரை அவர்கள் உயிர்ப்புடன் வாழ நிவாரணத்துக்கு வழி வகை செய்வீர்களா? ஈழ விடுதலை போராட்டத்தில் பெருமளவு களப்பலியானவர் கிழக்கின் மைந்தர்கள். அவர்களின் உறவுகளுக்கு என்ன செய்வீர்கள்?

அரசின் திட்டமிட்ட குடியேற்றம் அம்பாறையில் ஆக்கிரமிக்கும் வேளை, தமிழர் மீது தாக்குதல் நடத்த வந்த காடையர் மீது முதல் துப்பாக்கி வேட்டை தீர்த்த துறைநீலாவணை பற்றி உங்களுக்கு தெரியுமா? காட்டு விலங்குகளுக்கும், இயற்க்கை சீற்றங்களுக்கும், அரச அனுசரணை அத்துமீறல்களுக்கும் முகம் கொடுத்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு என்ன செய்ய உத்தேசம்?

கை தூக்கி விடப்போகிறீர்களா? அல்லது அடுப்பில் இருப்பதை நெருப்பில் தள்ளப்போகிறீர்களா?. ஒருநாள் பேரணியை நடத்தத் தேவையான கூட்டத்தை கூட்டவே, ஊடகவியலாளருக்கு பணம் கொடுக்கும் நிலைமை, தமிழகத்தில் அரசியல் கட்சிகள் குவாட்டருக்கும், புரியாணிக்கும் மக்களை லாரிகளில் ஏற்றி வந்து கலர் காட்டுவது போன்று, கிழக்கிலும் உங்கள் பதவி அரசியலை விதைக்கப் போகிறீர்களா?

ஹிஸ்புல்லாவும் அமீர் அலியும் முஸ்லிம் பிரதேசங்களை முனைப்புடன் வளமாக்குவதை பார்த்தாவது உங்களுக்கு மனச்சாட்சி உறுத்தினால், கிழக்கில் தமிழர் பிரதேசம் எவ்வளவு தூரம் பின்தங்கி உள்ளது என்பதை நேரில் பார்த்து, அந்த மண்ணையும் மக்களையும் வளமுடன் வாழ, உங்களுக்கு கிடைக்கும் புலம் பெயர் தேசத்து பெரு நிதியை, இனியாவது பயன் படுத்தினால் அவர்கள் எழுந்து விடுவார்கள். நீங்கள் பறை அடித்து, வலம்புரி சங்கூதி அவர்களை எழுப்பத்தேவை இல்லை.

(ராம்)