2017: காத்திருக்கும் கதைகள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

எதிர்வுகூறல் எளிதல்ல நடக்கவுள்ள அனைத்தையும் முன்கூட்டி அறிய இயலின் அவற்றுள் பலவற்றை நடப்பதற்கு முன்னர் தவிர்க்கமுடியும். எதிர்காலத்தின் சுவை அதன் எதிர்வுகூறவியலாமையேயாகும். அதேவேளை, எதிர்காலம் வெறும் இருட்குகையல்ல. பிறந்துள்ள புதிய ஆண்டு புதிய சவால்களையும் சுவைகளையும் தன்னுள் பொதித்து வைத்துள்ளது. இவ்வாண்டும் பல கதைகள் நிகழவும் சொல்லவும் காத்துள்ளன. அவற்றுள் சில கதைகளின் முகவுரையை இங்கே எழுத விழைகிறேன். கதைகளையும் முடிவுரைகளையும் விடாது எழுதுவேன் என்ற நம்பிக்கையில்….

உலக அரசியல் சட்டென்று ஓரிரவில் மாறாது. எனவே, கடந்த 2016 ஆம் ஆண்டின் ‘தொட்ட குறை விட்ட குறை’ எல்லாம் இவ்வாண்டும் அரங்கேறும் வாய்ப்புகள் மிகவுள்ளன. எனவே, முதலில் அவற்றை நோக்கலாம்.

டொனால்ட் ட்ரம்ப்

இவ்வாண்டின் முக்கிய நாயகன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவான டொனால்ட் ட்ரம்ப் ஆவார். அவரது ஆட்சியின் முதலாவதும் முக்கியமானதுமான காலம், உலக அரசியலின் திசைவழி மீது செல்வாக்குச் செலுத்தவல்லது.

அவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது, சொன்னவற்றைச் செய்யாமல் விடுவது நல்லது என்ற அடிப்படையில் அவர் என்ன செய்வார் என்பதிலும், என்ன செய்யமாட்டார் என்பதிலுமே ஆய்வாளர்களின் கவனம் உள்ளது.

ட்ரம்ப் இரண்டு வழிகளில் அரசியல் கொள்கை வகுப்பாளர்களுக்கும் மூலோபாய நிபுணர்களுக்கும் சவாலாகவுள்ளார். முதலாவதாக அவர் செய்தவற்றை எதிர்வுகூறல் கடினம். ஏனெனில், தர்க்க அடிப்படையில் அவர் செயற்படுவதில்லை. இரண்டாவதாக, அவர் நிறுவனமயமான அரசியல் பண்பாட்டின் வழிவந்தவரல்ல.

எனவே, நிறுவப்பட்ட முறைகளையோ ஒழுங்குகளையோ அவர் பின்பற்ற மாட்டார். இவ்விரண்டும் ஒருபுறம் நிச்சயமின்மையையும் மறுபுறம் வியப்புக் கலந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளன. இதனால் முன்னுரை எழுதவும் இயலாத பல கதைகள் நிகழவுள்ளன.

1989இல் பெர்லின் சுவரின் வீழ்ச்சியும் 1990 இல் சோவியத் யூனியனின் உடைவும் உலக அரசியலின் இயங்குநெறியாக இருந்த இரு-மைய உலக ஒழுங்குக்கு முடிவுகண்டு, அமெரிக்காவின் தன்னிச்சையான ஆதிக்கத்துக்கு வழிசெய்த ஒரு-மைய உலக அரசியல் ஒழுங்கை நிறுவியது.

1991இல் இதை ‘வரலாற்றின் முடிவு’ என பிரான்சிஸ் ஃபுக்குயாமா குறித்தார். அமெரிக்கா அலுவல்களைத் தீர்மானிக்கும் முழு வல்லமையுடன் கடந்த கால் நூற்றாண்டு நிலைத்தது. ஆனால், நிலைமைகள் மாறுகின்றன. அமெரிக்காவுக்குப் பொருளாதாரச் சவால்விடும் நிலைக்குச் சீனா வளர்ந்துள்ளது.

உலக அரசியல் அரங்கில் புதிய அரங்காடிகள் வந்துள்ளனர். குறிப்பாக ரஷ்யாவின் வருகை அமெரிக்காவுக்கு சவாலாயுள்ளது. அமெரிக்காவின் கூட்டாளிகளான நேட்டோ நாடுகளும் மத்திய கிழக்கின் முடியாட்சிகளும் உள்ளார்ந்த நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன.

ரஷ்யாவும் சீனாவும் ஈரானும் இவற்றுக்கெதிரான வலுவான சக்திகளாயுள்ளன. பொருளாதார, அரசியல் ரீதியில் இவை மூன்றும் முன்கண்டிராதளவு ஒத்துழைக்கின்றன.

அதன் விளைவுகளை ஐ.நாவிலும் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் உணரலாம். அவ்வகையில், 2017 இல் அமெரிக்காவின் ‘தனியாதிக்கத்தின் முடிவை’ கட்டியங்கூறும் விடயங்கள் நிகழலாம். அதை இயலுமாக்கும் ஆற்றல் தெரிவாகிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிடம் உள்ளமை நோக்கற்குரியது.

ஐரோப்பாவின் தேர்தல் திருவிழா

ஐரோப்பாவைப் பொறுத்தவரை 2017 ‘தேர்தல் திருவிழா’க் காலமாகும். ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய பிரதான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வரவுள்ள தேர்தல்கள் அக்கண்டத்தின் எதிர்காலத்தையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பையும் கேள்விக்குள்ளாக்கலாம்.

பிரெக்ஸிட், பயங்கரவாதத் தாக்குதல்கள், தொடரும் பொருளாதார நெருக்கடியும் வங்கிகளின் எதிர்பார்க்கப்படும் இன்னொரு சரிவு, அகதிகள் பிரச்சினை என்பன முழு ஐரோப்பியக் கண்டத்தையும் சூழ்ந்துள்ளன.

இவற்றின் விளைவாகக் கடந்தாண்டு முழுதும் நிகழ்ந்த வலதுசாரி ஜனரஞ்சக அரசியல் சக்திகளின் எழுச்சி, அவை ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் வாய்ப்புகளை இவ்வாண்டு ஏற்படுத்தும். டொனால்ட் ட்ரம்ப், பிரெக்ஸிட், இத்தாலிய சர்வஜன வாக்கெடுப்பு என்பன இதற்கான பாதையைக் காட்டுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற பிரித்தானியா மக்களின் விருப்பு, எதிர்காலத்தைப் பல வகைகளில் நிச்சயமின்மையை நோக்கி நகர்த்தியுள்ளது. இவ் வெளியேற்றத்தை பிரித்தானியா எவ்வாறு நிகழ்த்தும்? அதன் பின்பு பிரித்தானிய-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் எவ்வாறு அமையும்? அது எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

அதேபோல பிரெக்ஸிட் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளிலும் இவ்வகைச் சர்வஜன வாக்கெடுப்புகளுக்கான கோரிக்கைகளுக்கு வழியமைத்துள்ளது.

குறிப்பாக ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இக் கோரிக்கை ஓரளவு வலுவடைந்துள்ளதோடு மக்கள் ஆதரவையும் பெற்றுள்ளது. இவ்வாண்டு இந்நாடுகளில் நடக்கவுள்ள தேர்தல் முடிவுகள் இக்கோரிக்கைகளின் எதிர்காலத்தைக் கோடுகாட்டும்.

ஜேர்மனியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலானது, அங்கெலா மேக்கலின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமன்றி, அகதிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் மனிதாபிமானமான அணுகுமுறையின் பிரதானமான ஆதரவாளர் என்ற வகையில் ஜேர்மன் வாக்காளர்கள் மேக்கலின் அரசியல் எதிர்காலத்தை மட்டுமன்றி, ஐரோப்பாவின் எதிர்காலத்தையும் இவ்வாண்டு தீர்மானிப்பர்.

இத்தாலியின் அரசியல் ஸ்திரமின்மையும் எழுச்சிபெறும் வலதுசாரி அலையும் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனிக்கு அரசியல் மீள்வருகைக் கதவைத் திறந்துள்ளன. அத்துடன், பிரான்ஸின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளும் நெதர்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளும் ஐரோப்பா தன்னை எவ்வாறு உருவகிக்கிறது என்பதை வடிவமைக்கும்.

உலக அரசியலின் தீர்மானமான சக்திகளான அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் நெருக்கடியிலுள்ள நிலையில், உலகின் ஏனைய பகுதிகள் மீது இவற்றின் செல்வாக்கின் தன்மை மாறுவது தவிர்க்கவியலாதது.

இது புதிய சக்திகளின் உருவாக்கத்தையும் உலக அரசியல் ஒழுங்கில் புதியவர்களின் வருகையையும் உறுதி செய்யும். இச்சூழலில் சில முக்கிய திசைவழிகளை எதிர்பார்க்கலாம். அவை இவ்வாண்டைச் செதுக்கும் முக்கிய கோட்பாட்டு அடிப்படைகளின் பாற்பட்டவை.

ஜனநாயகத்தின் மீதான கேள்வி

உலகளாவிய முக்கியமான அரசியல் கோட்பாடான ‘ஜனநாயகம்’ முன்னறிந்திராத நெருக்கடியை இவ்வாண்டு சந்திக்கலாம். சில வேளை, சில நாடுகளின் ஜனநாயகத்தின் இறுதி அத்தியாயங்களை இவ்வாண்டு எழுதக்கூடும்.

மோசமாக அதிகரிக்கும் அசமத்துவம், ஊடகங்களின் துர்நடத்தையின் வெளிப்பாட்டால் ஊடகச் செய்திகளின் மீது ஏற்பட்ட அவநம்பிக்கையும் வெறுப்பும், அரசாங்க நிறுவனங்கள் பற்றிய நிச்சயமின்மையும் அவற்றின் தேவை பற்றிய நியாயமான கேள்விகளும், வலுப்படும் பொருளாதாரத் துருவமாதல், ஜனரஞ்சகமான தீவிரக் கருத்துகட்கு ஏகோபித்த ஆதரவு, பொருளாதார நெருக்கடியும் அதன் விளைவாக எழும் அறஞ்சார்ந்த வினாக்களும் ஜனநாயகம் என்ற எண்ணக்கரு மீதான நம்பிக்கையைச் சிதைப்பதோடு ஆட்சிக்கான வழிமுறையாக ஜனநாயகத்தை கைக்கொள்வது பற்றி, எண்ணற்ற விமர்சனங்களையும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையீனத்தையும் எழுப்புவதை எதிர்பார்க்கலாம்.

இதுவொரு உடனடி நிகழ்வல்ல. ஜனநாயகம் என்று எமக்குச் சொன்னவை முதலாளிய நலன்களைக் காக்குமாறு மக்கள் நலன்களைக் காவுகொள்ளும் தாராண்மை ஜனநாயகத்தின் வடிவமே.

கடந்த பத்தாண்டுகளில் முதலாளியம் பாரிய நெருக்கடிகளைச் சந்தித்துள்ளது. இந்நிலையில், மக்களைச் சுரண்டல், மக்கள் விரோதக் கொள்கைகளைச் செயற்படுத்தல், எதிர்ப்பை அடக்கல் ஆகிய அனைத்தையும் ஜனநாயகத்தின் பெயரில் முதலாளியம் செயற்படுத்தி வந்துள்ளது.

இந்நிலையில் ஜனநாயகம் என்ற எண்ணக்கரு அதன் அர்த்தத்தை இழந்துள்ளது. ஜனநாயகத்தின் முக்கிய குறிகாட்டியான தேர்தல்களைப் பயன்படுத்தலூடு மக்கள் ஜனநாயகத்தின் தோல்வியைக் கடந்தாண்டு நிறுவினர். அதன் தொடர்ச்சியை இவ்வாண்டும் எதிர்பார்க்கலாம்.

ஜனநாயகம் என்ற எண்ணக்கருவை, இன்னொருவகையில் மீள்வடிவமைக்கவோ அல்லது பிறிதொரு வகையில் அர்த்தப்படுத்தப்படுவதற்கோ வாய்ப்புகள் அதிகம்.

ஜனநாயகம் எவ்வாறு நம்பிக்கையிழப்பினும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்பட்ட ஊடகத்துறை அதன்மீதான நம்பிக்கையைக் கடந்தாண்டே இழந்த நிலையில் இவ்வாண்டும் ஊடகங்கள் அதன் நம்பகத்தன்மையை மீளப் பெற்றுக்கொள்ளக் கடுமையாகப் போராடும்.

ஆனாலும், இழந்த நம்பகத்தை மீட்பது கடினம். மக்கள் மெதுமெதுவாகப் பாரம்பரிய ஊடகங்களிலிருந்து விலகி, நவீன தொழிநுட்பம் மிக்க புதிய ஊடகங்களை மேலும் நாடுவர். இதனால் சில பாரம்பரிய ஊடகங்கள் களத்தினின்று நீங்கலாம்.

மூன்றாம் உலகநாடுகளின் பொருளாதாரம் இவ்வாண்டு உலக அலுவல்கள் பலவற்றை உலகப் பொருளாதாரமும் அது சார்ந்த எண்ணெய் விலை, உணவுப் பொருட்களின் விலை, காலநிலை மாற்றம் என்பன தீர்மானிக்கும். அவ்வகையில் மூன்றாமுலக நாடுகளின் அரசியல் நடத்தையில் உலகப் பொருளாதார இயங்குநிலை செல்வாக்குச் செலுத்தும்.

ஆபிரிக்கக் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உணவுப் பாதுகாப்பை இல்லாமல் செய்துள்ளன. இதனால் மக்கள் வீதியில் இறங்குவதும் அரசாங்கங்ளை எதிர்த்துப் போராடுவதும் தவிர்க்கவியலாதன. ஆபிரிக்காவில் இவ்வாண்டு நடக்கவுள்ள தேர்தல்களில் கென்ய, ருவாண்ட ஜனாதிபதித் தேர்தல்கள் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்தவை.

கென்ய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா, மோசமான அடக்குமுறையினூடு கென்யர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் ஆட்சியை நடாத்தி வருகிறார். அவரது எதிர்காலம் இவ்வாண்டு முடிவாகும்.

ருவாண்ட ஜனாதிபதி போல் கிகாமி ஜந்தாவது தடவை ஜனாதிபதியாக முயல்கிறார். இருவரும் ஆபிரிக்கக் கண்டத்தில் செல்வாக்குள்ளவர்களும் தங்கள் நாடுகளில் அடக்குமுறை ஆட்சி நடாத்துபவர்களும் அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் நெருக்கமானவர்களுமாவர். தேர்தல் முடிவுகள் இவர்கட்குச் சாதகமாக இல்லாவிடின் வன்முறை வெடிப்பதைத் தவிர்க்கவியலாது.

அதேவேளை, தளராத ஏகாதிபத்திய விரோதியான சிம்பாவேயின் ரொபேட் முகாபேயும் இவ்வாண்டு கவனத்துக்கு உள்ளாவார்.

திருப்புமுனையில் இலத்தின் அமெரிக்கா

இலத்தின் அமெரிக்கா திருப்புமுனையில் நிற்கிறது. அதன் திசையைத் தீர்மானிக்கும் ஆண்டாக இவ்வாண்டு அமையும். கடந்தாண்டு இடதுசாரி, குறை-இடதுசாரி ஆட்சிகள் பல நெருக்கடிகளையோ பின்னடைவுகளையோ சந்தித்தன. பிரேசில், வெனெசுவேலா, பொலிவியா, ஈக்குவடோர், ஆர்ஜென்டீனா, பெரு நிகழ்வுகள் கூறத்தக்கவை. பிரேஸிலில் அரசியல் சதியைத் தொடர்ந்து அமைந்த புதிய ஆட்சி மீது மக்கள் வெறுப்போடுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகளான லூலா டி சில்வாவும் டிவ்மா ரூசுவ்வும் ஆகியோர் கட்சியின் அரசியல் எதிர்காலத்துக்காகப் போராடுகிறார்கள். எண்ணெய் விலை இறக்கம் வெனிசுவேலாவின் பொருளாதாரத்தின் தாங்குசக்தியை மட்டுமன்றி ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோவின் அரசியல் எதிர்காலத்தையும் மிரட்டியுள்ளன.

சீனாவின் பொருளாதாரத் தேவைகள் மத்திய அமெரிக்க நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக வளரும். குறிப்பாக நிகராகுவா, எல் சல்வடோர், குவாட்டமாலா ஆகியன சீனாவின் பொருளாதார வலுவில் தங்கியுள்ளன.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் தொடரும் பொருளாதார நெருக்கடி பொருளாதாரக் கவனத்தை ஆசியா நோக்கித் திருப்பும். இதனால் அரசியல் ரீதியிலும் ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி கவனிக்கப்படும். புதிய அமெரிக்க ஜனாதிபதியின் ஆசிய வெளியுறவுக் கொள்கை, இதில் முக்கியமானது.

புதிய சந்தைகட்கு வாய்ப்பான களங்களாக ஆசிய நாடுகள் வளரும். மலிவான கூலி, அரச வரிவிலக்குகள், ஏனைய உதவிகள் என்பவற்றுக்கு உடன்பாடாக ஆசிய நாடுகள் உள்ளதால், ஆசியாவின் மீது அதிகார வர்க்கத்தின் கண்கள் திரும்பும்.

இன்னொரு வகையில் சீனாவுடனான வர்த்தகப் போட்டிக் களமாக ஆசியா மாறும். இதனால் ஆட்சிமாற்றங்கள், புரட்சிகள் என்பன நடைபெற இன்னும் சரியாகச் சொல்லின், நடாத்தப்பட வாய்ப்புகள் அதிகம்.

ஒருபுறம் கிழக்காசிய நாடுகளான பிலிப்பைன்ஸும் தாய்லாந்தும் இவ்வாண்டு குறிப்பான கவனம் பெறும். தென்னாசியாவில், நல்ல அல்லது அல்லாத காரணங்களுக்காக மியன்மாரும் பாகிஸ்தானும் கவனம் பெறும்.

மத்திய கிழக்கின் தீர்மானமான ஆண்டாக 2017 அமைவதற்கான குறிகாட்டிகள் ஏலவே தெரிகின்றன. சிரியாவில் தாம் விழையும் ஆட்சிமாற்றம் இயலாது என அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் உணர்ந்துள்ளார்கள். இது கடந்த ஒன்றரைத் தசாப்தத்தில் நிகழ்ந்த முக்கியமான நிகழ்வாகும்.

முன்பு போல் தான், நினைத்ததையெல்லாம் செய்யவியலாது என அமெரிக்கா மீண்டுமொருமுறை கண்டுள்ளது. மத்திய கிழக்கில் மேலுமொரு போரைத் தொடக்குவது குறித்து அமெரிக்கா ஒன்றுக்கு இரண்டுமுறை சிந்திக்கும்.

எனினும், அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாளான சவூதி அரேபியா ஜெமனில் ஹூத்தியர்களுக்கு எதிராக நடாத்தும் போரில் அமெரிக்கா உள்ளீர்க்கப்படலாம். ஆனால், மத்திய கிழக்கு நிலவரங்கள் முன்னறியாத புதிய திசையில் நகர்கின்றன.

ஈரான் தன்னைப் பிராந்திய அரங்காடியாக இவ்வாண்டு நிலைநிறுத்தும். இவ்வாண்டு ஈரானில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் மிகுந்த கவனம் பெறும். சிரிய யுத்தம், ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் எனப் பல விடயங்களில் ரஷ்யா தன்னை அமெரிக்காவுக்கு நிகராக உயர்த்தியுள்ளது.

அனுமானங்களும் எதிர்வுகூறல்களும் சரியாயமைய ஓர் உத்தரவாதமும் இல்லை. ஆனால், ஒவ்வொன்றும் ஏதோ வகையில் சொல்லக் காத்திருக்கும் கதைகளே. உண்மைகளை விடப் புனைவுகளை விரும்பும் உலகில் அரசியலும் கதைகளாகவே வழங்கப்படுகிறது, நன்மைக்கோ தீமைக்கோ, காரணத்தோடோ இன்றியோ உலக அரசியலின் சுவையும் அதுவாயுள்ளது.