வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது

திருமதி வாசுகி சிவகுமார் அவர்கள் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் திரு வரதராஜபெருமாள் அவர்களைப் பேட்டி கண்டபோது எழுப்பிய கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள்;. 23 ஜுலை 2017 தினகரன் வாரமஞ்சரியில் வெளியிடப்பட்டது.
கேள்வி 1:-
பல்வேறு அச்சுறுத்தல்கள், சவால்களுக்கு மத்தியில், குறுகிய காலம் மட்டுமே நீடித்திருந்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக இருந்த நீங்கள் அந்த மாகாண சபைக்கும், தற்போதைய மாகாண சபைக்கும் இடையே அரசியல் மற்றும் நிர்வாகரீதியாக காணுகின்ற வேறுபாடுகள் எவை?


பதில்:-
உங்களுடைய கேள்வியிலேயே அந்த மாகாண சபை உட்பட்டிருந்த நெருக்கடியான சூழலை நீங்களே குறிப்பிட்டிருக்கிறீர்கள். அன்றைக்கு நவீன ஆயுதங்களுடன் மோதிய சண்டைகள், எதிர்பார்த்திராத இடங்களிலெல்லாம் குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட அவலங்கள், நாள் தோறும் படுகொலைகள் என இருந்த நிலைமை இன்றைக்கு இல்லை, அன்றைக்கு அந்த மோசமான நிலைமைகளுக்கு ஆதரவாக இருந்து பதவி, பண இலாபங்களை அனுபவித்தவர்களே இன்று அமைதியான சூழ்நிலையில் எல்லா வளங்களுடனும், உறவுகளுடனும், மக்களின் அமோக ஆதரவோடும் மாகாண சபையின் அதிகார பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
வடக்கு கிழக்கு மாகாண சபையின்; உறுப்பினர்களாக இருந்தவர்களும், அதன் அமைச்சரவையில் இருந்தவர்களும், நிர்வாகத்தில் இருந்த அரச உத்தியோகத்தர்களும் ஒரே முகமாக செயற்பட்டு மாகாண சபையை காத்திரமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும், மக்களுக்கு பயனுடையதாகவும் இயங்கும் நிலையை உருவாக்கி, யுத்தத்தால் அழிந்தவற்றை மீளக் கட்டியெழுப்பும் வகையாகவும், இழந்தவற்றை மீளப்பெறும் இலக்குகளுடனும் செயற்பட்டனர். அதற்காக உயிரைப் பணயம் வைத்து அர்ப்பணிப்போடும், முழுமனதுடனான ஈடுபாட்டோடும், தியாக உணர்வுகளோடும் செயற்பட்டார்கள். இன்றைக்கு மாகாண சபையின் அமைப்புக்களில் இருப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை. “மாகாண சபைக்கு பணம் இல்லை” என்கிறார்கள், ஆனால் பல கோடிக்கணக்கில் மக்கள் பணம் தமிழ் அமைச்சர்களாலாயே ஊழல் செய்யப்பட்டுள்ளது. “அதிகாரம் தரப்படவில்லை” என்கிறார்கள், ஆனால், இங்கு பெருந்தொகையில் அதிகார து~;பிரயோகங்கள் நடந்திருக்கின்றன.
அடிப்படை வேறுபாடு என்னவெனில், அந்த வடக்கு-கிழக்கு மாகாண சபையில் இருந்தவர்கள் மக்களின் உரிமைகளுக்காக, மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணம் செய்தவர்கள். இன்றைக்கு இங்கே மாகாண சபையில் இருப்பவர்கள் பெரும்பாலும் பதவி சுகங்களுக்காகவும் பணம் சம்பாதிப்பதற்காகவுமே அரசியல் பண்ணுபவர்கள் – தேர்தல் வெற்றிக்காக பிடிக்க வேண்டியவர்களின் கால் பிடித்து, காக்கா பிடித்து, லஞ்சம் கொடுத்து அரசியலுக்குள் வந்தவர்கள்.

கேள்வி 2:-
இந்தியா தனது மாநிலங்களுக்கான அதிகாரங்களை ஒத்ததாகவே இலங்கையின் மாகாண சபை முறைமையையும் உருவாக்கிய போதிலும், சிற்றூழியர் ஒருவரைக் கூட நியமிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லையென்கின்றனரே வட மாகாண அமைச்சர்கள்?
பதில்:-
நிறைவேற்றதிகாரம் தொடர்பான அரசியல் யாப்பு விதிகள் எவ்வாறு இந்திய அரசியல் யாப்பில் உள்ளதோ அவ்வாறே இங்குள்ள மாகாண சபைகள் தொடர்பான இலங்கையின் அரசியல் யாப்பிலும் உள்ளது. ஆனால் அதே வாக்கியங்கள் இந்தியாவில் முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் நடைமுறை நிறைவேற்றதிகாரங்களை வழங்கும் பொழுது இலங்கையில் மட்டும் அது எப்படி தலைகீழாக நடக்கிறது என இங்குள்ள சட்ட நிபுணர்கள்தான் பதிலளிக்க வேண்டும். என்னைப் பொறுத்த வரையில் இது அரசியல் யாப்பின் குறைபாடல்ல. மாறாக, இங்குள்ள அரசியலின் குறைபாடு. நிறைவேற்றதிகாரம் தொடர்பாக இந்தியாவில் உள்ளதையே இலங்கைத் தமிழருக்கும் இந்தியா பெற்றுக் கொடுத்தது. ஆனால் இங்குள்ளவர்கள் “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி, கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி” என ஆக்கிவிட்டு இந்தியாவிடம் குறைகளைத் தேடுவதில் அர்த்தமில்லை.
அரசியல் யாப்பின் எந்தவொரு விதி தொடர்பாகவும் வேறுபட்ட – முரண்பாடான புரிதல்கள் ஏற்படுமிடத்து அதற்கான தீர்க்கமான விளக்கம் என்னவென தீர்ப்பளிப்பதற்கான அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே உண்டு. ஆனால் மாகாண சபைக்கான நிறைவேற்றதிகாரம் தொடர்பான விளக்கம் எந்தக் கட்டத்திலும், யாராலும் உச்ச நீதிமன்றத்திடம் கோரப்படவில்லை. ஆனால் சட்டமுறைமைகளைக் கடந்து சண்டித்;தன அதிகாரம் உள்ளவர்கள் தங்கள்பாட்டிற்கு இங்கு மாகாண சபைகளுக்கான நிறைவேற்று அதிகாரம் யாருக்கு உரியது என்பதைத் தீர்மானிக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீதிதேவதையின் ஆசனத்தில் அமர்ந்திருந்தவரும் சட்ட மேதாவி எனக் கருதப்படுபவருமான ஒருவரே இப்போது வடக்கு மாகாண முதலமைச்சராக இருக்கிறார். இருந்தும் மாகாண அமைச்சர்களின் நிறைவேற்றதிகாரம் தொடர்பாக இவர் கூட எந்தவொரு கேள்வியையும் உச்ச நீதிமன்றத்தின் முன் எழுப்பவில்லை. அது ஏன் என்று தமிழ் மேதாவிகள் எவரும் இதுவரை கேள்வியெழுப்பியதில்லை.
சண்டியன் சட்ட அதிகாரத்தைக் கையிலெடுப்பான் என்பது பொதுவாகத் தெரிந்ததே. அதைக் கேள்விக்கு உட்படுத்தாமல் இருப்பதே தமக்கு வசதியானதும் சுகமானதும் என இருப்பவர்களை என் சொல்வது?

கேள்வி3:-
புதிய அரசியலமைப்புக்கான தேவையோ, அரசியல் யாப்பு திருத்தத்துக்கான தேவையோ இல்லையென பௌத்த மகா சங்கங்கள் அண்மையில் கூட்டாக அறிவித்துள்ளன. இந்நிலையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கமொன்றின் மூலமாக தமிழர்களின் அபிலாi~களுக்கான தீர்வென்பது எந்தளவுக்குச் சாத்தியமாகும்?
பதில்:-
இலங்கையின் அரசியலில் மதம், சாதி, மொழி என்பன தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து இன மக்கள் மத்தியிலும் செல்வாக்கு செலுத்துகின்றமையே யதார்த்தம். தமிழர்கள் மத்தியிலும் அவ்வாறே!
பௌத்த பிக்குகள் அனைவரும் தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக ஒரு முகமாக ஒரே அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்றில்லை. மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்;கான தீர்வு தொடர்பாக சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்ட பௌத்த குருமார்கள் பரவலாக பெருந்தொகையாகவே உள்ளனர். அவ்வாறானவர்களை அணுகி, அவர்களின் ஆதரவுக் குரல்களை திரட்டுவது இங்குள்ள நிலைமையில் மிகவும் அவசியமாகும்.
தமிழ் மக்களிடம் வாக்குகளை அமோகமாகப் பெற்று பாராளுமன்றத்திலும் மாகாண சபைகளிலும் இருப்பவர்களே தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை எவ்வாறாயினும் நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் எவ்வளவு சங்கடங்கள் உள்ளன என்பதை வீதியில் வேலை வெட்டியில்லாமல் நிற்பவன் கூடக் கூறுவான். அதற்காகவல்ல இவர்கள் பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைகளுக்கும் அனுப்பப்பட்டிருக்கிறார்கள். தமிழர்கள் தங்களது பிரதிநிதிகளாக தமது வாக்குகளால் யாரைத் தெரிவு செய்திருக்கிறார்களோ அவர்களிடமே அரசியற் தீர்வையும் எப்படியாயினும் சாத்தியமாக்கும்படி கோர வேண்டும். ஆற்றிலே போட்டு விட்டு குளத்திலே தேடக் கூடாது.

கேள்வி4:
மாகாண சபை போன்ற அதிகார அலகொன்றையே தமிழர்களால் நிர்வகிக்க முடியாதென்ற தோற்றப்பாட்டினை தற்போதைய வடமாகாண சபை தெற்கில் ஏற்படுத்தி விட்டதா?
பதில்:-
நாங்கள் தலைமையேற்றிருந்த வடக்கு கிழக்கு மாகாண சபை பற்றி பேசுவோர் இன்று வரையும் கூட அவ்வாறு சொல்வதில்லையே! எனவே, முன்னாள் நீதியரசர் மற்றும் சட்ட மேதை விக்னேஸ்வரனின் தலைமையிலான வடக்கு மாகாண சபையின் இயலாமை – வல்லமையின்மை என்பது ஒட்டு மொத்த தமிழர்கள் மத்தியில் நிர்வாக ஆற்றலின்மை– திறமையின்மை என்பதன் பிரதிபலிப்பாகாது. ஒரு காலகட்டத்தில் இலங்கை அரசின் அமைச்சுக்களில் இருந்த சிறந்த நிர்வாகிகளில் தமிழர்களே பெருந்தொகையினராக இருந்தனர் என்பது மறுக்க முடியாத வரலாறு. இன்றைக்கும் சிங்கள அரச அதிகாரங்களின் கீழ் செயற்படும் தமிழ் அரசாங்க நிர்வாகிகள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே, இது ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்தில் நிலவும் உள்ளார்ந்த ஆற்றல் பற்றிய கேள்வி அல்ல. மாறாக பெரும்பான்மையான தமிழர்களால் அங்கீகரிக்கப்படும் – தேர்தெடுக்கப்படும் அரசியற் தலைமை பற்றியதே. அதாவது, இங்கு மாகாண சபை தொடர்பான இயலாமை – ஆற்றலின்மை – ஊழல் மோசடிகள் என்பது தமிழரசுக் கட்சிக்காரர்கள் பற்றியதுவும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என செயற்படும் கட்சிக்காரர்கள் பற்றியதுமே. இயலாமையாக உள்ள மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரனை அரசியல்ரீதியாக தாங்கி நிற்கும் தமிழ் மக்கள் பேரவையினரும் மாற்றான எதையும் நிரூபிக்கவில்லை. அந்த வகையறாக்களும் தமிழரசு போன்ற சோத்திகளே! ஒய்யாரமான கொண்டையிலே உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் எனும் பழமொழி போன்றதே.
எவ்வாறாயினும் இவர்கள் பொது மக்களின் சொத்துக்களை – பொது மக்களின் அபிவிருத்திக்கான பணங்களை ஊழல் மோசடிகள் செய்வதிலும், தங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக அதிகாரங்களைத் து~;பிரயோகங்கள் செய்வதிலும் வல்லவர்களாக உள்ளனர் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே இந்த போலித் தமிழ் தேச வாதிகள் வல்லவர்கள் அல்லவென்றில்லை. எதில் வல்லவர்கள் என்பதுதான் பிரச்சினை.
புதிய சிந்தனைகளோடு உண்மை மற்றும் நேர்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மாற்றங்களை தமிழர்கள் ஆற்றினால் ஆற்றலுள்ள மாகாண சபையை அவர்கள் காணலாம். ஆனால் தமிழர்கள் மத்தியிலுள்ள பெரும்பாலான சமூகப் பிரமுகர்களும் புத்திஜீவிகளும் ஒரு மாகாண சபையைக் கூட மனச்சாட்சிக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் நிர்வகிக்க முடியாதவர்களை ஆதரிக்கும் வரை வடக்கு மாகாண சபையும் அனைத்து உள்ளுராட்சி அமைப்புகளும் தொடர்ந்தும் இப்படித்தான் ஆற்றலற்றவைகளாக – ஊழல் நிறைந்தவைகளாகவே இருக்கும்.
தென்னிலங்கை பேரினவாத சக்திகளுக்கும் இதனால் மகிழ்ச்சிதானே! யாழ்ப்பாணம் வாழ் தமிழர்களிற் பெரும்பான்மையினரும் மேலைத் தேச நாடுகளிலுள்ள தமிழர்களில் கணிசமானவர்களும் சபா~;! சிங்களவர்களுக்குச் சவாலான சரியான போட்டி! என வடக்கு மாகாண சபை பற்றி பெருமைப்படும் போது யார்தான் முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும்? அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது பழையது. ஆனால் இப்போது மக்களின் தரத்துக்கு ஏற்பவே அவர்களுக்கான அரசியற் தலைமையும் அமையும்!

கேள்வி 5:-
தமிழ் மக்களுக்கான தீர்வுகள் முன்வைக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் தெற்கில் பலத்த எதிர்ப்பலைகள் தோன்றும் என்பது தெரிந்திருந்தும், தமிழ் மக்களின் அபிலாi~களின் நியாயத் தன்மைகள் குறித்து பெரும்பான்மை மக்களிடம் புரிதல்களை ஏற்படுத்தும் முயற்சிகளை தமிழ்த் தலைமைகள் ஏன் செய்யவில்லை?
பதில்:-
தமிழ் இயக்கங்கள் ஆயுதம் தாங்கிப் போராடிய காலகட்டத்தில் குறிப்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகிய இரண்டும் பரந்துபட்ட சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் போராட்ட நியாயங்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.
அதற்காக இவ்விரு இயக்கங்களும் சிங்கள மக்களின் மத்தியில் இருந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளுடனும் விரிவான உறவுகளைக் கொண்டிருந்தன.
என்றைக்கு புலிகள் தமிழர்களின் நியாயமான போராட்டத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்களோ, அன்றிலிருந்து சிங்கள மக்களை ஒட்டு மொத்தமாக தமிழர்களுக்கு எதிராக நிறுத்தும் வேலைகளை புலிகள் சாதித்தனர்;.
புலிகளின் ஆசீர்வாதத்துடன் தமிழர் தலைவர்களாக ஆக்கப்பட்டவர்களே இப்போது பாராளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல் அரசியலில் ஆதிக்கம் வகிப்பவர்களாக உள்ளனர். இவர்களின் வாக்கு வேட்டை அரசியல் குறுகிய தீவிர இன உணர்ச்சி வாத அரசியலை அடிப்படையாகக் கொண்டது. அதுவே அவர்களுக்கு தேர்தல் வெற்றிகளை சுலபமாக பெற்றுக் கொடுக்கிறது. இவர்களுக்கு தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வை விட அவர்களது தேர்தல் வெற்றிகளே பிரதானமானவை.
சிங்கள பேரினவாதம் தனது செல்வாக்கை சிங்கள மக்கள் மத்தியில் தக்க வைப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தமிழர்கள் மத்தியில் தீவிர தமிழ்த் தேசவாதம் தலைதூக்கி நிற்பது அவசியமாகும். அதேபோல சிங்களப் பேரினவாதம் தலைதூக்கி படமெடுத்து ஆடினால்தான் தமிழர்கள் மத்தியில் தீவிர தமிழ்த் தேசவாதம் செல்வாக்குடையதாக நிலைக்க முடியும். நியாயமான அரசியற் தீர்வு என்பது குறிப்பிட்ட இரண்டு இன உணர்ச்சி வாதத்தினதும் நன்மைகளுக்கு எந்த வகையிலும் பொருத்தமானவைகள் அல்ல. இப்படியிருக்கையில், தீவிர தமிழ்த் தேசவாதத்தை போர்த்தி செயற்படுபவர்கள் எவ்வாறு சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்களின் நியாயங்களை முன்னெடுத்து செல்வார்கள் என எதிர்பார்க்க முடியும்?

கேள்வி 6:-
தமிழ் மக்களின் வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த அரசியற் தீர்வு இப்போதைக்கு சாத்தியமில்லை எனும் நிலையில் சாத்தியமான தீர்வை நோக்கி ஏன் தமிழ்த் தலைவர்கள் ஆராயவில்லை?
பதில் 6:-
தமிழ் மக்கள் மத்தியிலுள்ள அறிவார்ந்தோரிற் கணிசமான தொகையினரும், முற்போக்கான சிந்தனைகள் கொண்ட அரசியற் சக்திகளும் ஏற்கனவே வடக்கு கிழக்கு இணைப்பின் சாத்தியமின்மை பற்றி விரிவாகவே – தெளிவாகவே உள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சினர் (முன்னர் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என இருந்தவர்கள்) வடக்கு கிழக்கு இணைப்பு பழைய அதே வகையாக சாதிக்க முடியாவிட்டாலும் இங்குள்ள அனைத்து இன மக்களும் நன்மையடையும் விதமாக வடக்கு கிழக்கு இணைப்பை புதிய விதமாக எவ்வாறு சாத்தியமாக்கலாம் என்பது பற்றி தெளிவாக எழுத்து மூலம் தெரிவித்திருக்கிறார்கள் – தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்னர் பிடிவாதமாக வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாத அரசியற் தீர்வை தாங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்க மாட்டார்கள் எனக் கூறி வாக்கு வேட்டை அரசியலை செய்தவர்கள் இ;ப்போது புதிய அரசாங்கத்தின் மூலமாக வடக்கு கிழக்கு இணைப்பு அற்ற ஒரு அரசியற் தீர்வை பெறுவதற்கு முயற்சித்து வருவதாக வெளிப்படையாக – உறுதியாகவே தெரிவிக்கிறார்கள்.
எனவே, வடக்;கு கிழக்கு இணைப்பு என்பது தமிழர்கள் மத்தியில் முன்னர் இருந்தது போல இறுக்கமான சிந்தனையாக இல்லையென்பது தெளிவாகிறது. எனவே வடக்கு கிழக்கு இணைப்பற்ற வகையிலாயினும் நியாயமானதோர் அளவுக்கு அதிகாரப் பகிர்வு கொண்ட அரசியற் தீர்வுக்கான சிந்தனை தமிழர்கள் மத்தியில் ஏற்கனவே அங்கீகாரம் பெறத் தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.

கேள்வி 7:-
தமிழ் மக்களுக்கான சாத்தியமான தீர்வைப் பற்றிப் பேசுவோரை துரோகிகளாக, அல்லது அவ்வாறானவர்களின் கடந்தகால அரசியற் பின்னணி ஆராயப்பட்டு ஓரம் கட்டப்படுவதுமான சூழலே நிலவுவதால் சாத்தியமான தீர்வு என்பது தமிழர்களுக்கு எட்டாக்கனியான ஒன்றாகவே இருக்குமா?
பதில்:-
பதவிப் போட்டிகளெனும் போது ஒரு கட்சியினர் மற்றொரு கட்சியினரை எவ்வாறாயினும் ஓரம் கட்டிவிட முயற்சிப்பது தேர்தல் அரசியலில் சகஜமே. ஒரு காலகட்டத்தில் துரோகிகள் என அழைக்கப்பட்டோரோடு அதே ஆட்கள் இன்னொரு கட்டத்தில் கூட்டுச் சேர்வதுவும் இங்கு நடைபெற்றுள்ளன. இங்கு தமிழர் அரசியலில் தியாகிகளான துரோகிகளையும், துரோகிகளான தியாகிகளையும் நிறையவே பார்க்க முடிகிறது.
ஆயுத வல்லமை கொண்டிருந்த புலிகள் பாசிச தமிழீழத்துக்கான கனவோடு வெறி கொண்டு செயற்பட்டதால் அவர்கள் காலத்தில் எந்தவொரு அரசியற் தீர்வும் சாத்தியமாகாமற் போனது. இன்றைய நிலைமை அப்படியல்ல. எந்த மாகாண சபையை புலிகள் எதிர்த்தார்களோ அதே மாகாண சபையில் உறுப்பினர் பதவிக்கும் அமைச்சர் பதவிக்கும் தானே அதே புலிகளால் தலைவர்களாக்கப்பட்டவர்கள் இன்று ஆலாய்ப் பறந்து அடிபடுகிறார்கள்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தோற்றவர்கள் வென்றிருந்தால் அல்லது குறைந்தபட்சம் கொழும்பு ரகசிய உறவுகள், வெளிநாடுகளுடனான ராஜரீக கொடுக்கல் வாங்கல்களில் சம்பந்தர் அவர்களை தொடர்ந்து கூட்டாக பங்காளிகளாகக் கொண்டு திரிந்திருந்தால் அவர்களிடமிருந்து எப்போதோ சம~;டி, சுயநிர்ணயம் எல்லாம் காணாமற் போயிருக்கும். அதேபோலவே சுமந்திரனுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சம்பந்தர் விக்கினேஸ்வரனுக்கு அளித்திருந்தால் தமிழ் மக்கள் பேரவை என்பது தோன்றியிருக்கவே மாட்டாது.
இன்று புலிகளும், ஆயுததாரிகளின் பேயாட்டமும் இல்லை. சாத்தியமான அரசியற் தீர்வை சட்டமாக்க வேண்டியது பாராளுமன்றமே. அதனை நேர்மையோடு நிறைவேற்ற வேண்டியது கொழும்பு மைய அரசாங்கமே. இந்த இரண்டும் நடக்குமாயின் நடைமுறைக்கு உகந்த அரசியற் தீர்வு சாத்தியமே. இன்று அதிதீவிர தமிழ்த் தேச வாதம் பேசுபவர்களெல்லாம் பதவிகளுக்கும் பணத்துக்கும் வீர வசனங்களுடன் நாடகம் போடும் போலிகளே. இவர்கள் தியாகிகள், துரோகிகள் எனும் அழுகிப் போன வார்த்தைகளில் தங்களது உழுத்துப் போன அரசியலை ஓட்டப் பார்க்கிறார்கள். எந்தவொரு அரசியற் தீர்வு நடைமுறைக்கு வந்தாலும் இவர்கள் அந்தத் தேர்தல்களில் பங்கு பற்றி உறுப்பினராவதற்கும், அதனால் கிடைக்கும் சொகுசு வாகனங்கள் மற்றும் சுகங்களை அடைவதற்கும் திருவிளையாடல் தருமி போல செயற்படுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
கேள்வி 8:-
தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய புதிய தலைமைத்துவத்தின் அவசியம் தற்போது உணரப்பட்டிருக்கிறதே?
பதில்:-
தமிழ் மக்களுக்கு என்ன நம்பிக்கையைத் தரக்கூடிய தலைமை தேவை என்பதில் தெளிவில்லாமல் புதிய தலைமை பற்றி பேசுவது அபத்தமானதாகும். இருபது ஆண்டுகளாக தமிழீழ நம்பிக்கையை ஊட்டி இழப்பையும் அழிவையுமே தந்த தலைமையானது தமிழ் மக்களுக்குக் கிடைக்கக் கூடியவற்றையெல்லாம் கிடைக்க விடாமல் பண்ணி விட்டது மட்டுமல்லாது கடைசியாக எஞ்சியிருந்தவற்றையும் நாசம் பண்ணி;விட்டு போய்விட்டது.
பின்னர் “வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்துக்கு சம~;டி அடிப்படையிலான சுயநிர்ணய தமிழரசை” நிறுவவும்”,“சர்வதேச விசாரணை நடத்தி ராஜபக்~hக்களை கூண்டில்” ஏற்றவும், இராணுவத்தை வடக்கு கிழக்கை விட்டு வெளியேற்றவும் சர்வதேசங்கள் தமக்கு துணையாக நிற்பதாகவும், இந்தியா தமக்கு தோள் கொடுக்க தயாராக இருப்பதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து கடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இப்போது அம்பலப்பட்டு நிற்கிறது.
இப்போது அடுத்துவரும் தேர்தல்களில் வெல்லுவதற்காக புதிய போலி வேடங்களைப் போட்டுக் கொண்டு பொய்களையும் புழுகு மூட்டைகளையம் அவிழ்த்து விட்டு தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற புதிய தலைமைத்துவம் அவசியமே இல்லை. அவ்வாறானவர்கள் தேர்தல் வசிய வியாபாரிகளே தவிர மக்களின் நலன்களுக்கான தலைவர்களாக மாட்டார்கள்.
மக்களின் அடிப்படை உரிமைகள், இனங்களுக்கிடையில் உண்மையான சமத்துவத்தின் அடிப்படையிலான நல்லிணக்கம், மாநில சுயாட்சி அதிகாரங்களை அடிப்படையாகக் கொண்ட மாகாண சபைகள், முற்போக்கான பொருளாதார முன்னேற்றம், நீதியான சமூகக் கட்டமைப்பு, காத்திரமான சட்டத்தின் ஆட்சி, உண்மையான மக்களாட்சி அரசமைப்பு ஆகியவற்றிற்காக தம்மை அர்ப்பணித்து செயற்படும் தலைமையே இன்றைய தேவை. பரந்துபட்ட மக்களின் நலன்களை இலக்காகக் கொண்ட புதிய தலைமைத்துவமே மக்களின் நம்பிக்கைகளைத் திரட்ட வேண்டும்.