வறுமையின் பரிசு கல்விக்கு விடை

அபிவிருத்தி அடைந்து வரும் ஏனைய நாடுகளை விட, இலங்கையானது, ஏற்கெனவே 30 வருட யுத்தம் அதிலிருந்து மீண்டு கொஞ்சம் தலைதூக்கிய போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அதனைத் தொடர்ந்து தற்போது ஒன்றரை வருடங்களாக கொரோனா தாக்கம் என்பவற்றிலிருந்து மீழெழ முடியாமல், பாரிய பொருளாதார சரிவுக்கு முகம் கொடுத்துள்ளது.

ஒரு நாட்டின் பொருளாதார சரிவு என்பதை அந்தத்துறையுடன் தொடர்புபட்டவர்கள் மாத்திரமே உணர்ந்த காலம் மாறி, இன்று நாட்டில் சாதாரண படிப்பறிவு இல்லாதவன் கூட, நாட்டின் பொருளாதார நிலை குறித்து பேசும் அளவுக்கு, நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் வீழ்ந்துள்ளது.

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, எவ்வளவு மோசமாகி வருகிறது என்பதை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருள்களின் விலையேற்றம் மற்றும் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடுகளே உணர வைப்பதுடன், ஒரு வித அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

அதாவது, எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, அதனைத் தொடர்ந்து அறிவிக்கப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் என்பவற்றால், நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு விட்டது அல்லது பஞ்சம் ஏற்படப் போகின்றது என்பதை, அண்டை நாடான தென்னிந்திய ஊடகங்கள் வரிக்குவரி, நொடிக்கு நொடி கூறுவதைக் கேட்டு இலங்கையர்கள் பீதியடைந்துள்ளனர்.

இலங்கையில் 1978ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாநாயக்கவின் ஆட்சியில், இறக்குமதி பொருளாதாரம் தடை செய்யப்பட்டவுடன், நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது என்பதை, 1980களுக்கு முன்பு பிறந்தவர்கள் கூறுவதை 1980க்குப் பிற்பாடு பிறந்த அனைவரும் கேட்கமட்டும் தான் செய்துள்ளோம்; அனுபவிதத்தில்லை.

ஆனால், நாடு மீண்டும் 1978ஆம் ஆண்டு யுகத்தை நோக்கிச் செல்கின்றதா என நினைத்துப் பார்க்கும் போது உடல் சிலிர்க்கின்றது. பஞ்சம் என்ற வார்த்தையை, செவிகளால் கேட்ட எமக்கு அதனை அனுபவிக்கப் போகிறோமா என்ற அச்சம் ஒரு புறமிருக்க, நாம் அனுபவித்த வறுமையை எமது குழந்தைகளும் அனுபவிக்க கூடாது என்ற எண்ணத்தில், தற்போதைய பிள்ளைகள் எதைக் கேட்க நினைத்தாலும் அவர்கள் கேட்டு முடிக்கும் முன்னமே வாங்கி வைத்து விடும் பெற்றோரின் குழந்தைகள், பஞ்சம் என்ற வார்த்தைக்கு அகராதியை புரட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

உண்மையில், உணவுப் பஞ்சம் ஏற்படப் போகிறது என்ற வெளிவரும் தகவல்கள் பொய்யல்ல என்பதை இப்போதைய இளைய சமூகமும் அதிகம் உணரும் வகையில், நாட்டில் காணப்படும் அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாடு உணர்த்தி வருகின்றன.

எனவே, தான் இந்த உணவுப்பொருள்களின் தட்டுப்பாட்டால் வறுமையின் தாண்டவத்துக்கு முகக்கொடுக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் எதிர்கால தலைவர்களான இன்றைய மாணவர்கள், கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வறுமையை அனுபவிப்பவனுக்கே அதன் வலி புரியும். வறுமைக்கு மத்தியில் கல்வியாவது பட்டமாவது முதலில் ஒரு வேளைக்காவது வயிற்றை நிரப்புவதற்கு வழியைப் பார்ப்போம் என, கல்விக்கு ‘குட்பாய்’ சொல்லி வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஒன்றரை வருடங்களாக நாட்டில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, எப்போதும் கல்வியில் ஒரு பின்தங்கிய சமூகம் யாரென்றால், அது மலையக சமூகம் எனத் தயக்கமின்றி விரல் நீட்டப்படும். ஆனால், இந்த அவலநிலையை மாற்றும் வகையில், கடந்த இரண்டொரு தசாப்தங்களாக மலையக கல்வி, பாரிய வளர்ச்சியடைந்து வந்துள்ளதைப் பல விடயங்கள் சான்று பகிர்ந்துள்ளன.

எனவே, கல்வியால் மாத்திரமே எமது சமூகத்தை மாற்ற முடியும் என்ற உத்வேகம், உண்மையில் இன்று மலையக சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஆனால், இன்றைய கொரோனா நிலை, அதனால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார வீழ்ச்சி என்பது, மலையக கல்வி சமூகத்தை மீண்டும் 1980ஆம் ஆண்டுக்கு இழுத்துச் சென்றுவிடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

அதாவது, மீண்டும் மலையகத்தில் கொரோனாவால் ஏற்பட்ட வறுமையை காரணம் காட்டி மாணவர்கள் பாடசாலை கல்விக்கு முற்றப்புள்ளி வைப்பது அதிகரித்து வருகின்றது.

கொரோனாவால் ஏற்பட்ட வறுமை மட்டுமல்ல. இன்று எமது நாட்டின் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அவலமும் மாணவர்களின் மனங்களை திசை திருப்பியுள்ளமையே நிஜம்.

குறிப்பாக, உயர்தரம் கற்கும் மாணவர்கள், சாதாண தர பரீட்சை எழுதிவிட்டு, பல மாதங்களாக பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்கள் மாத்திரமின்றி, பல ஆசிரியர் பயிலுநர்கள் கூட, தமக்கான வருமானத்துக்காக கூலிவேலைகளை நாடத் தொடங்கியுள்ளதாக அறியக் கிடைக்கின்றது.

கொரோனாவால் பாடசாலைகள் பூட்டப்பட்டாலும் விரும்பியோ விரும்பாமலோ நிகழ்நிலைக் கற்றலுக்காகவேணும் சில பல மணித்தியாலங்களை கல்விக்காக அர்ப்பணித்த மாணவர்கள் இன்று நிகழ்நிலை கற்றலுக்கும் சிலரது பிடிவாதங்களால் சாவு மணி அடிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலிருந்து வெட்டியாய் பொழுதைப் போக்குவதற்கு பதிலாக, ஏதாவது தொழிலுக்கு சென்று குடும்ப வருமானத்துக்கு கைக்கொடுக்கலாம் என தீர்மானித்து, பல தொழில்களை நாடிச் சென்றுள்ளனர்.

இதில் பெரும்பாலான மாணவிகள், ஆடைத் தொழிற்சாலைகளை நோக்கி நகர்ந்துள்ள நிலையில், மாணவர்கள் அன்றாட கூலி வேலைகளான குறிப்பாக தச்சுத் தொழில், விவசாய நிலங்களில் கூலித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

மலையைகத்தில் இவ்வாறு மாணவர்கள் கூலித் தொழிலில் ஈடுபடுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் ஆசிரியர்களுக்கான பிரத்தியேக வீடுகள் (குவாட்டர்ஸ்களில்) தங்கியிருக்கும் ஆசான்களோ அந்த பிரதேசத்திலுள்ள சில மாணவர்களை கற்பித்து தருவதாக அழைத்து, அவர்களது வீட்டு வேலைகள், வீட்டு தோட்டங்களில் மரக்கறி செய்கைகளில் ஈடுபடுத்துகின்ற அவலமும் மலையகத்தில் அரங்கேறுகின்றன.

அதேபோல், மொனராகலை போன்ற பகுதிகளிலும் மாணவர்கள் கரும்பு சேனைகளுக்கு நாட்கூலிகளாக சென்றிருப்பது வேதனைக்குரிய விடயமாக இருந்தாலும் இவர்களுள் பலர் மீண்டும் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பித்தால் கூலித் தொழில்களை கைவிட்டுவிடுவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்கள் எப்போதும் பல அவலங்களுக்கு மத்தியில் தான் வாழ்ந்து வருவார்கள். இதை காலம் காலமாக அங்கு தமிழர்களுக்கு எதிராக அரங்கேரும் சம்பவங்கள் வெளிச்சம் போட்டு காட்டும். எனவே, இங்குள்ள தமிழர்களின் தலைவிதியை மாற்ற வேண்டுமாயின் அது கல்வியால் மாத்திரமே முடியுமென நாளை தலைவர்களான இன்றைய மாணவர் சமூகம் உணர்ந்தாலும் பற்பல காரணங்களால் வெறுமனே உணர்வற்ற உணர்வுகளாக மாத்திரமே காணப்படுகின்றது.

இன்று, இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்விக்கு நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ விடைகொடுக்கும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

அதாவது இந்த மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளதை பயன்படுத்திக்கொள்ளும் சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் இம்மாணவர்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி, அவர்களது தேயிலைத் தோட்டங்களில் பணிக்கு அமர்த்துவதுடன், அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் உரியமுறையில் வழங்குவதில்லை என தெரியவந்துள்ளன.

மாத்திரமின்றி சில மாணவர்கள் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர கடமைகளுக்காக செல்வதுடன், சில பெற்றோர் தமது பிள்ளைகளை தம்முடனேயே தொழிலுக்கும் அழைத்துச் செல்லும் சம்பவங்களும் பதிவாகின்றன.

ஆனால் இவ்வாறு கூலி வேலைகளை நாடத் தொடங்கியுள்ள மாணவர்களுள் பலர், பாடசாலைகள் காலவரையின்றி பூட்டப்பட்டுள்ளதால் தான் கூலி வேலைகளுக்கு செல்கின்றோம். பாடசாலைகள் திறக்கப்பட்டு கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டால் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்லும் எண்ணம் இருப்பதாக தெரிவித்திருந்தாலும் அது சாத்தியமாகுமா என்பதே எமக்கிருக்கும் கேள்வி.

அதாவது கையில் நான்கு பணத்தை உழைத்து அதனால் அவனது குடும்பத்திலுள்ளவர்களின் பசியை ஒரு நாளுக்கேனும் அவனது உழைப்பு போக்கியிருக்குமாயின், அதனால் ஏற்படும் குடும்ப மகிழ்ச்சியை அவன் இழக்க விரும்பமாட்டான். அதனால் தொடர்ச்சியாக அவனது மனம் சம்பாதிப்பதை தான் விரும்பும். தொடர்ந்து குடும்பத்துக்கு சுமையாக இருக்காமல், குடும்பத்தை சுமக்கும் நிலைக்கு தள்ளப்படுவான் இதுவே யதார்த்தம்.

எனவே, இரத்தினபுரி மாவட்டம் மாத்திரமல்ல. அது மலையமாக இருக்கலாம். அல்லது வேறு பிரதேசங்களாக இருக்கலாம். எந்த பிரதேசத்திலுள்ள மாணவர்கள் தமது கல்விக்கு விடைகொடுத்து விட்டு, தொழில்களை நாடிச் செல்வார்களானின் அது அந்த சமூகத்தை பல வருடங்கள் பின்னோக்கி நகரத்திவிடும் என்பதில் ஐயமில்லை.