1977 இன்னொரு சம்பவம்

1977 இனக்கலவரம் தென்னிலங்கையில் அரங்கேறிய நேரம்,வன்னிப்பகுதியில் வவுனிக்குளம் பகுதியில் சில சிங்கள மீனவர்கள் தமிழர்களால் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் குளத்தில் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள் இனக்கலவரம் தொடங்கியதை அடுத்து பயம் காரணமாக உடமைகள் எடுக்காமல் ஊர் திரும்பி விட்டனர்.அவரகள் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்தக் கலவரத்தின்போது வவுனிக்குளம் பகுதியில் இருந்து மரக்கறி ஏற்றிச்சென்ற சில விவசாயிகள் திரும்பிவரும்போது தாக்கப்பட்டனர்.இதுவும் புத்தளம் பகுதியிலேயே நடந்தது.

இதனால் வவுனிக்குளம் விவசாயிகள் கொஞ்சம் கோபமாகவே இருந்தனர்.சிலர் அந்த மீனவரகளே என நம்பினர்.உண்மையில் அவர்கள் இல்லை. தாக்கப்பட்ட நபரே எனக்குச் சொன்னார். சில நாட்களின் பின்பாக அந்த மீனவர்கள் பொலிஸ் துணையுடன் உடமைகளை எடுப்பதற்காக லாறியில் வந்தனர்.வரும் வழியில் தமக்கு அறிமுகமான தமிழர்களை நலம் விசாரித்தனர்.

இதற்கிடையே சிலர் இவர்களை தாக்க யோசனை கூறினர்.அது வேகமாக எடுபட்டது.சிறுகுழு திடீரென பெரிய கூட்டமாக மீனவர்களை சுற்றி வளைத்து தாக்க அங்கே வந்த ஒரு பொலிஸ் சங்கானையைச் சேர்ந்த தமிழர்.அவர் தமிழிலே நிறுத்துமாறு கத்தவும் வந்த கூட்டம் துப்பாக்கி ,கத்தி,கோடரிகளால் தாக்கத்தொடங்கியது.

தமிழ் பொலிஸ் தன் துப்பாக்கியை வீசி சரண்அடைய அவரையும் கொலை செய்தனர்.மீனவரகளின் உடமைகள் அனைத்தும் கொள்ளை அடிக்கப் பட்டன.இதில் இரண்டு பொலிஸ்காரர்கள் உட்பட சகல சிங்கள மீனவர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலைகளுக்கு வித்திட்டவரகள் பின்னாளில் போராளிகளாக வலம் வந்தனர்.ஆலோசனை கொடுத்தவர் இன்னமும் வாழ்கிறார்.

அப்போது நான் 16 வயது மாணவன்.இவரகளில் சிலரைக்கண்டு நீங்கள் செய்தது தவறு எனக் கூறியபோது என்ன இவன் சிரில் மத்யூ மாதிரி பேசுறான் என கிண்டல் பண்ணினார்கள்.

இதில் சம்பந்தப்பட்ட பலர் உண்மையிலேயே அறியாமையினால் பங்கேற்றனர்.தூபமிட்டவரகளோ தெளிவானவரகள்.
இச் சம்பவத்தின் பின் வவுனிக்குளம் ப.நோ.கூ.சங்கம் பனங்காம பற்று ப.நோ.கூ.சங்கம் என மாற்றப்பட்டது.

(Vijaya Baskaran)