“வாப்பா”…….

உதடுகள் துடிக்க “வாப்பா” என்று அழுகிறாள்.

இதயத்தை ஒற்றை நாளத்தில் பிடித்து இழுத்து வெளியில் போட்டுவிட்டதுபோல ஒரு கணம் உணர்கிறேன். சுற்றிலும் எல்லா சத்தங்களும் காற்றிலிருந்து விடைபெற்று சென்றுவிட்டது.அவள் அழைக்கின்ற “வாப்பா” என்ற சொல்தான் திரும்ப திரும்ப கேட்ட வண்ணமுமிருக்கிறது. உலகத்திலேயே கொடியதொரு சத்தமாக அது திரும்ப திரும்ப என் காதுகளில் இப்போதுவரை ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.

அந்த சத்தமும் அவளது அழுகையும் அந்த நடுக்கமும் இதயத்தை சுருள் சுருளாக வெட்டி வெயிலில் போட்டுவிட்டதுபோலிருக்கிறது.

ஆனால், இவளது முகத்தை போனவருடமும் பார்த்தேன்.

சிறையிலிருந்து வந்து தனது மனைவியின் மரணச்சடங்கில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஆனந்தசுதாகரனின் மகள் தானும் சிறைக்கு போகப்போவதாக சிறைச்சாலை வாகனத்தில் ஏறினாளே! அவள் முகத்திலும் இந்தக்கொடூரமான அழுகையை பார்த்தேன். தகப்பனை இழந்துகொண்டிருந்த அந்த இறுதிக்கணங்கள் அவள் கண்களில் எப்படியெல்லாம் வெடித்து வழிந்துகொண்டிருந்தது என்பதைப்பார்த்தேன்.

இந்தச்சம்பவங்கள் எல்லாமே வெவ்வேறு சூழ்நிலைகளில் நடைபெறுகின்றன. அவற்றுக்கு வெவ்வேறு ஆட்களை காரணமும் காட்டுகிறோம்.

ஆனால், இந்தக்குழந்தைகள் கேட்பவற்றை கொடுப்பதற்கு எம்மிடம் ஒன்றுமேயில்லை என்கின்றபோதும் அந்தக்குரல்களை கேட்கும்போது நாங்கள் எங்கே நின்றுகொண்டிருக்கிறோம் என்று நினைக்கும்போதுதான் உலகின் அத்தனை புனிதங்களும் தகர்ந்துபோகின்றன. மானிட நேயம், மனுநீதி என்றும் போலியாக கட்டி புழுவேறிப்போயிருக்கும் அத்தனை அழுக்குகளும் எங்களை அம்மணமாக்கிவிடுகின்றன.

இன்னமும் அவள் அழைத்துக்கொண்டுதானிருக்கிறாள்.

“வாப்பா……”