சசிகலா என்பது போலி; நடராஜனே உண்மையான முகம்: ‘துக்ளக்’ ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி

சசிகலா என்பது போலி, நட ராஜனே உண்மையான முகம் என ‘துக்ளக்’ வார இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி குற்றம்சாட்டி யுள்ளார். கடந்த 14-ம் தேதி சென்னையில் நடைபெற்ற ‘துக்ளக்’ ஆண்டு விழாவில் பேசிய குருமூர்த்தி, ‘‘தமிழகத்தில் ஒரு கட்சிதான் குடும்ப ஆதிக்கத்தில் இருந்தது. இப்போது இன்னொரு கட்சியும் குடும்பத்தின் பிடியில் போய்க் கொண்டிருக்கிறது. இதை எதிர்க்க பலரும் பயப்படுகின்றனர். ஆனால், இதைப் பார்த்துக் கொண்டு ‘துக்ளக்’ சும்மா இருக்காது’’ என்றார்.

இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் தஞ்சாவூரில் நடை பெற்ற பொங்கல் விழாவில் பேசிய சசிகலாவின் கணவர் நடராஜன், ‘‘தமிழகத்தை காவிமயமாக்க பாஜக திட்டமிடுகிறது. அதிமுகவை உடைக்கப் பார்க்கிறது. அதிமுக வுக்கு எதிராக குருமூர்த்தி தலைமையில் செயல்படுகின்றனர். என்னைப் போன்றவர்களுக்கு எந்த போலீஸ் பாதுகாப்பும் இல்லை. ஆனால், எந்தப் பொறுப்பிலும் இல்லாத குருமூர்த்திக்கு எதற்கு போலீஸ் பாதுகாப்பு? அனைத் தையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கிறோம்’’ என்றார்.

இதற்கு பதிலாக நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள குருமூர்த்தி, ‘குடும்ப ஆட்சிதான் நடத்து கிறோம் என நடராஜன் கூறியதன் மூலம் சசிகலாவை வெறும் தலைமையாக மட்டுமே முன்னிறுத்துகிறார்கள் என்பது தெளிவாகிறது. வி.கே.சசிகலா என்பது போலி, நடராஜன்தான் உண்மையான முகம்’ என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதிவில், ‘சசிகலா ரகசியமாக செயல்பட நினைக்கிறார். ஆனால், நடராஜன் அப்படி நினைக்கவில்லை. இருவருக்கும் இடையே உள்ள ஒரே வித்தியாசம் இதுதான்’ என தெரிவித்துள்ளார்.