ஹிட்லரை உருவாக்கியவர்களே தேசிய இனப்பிரச்சனையையும் உருவாக்கிய ஆதாரம்!

ஜேர்மனியில் ஹிட்லரும் இத்தாலியின் முசோலீனியும் இந்த உலகின் இரக்கமற்ற சர்வாதிகாரிகளாகக் கருதப்படுகிறார்கள். இந்த இரண்டு சர்வாதிகாரிகள் தோன்றியதன் அரசியல் பின்னணி மட்டும் ஆராயப்படுவதில்லை. பெரும்பாலான சாமானியர்களிடமிருந்து இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. இலங்கையில் தேசிய இன ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான போராட்டங்களும் தோன்றிய வரலாற்றை ஓரளவு அறிந்து வைத்திருக்கிறோம் ஆனால் அது தோன்றியதற்கான ஆழமான அரசியல் பின்னணி இருளுக்குள் புதைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கும் மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தகவல்களையும் அதன் பின்புலத்தையும் அறியும் உரிமை மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஜேர்மனியில் நடந்தது என்ன?

உலகம் முழுவதுமிருந்த அதிகாரவர்கத்திற்கு 1920 ஆம் ஆண்டிற்குப் பின்னான ஜேர்மனி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. 1917 ஆம் ஆண்டு சோவியத் புரட்சியைத் தொடர்ந்து ஜேர்மனிய உழைக்கும் வர்க்கம் தன்னை ஒழுங்கமைத்துக்கொண்டது. சோவியத் ஒன்றியத்திற்கு வெளியே அதிக பலம் மிக்க முதலாவது கம்யூனிஸ்ட் கட்சி ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சியாகவே கருதப்பட்டது. அக்காலப் பகுதியில் உலகத்தைத் தின்றுகொண்டிருந்த பொருளாதார நெருக்கடியில் முதலில் சிக்குண்டு அழிந்து போனவர்கள் உழைக்கும் மக்களே. 1929 ஆம் ஆண்டு மாபெரும் பொருளாதார நெருக்கடி வால் ஸ்ரிட் ஐ உடைத்து விழுத்தியது. பெரு நிறுவனங்கள் சரிவடைய ஆரம்பித்தன. ஜேர்மனியில் மத்தியதர வர்க்கத்தின் சேமிப்பு பண வீக்கத்தால் வலுவிழக்க ஆரம்பித்தது. முதலாளித்துவப் பாராளுமன்ற ஆட்சி முறையில் மக்கள் நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்.
கம்யூனிஸ அமைப்புமுறை மக்கள் மத்தியில் பிரபலமடைய ஆரம்பித்தது. ஜேர்மனி முழுவதிலும் போராட்டங்கள் ஆரம்பித்தன. மக்க்களின் எழுச்சிக்கு அதிகாரவர்க்கம் முகம்கொடுக்க முடியாமல் திண்டாடியது. சோவியத் புரட்சிக்குப் பின்னர் ஜேர்மனியில் புரட்சி தோன்றும் என மக்கள் பற்றுள்ளவர்கள் எதிர்வுகூறினர். ஜேர்மனியில் சோசலிச ஆட்சி தோன்றியிருந்தால் ஐரோப்பா முழுவதும் சோசலிச அரசாக மாறுவதற்கு நாளெடுத்திருக்காது. இந்த நிலையைத் தற்காலிகமாகவேனும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு மக்களை ஒடுக்கும் முதலாளித்துவ அதிகாரவர்க்கம் தள்ளப்பட்டது. அதற்காக உருவாக்கப்பட்டவரே ஹிட்லர்.

இலங்கையில் சுய நிர்ணைய உரிமைப் போராட்டத்தை இனவாதிகளும், ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் கைப்பற்றியது போன்றே ஹிட்லரும் கம்யூனிஸ்ட் கட்சியைக் கைப்பற்றினார். கம்யூனிஸ்டுக்களை ஒத்த முழக்கங்களை முன்வைத்தார். சோசலிசமே தனது கொள்கை என்றார். புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி ஜேர்மனியத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிக ஊதியமும் வழங்குவேன் என்றார். ஜேர்மனியர்களின் இறுதித் தொழிற்சாலைகளும் அழிக்கப்படுகின்றன என்றும் அவற்றைத் தான் மீட்பேன் என்றார். இவ்வாறு தொழிலாளர்களதும் உழக்கும் மக்களதும் கவனத்தை ஈர்த்த ஹிட்லர், அவர்களை யூதர்களுக்கு எதிரானவர்களாக மாற்றினார். ஜேர்மனியர்களின் பொருளாதார நெருக்கடிக்கு யூதர்களே காரணம் என்றார்.

ஜேர்மனிய ஆரியர்கள் உலகத்தை ஆளப்பிறந்தவர்கள் என்று அப்பாவி மக்களை நச்சூட்டினார். ஹிட்லரின் நாஸிக் கட்சியின் 40 வீதத்திற்கு மேலான உறுப்பினர்கள் தொழிலாள வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவிருந்தனர். ஹில்லரைக் கண்ட உலக முதலாளித்துவவர்க்கம், நெருக்கடியத் தற்காலிகமாகத் தீர்ப்பதற்கு ஹிடலருக்கு ஆதரவு வழங்க ஆரம்பித்தது. ஆம் ஆண்டு ஹிட்லரின் மாபெரும் தேர்தல் வெற்றியின் பின்னர், அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் இராணுவ தளப்பாடங்களில் முதலிட ஆரம்பித்தன. அப்பாவி யூதர்களைக் கொன்று குவித்து இரண்டாவது உலக யுத்தத்தைத் தோற்றுவிப்பதற்கான அத்தனை உதவிகளுக் ஹிட்லருக்க வழங்கப்பட்டன.

Ford, General Motors, General Electric, Standard Oil, Texaco, ITT மற்றும் IBC போன்ற அமெரிக்காவின் பெரு நிறுவனங்கள் ஜேர்மனியில் தமது முதலீடுகளைப் பாரிய அளவில் ஆரம்பித்தன. Bosch, Mercedes, Deutsche Bank, VW இவற்றில் ஐ.பி.எம் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை அடிமை வேலையாட்களாகப் பயன்படுத்திக்கொண்டன. ஹிட்லர் அரசும் அமெரிக்க அரசும் இந்த மனித குல விரோத நடவடிக்கைகளில் இணைந்தே செயற்பட்டன. போன்ற நிறுவனங்கள் மூன்று லட்சம் அடிமைக் கூலிகளைப் பயன்படுத்திக்கொண்டன. இதனால் இந்த நிறுவனங்கள் திடீர் வளர்ச்சிபெற்றன. ஐ.பீ.எம் அரச எதிரிகள் எனக் கருதப்பட்டவர்களையும் யூதர்களையும் வகைப்படுத்துவதற்கான புதிய தொழில் நுட்பம் ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தது. ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களில் ஒன்றை நடத்திய குடும்பத்தைச் சார்ந்தவர்களே இன்று பீ.எம்.டபிள்யூ வாகனத்தயாரிப்பில் ஈடுபடுகின்றனர்.

சரிந்து விழுந்துகொண்டிருந்த உலகப் பொருளாதாரம் ஆயுத விற்பனையிலும் மனிதப்படுகொலைகளிலும் மீட்சிபெற ஆரம்பித்தது. சோவியத் ரஷ்யாவில் ஹிடல்ரின் படைகள் தோல்வியைத் தழுவிக்கொண்டிருந்த போதே அமெரிக்கா தலையிட்டு ஹிட்லரை அழித்து தனது நிறுவனங்களைக் காப்பாற்றியது. முழுமையான மக்கள் ஜனநாயகமும், அடித்தட்டு மக்கள் வரையும் சென்ற தேர்தல் முறையைக் கொண்டிருந்த சோவியத் ரஷ்யாவை சர்வாதிகாரம் என அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்தது. இன்று வரைக்கும் ஹிட்லரை வெற்றிகொண்ட சோவியத் யூனியனின் பங்களிப்பு மூடி மறைக்கப்பட்டு,

ஹிட்லரை வளர்த்துப் பாதுகாத்த அமெரிக்க ஏகதிபத்தியத்தை ஹிட்லரை அழித்த வல்லரசு என உலக மக்கள் மத்தியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் உலக முதலாளித்துவமும் எதிர்பார்த்தது போன்றே ஜேர்மனியில் சோசலிசப் புரட்சி அழிக்கப்பட்டது. இன்று சோசலிச ரஷ்யா முதலாளித்துவ மாபியா அரசாக மாறிவிட்டது. மன்னர் கால நிலப்பிரபுத்துவ ஆட்சியிலிருந்து முதலாளித்துவம் தோன்றிய போது அதற்கு முற்போக்கான பாத்திரமிருந்தது. முதலாளித்துவத்திலிருந்து சோசலிசம் தோன்றுவதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகள் அதன் தோற்றத்தைத் தற்காலிகமாகப் பின் போடுகின்றது.
இலங்கையில் நடந்தது என்ன?

இதற்கு சமாந்தரமான அரசியல் வரலாற்றை இலங்கையில் காணலாம். பிரித்தானியக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்ட ஏனைய மூன்றாமுலக நாடுகளிலிருந்து இலங்கை சற்று வேறுபட்டது. அதற்கு இலங்கையின் சமூகச் சூழலும் ஒரு காரணம் எனலாம். 70 களில் இலங்கையின் வளர்ச்சியைக் கண்டு பிரமித்துப் போன சிங்கப்பூரின் பிரதமர் லீ குவான் யூ இலங்கையில் தனது குழுவுடன் தங்கியிருந்து அதன் வளர்ச்சிக்கான காரணத்தை ஆய்வு நடத்தினார். பிரித்தானியப் பல்கலைக் கழகங்களின் சமூகவியல் மற்றும் மனிதவள ஆய்வுகளின் பிரதான மையமாக இலங்கை காணப்பட்டது. இலங்கையின் வளர்ச்சிக்கான காரணத்தை ஆய்வு செய்வதற்காக பல்வேறு புலமைப் பரிசில் திட்டங்கள் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டன.

பெருந்தோட்டத் தொழிற் துறையும், விவசாயப் பொருளாதாரமும் ஏனைய மூன்றாமுலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையை புதிய தொழில் வளர்ச்சியை நோக்கி வளர்த்துச் சென்றன. இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி அறிவுசார்ந்த உழைக்கும் மக்கள் பகுதி ஒன்றைத் தோற்றுவித்தது. இவர்கள் மத்தியிலிருந்து போராட்டங்கள் ஆரம்பித்தன. இலங்கை மாவோயிசக் கட்சியில் தொழிற்சங்கம் அந்த நாட்டின் மிகப்பெரியதாகத் திகழ்ந்தது. மலையகத்தில் செங்கொடிச் சங்கம் பல்வேறு புரட்சிகரப் போராட்டங்களை நடத்தியது. சண்முகதாசனின் தலைமையில் வழிநடத்தப்பட்ட சமூக மாற்றத்திற்கான இந்த இயக்கங்களுக்கு எதிராக தேசிய இன முரண்பாடு திட்டமிட்டுத் தூண்டப்பட்டது.

சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களின் அரசிற்கு எதிரான எழுச்சிக்கு எதிராக அவர்களைக் கூறுபோட்டுப் பலவீனப்படுத்தும் அதிகாரவர்க்கங்களின் சூழ்ச்சிக்கு எதிராகச் சுயநிர்ணைய உரிமைக்கான போராட்டம் ஒன்றே தீர்வு என்ற முடிவிற்கு தமிழ்ப் பேசும் மக்கள் வந்து சேரும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தை அழித்து அதனை இனவாதமாக மாற்றும் திட்டம் தமிழரசுக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவற்றின் ஊடாக நடத்தப்பட்டது. சண்முகதாசன் தலைமையில் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் யாழ்ப்பாணத்தில் நடந்துகொண்டிருந்த போது, தமிழீழம் கேட்ட தமிழரசுக் கட்சி சிங்கள அதிகாரவர்க்கத்துடன் இணைந்து அப்போராட்டத்தை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டது. யாழ்ப்பாணம் வியற்னாமாக மாறுகிறது என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சி முறையிட்டது. பிரிந்து செல்லும் உரிமைக்கான போராட்டமும் தமிழரசுக் கட்சியின் அரசியல் தொடர்ச்சியாகவே ஆரம்பமாகி முள்ளிவாய்க்காலில் அது முற்றாக அழிக்கப்பட்டது.சிறுபான்மைத் தரகு முதலாளிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் இலங்கை அரசிற்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் எதிரான போராட்டமாக மாற்றப்பட்டு தேய்வடைந்து அழிந்து போனது.

ஆக, இலங்கையில் தேசியப் பொருளாதார வளர்ச்சியும் உழைக்கும் மக்களின் எழுச்சியும் தெற்காசியப் பிரதேசம் முழுவதும் தமது ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாறும் வலுக்கொண்டது என அச்சமடைந்த ஏகாதிபத்திய நாடுகளும் இந்திய அதிகாரவர்கமும் தேசிய இன முரண்பாட்டைக் கூர்மைப்படுத்தி அதற்கு எதிரான போராட்டத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்துக்கொண்டன. இறுதியில் தமது தேவை முடிந்ததும் இலட்சக்கணக்கான அப்பாவிகளோடு போராட்டத்தை அழித்து தமது இரத்த வெறியைத் தீர்த்துக்கொண்டன. அழிப்பின் பின்னர் ஏகாதிபத்திய இரத்தக் காட்டேரிகளுடன் இணைந்துகொண்ட புலம்பெயர் அமைப்புக்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் விக்னேஸ்வரன் போன்ற தனிநபர்கள் அழிப்பின் தொடர்ச்சியை நடத்தி முடிக்கும் முகவர்களாகச் செயற்படுகின்றனர்.
இன்றைய அமெரிக்கா

இன்று உலகம் மீளமுடியாத அமைப்பியல் நெருக்கடியை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இராணுவப் பொருளாதாரம் ஹிட்லர் காலத்தைப் போன்று மீண்டும் முக்கியத்துவம் பெற ஆரம்பித்துள்ளது. நாஸிகளும் மனிதப் பேரழிவுகளுன் அமெரிக்கா உட்பட ஏகாதிபத்தியங்களின் அடிப்படைத் தேவையாக எழுந்துள்ளது. மீண்டும் உலக அழிவை ஏற்படுத்த அமெரிக்க அதிகாரவர்க்கம் ஹிட்லருக்கு இணையான நாஸி ஒருவரை தனது பிரதிநிதியாக களமிறக்கியுள்ளது. எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சமூகவிரோதி டொனால்ட் ரம்ப் மெக்சிகோ நாட்டுக் குடியேறிகளுக்கும், அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும், கறுப்பினத்தவர்களும் எதிராக மேடைகளில் முழங்கி வருகிறார். அமெரிக்கா மட்டுமல்ல உலகம் முழுவதும் தோன்றியுள்ள முதலாளித்துவ எதிர்ப்பு நடவடிக்கைகளால் அதிகாரவர்க்கம் அச்சமடைந்துள்ளது. அதனை எதிர்கொள்ளப் போர் வெறியத் திணிக்கிறது. அமெரிக்க மக்களின் எதிர்ப்பின்றி உலகை இராணுவ மயப்படுத்த ஏகாதிபத்தியங்களின் ஏகப்பிரதிநிதியாக டொனால்ஸ் ரம்ப் உதையமாகியுள்ளார். ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற பீரீஎப் இன் உப பிரிவு போன்றே ரம்ப் இற்கான தமிழர்கள் என்ற அவமானகரமான அமைப்பைத் தோற்றுவித்து அமெரிக்க உளவாளிகளான தமிழ் அமைப்புக்கள் செயற்பட்டாலும் வியப்படைவதற்கு இல்லை.

(வியாசன்)