வாதங்களும் விதண்டாவாதங்களும்

1978 ஆம் ஆண்டு பாடசாலை நாட்களில் ஒரு நாள் மத்தியானம் வீடு சென்று அவசரமாக பாடசாலை திரும்பினேன்.அப்போது வழியில் நடந்து வந்த ஒருவர் என்னை மறித்து என் சைக்கிளில் ஏற்றி செல்லமுடியுமா எனக் கேட்டார்.நான் அப்படி யார் கேட்டாலும் மறுக்காமல் ஏற்றிச் செல்வது வழக்கம்.எனவே மறுப்பின்றி ஏற்றினேன்.

அவரின் பேச்சில் சிங்களம் என புரிந்தது.எங்கே போய் வருகிறீர்கள் எனக் கேட்டேன்.அப்போது அவர் தன் பெயர் ஜி.எஸ். பொன்சேகா எனவும் ,தான் ஒரு ஜே.வி.பி உறுப்பினர் எனவும் இப்போது வடபகுதிக்கு பொறுப்பாக இயங்குவதாகவும் கூறினார்.

இங்கே சில தமிழ் இளைஞர்களை காணவந்ததாகவும் ஆனால் முடியவில்லை எனவும் கூறினார்.என்னை நீங்கள் ரீ.யு.எல்.எப் ஆதரவாளரா எனக் கேட்டார்.நான் இல்லை.எனக்கு சண்முகதாசனைப் பிடிக்கும் என்றேன்.

கட்சிக்காக ஒரு பொதுக்கூட்டம் நடத்த விரும்புகிறோம்.அதற்கு தமிழ் இளைஞர்களின் ஆதரவை தேடுகிறோம் என்றார்.தமிழர்களின் பிரச்சினைகளை தாங்கள் உணர்ந்தே அவர்களுடன் பேச விரும்புகிறோம்.ஆனால் அவர்கள் தயாராக இல்லை என்றார்.

(அவர் சிறை மீண்ட முதலாவது ஆயுதம் தரித்த போராளி திசவீரசிங்கம் அவர்களையே சந்திக்க வந்திருக்கிறார் என விளங்கிக் கொண்டேன்)

இது தொடர்பாக சந்ததியாருடன் தொடர்பு கொண்டபோது அவர் முதலில் பொது மேடையில் விவாதத்துக்கு அழைத்தார்.ஆனால் நாங்கள் அதை விரும்பவில்லை.ஏனென்றால் வாதம் என வரும்போது விதண்டாவாதங்களே தோன்றும்.எனவே வாதங்கள் மூலம் பிரச்சினைகளை விளங்கமுடியாது என கூறினோம் .சந்ததியார் ஏற்கவில்லை என்றார்.பிரச்சினைகளை வாதங்களால் தீர்க்கமுடியாது.சில வேளை வாதங்களில் நாங்கள் வெல்லலாம் .அல்லது அவர்கள் வெல்லலாம்.ஆனால் தீர்வு அதுவல்ல என எனக்கு தெளிவாக விளக்கினார்.

எனக்கு பின்னேர வகுப்பை மறந்து அவருடன் கழித்தேன்.1989 இல் கொழும்பில் கண்டேன்.பேசமுடியவில்லை.

தமிழ் உச்சரிப்பு வித்தியாசமாக இருந்தாலும் என்னைவிட நல்ல தமிழ் சொற்களைப் பாவித்து உரையாடினார் .பல ஆண்டுகள் கழித்து அவரின் கருத்தை நான் மீளாய்வு செய்தேன்.அவர் சொன்ன கருத்துக்கள் எவ்வளவு ஆழமானவை.
எனவே பிரச்சினைகளை மையமாக வைத்து வாதங்கள் செய்வதில் அர்த்தம் இல்லை.

அதன் பின்பு ஜே.வி.பி பொதுக்கூட்டம் ஒன்றை முற்றவெளியில் நடாத்தியது.ஒரு ஆயுத புரட்சியாளர் என்பதால் ரோகண விஜயவீர அவரகளைப் பார்க்க பெருமளவிலான இளைஞர்கள் வந்தனர்.

இந்தப் பொதுக் கூட்டத்தை பொது இடங்களில் வைக்காமல் மண்டபம் ஒன்றில் வைக்கும்படி தமிழ் இளைஞர் பேரவை கூறியது.இதை ஜே.வி.பி நிராகரித்தது.இதனால் ஆத்திர மடைந்த இளைஞர் பேரவையைச் சேர்ந்த சிலர் கல்வீச்சை ஏற்பாடு செய்தனர்.இதனால் ரோகண விஜயவீராவின் மண்டை உடைந்தது.இரத்தம் சொட்டிய நிலையிலும் அவர் பேச்சை நிறுத்தவில்லை.பேசி முடித்தே மேடையை விட்டு இறங்கினார்.

இதில் சம்பந்தப்பட்டவர்களே சொன்னார்கள்.கல்லெறிந்தவரைத் தவிர ஏற்பாட்டாளர்களை எனக்குத் தெரியும்.
(விஜய பாஸ்கரன்)