படகில் பயணம் செய்து விமானத்தில் திரும்பினர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இலங்கை பிரஜைகள் ஐவர், நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள், அவுஸ்திரேலியா எஸ்.எக்டி 01 என்ற விசேட விமானத்தின் மூலமாக, நேற்று திங்கட்கிழமை நாடு திரும்பினர். இந்த குழுவினர், பேருவளை பிரதேசத்திலிருந்து வியங்க என்ற படகிலேறி ஜனவரி மாதம் 8ஆம் திகதியன்று அவுஸ்திரேலியா நோக்கி பயணமாகினர். அதன்பின்னர், அவுஸ்திரேலிய கடல் எல்லையில் வைத்து அவர்கள், அந்நாட்டு கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள், அந்நாட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். அதன் பின்னரே அவர்கள், இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், தாங்கள் மீனவர்கள் என்றும், மீன்பிடித் தொழிலுக்காகப் பயணம் செய்துகொண்டிருக்கையில் படகு விபத்துக்குள்ளாகி மிதந்துகொண்டிருக்கையில், அவுஸ்திரேலியக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய குடிவரவு அதிகாரிகளினால், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். குடிவரவு மற்றும் குடிவரவு பிரிவின் அடிப்படை விசாரணைகளின் பின்னர், இப்பிரிவினர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.