வட மாகாண சபையினதும் விக்னேஸ்வரனதும் மர்ம உலகின் பின்னணி

வட மாகாணத்தின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கடந்த சனியன்று தனது சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வாக்குவங்கி அரசியலுக்குள் நுளைக்கப்படுவதற்கு முன்பதாக, இலங்கைப் பேரினவாத அரசின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதியாகச் செயற்பட்ட விக்னேஸ்வரனின் திடீர் தேசியவாதத்தின் பின்புலம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. தெற்காசியாவில் ஏகாதிபத்தியங்களின் ஈர்ப்பு மையமாக மாறியுள்ள இலங்கை அரசியலில் ‘தமிழ்த்’ தேசியவாதத்தை விக்னேஸ்வரன் கையகப்படுத்தியுள்ளதன் பின்புலத்தில் அமெரிக்க மற்றும் இந்திய அரசுகளின் பங்கையும் அவதானிக்க முடிகிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி என்றும் , ஆன்மீகவாதி என்றும் ஆளுமை மிக்கவர் என்றும் அறிமுகப்படுத்தப்படும் விக்னேஸ்வரனையும், அவரூடாக வட மாகாண சபையையும் இயக்கிவருபவர் நிமலன்கார்த்திகேயன் என்ற அவுஸ்திரேலிய நபர் என்பதை மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களும் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

வட மாகாண சபையின் சுன்னாகம் புகழ் ஐங்கரநேசன் மற்றும் விக்னேஸ்வரனுடன் தொடர்புடைய நிமலன் கார்த்திகேயன் வாக்குப் பொறுக்குவதற்குக் கூட மக்களிடம் செல்லாத அன்னியமான நபர். மாகாண சபையின் முக்கிய முடிபுகளை மேற்கொள்ளவதற்கும், முக்கிய நியமனங்களைச் செய்வதற்கும் நிமலன் கார்த்திகேயன் நேரடியாகவே தலையிடுகிறார்.

விக்னேஸ்வரனின் அனைத்துப் பயணங்களிலும் நிழல் போலப் பின்தொடருந்து உலகம் சுற்றும் நிமலனுக்கு எங்கிருந்து பணம் சுரக்கிறது என்பதற்கு மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களுக்குக் கூடத் தெரிவதில்லை.

இலங்கை அரசினால் வழங்கப்படும் பண ஒதுக்கீட்டைக்கூடப் பயன்படுத்தாத முதலமைச்சரும் குழுவினரும், எதற்காக நிமலன் இயக்கத்தில் உலகம் சுற்றுகிறார்கள் என்பது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட சாமியார் பிரேமானந்தாவின் சீடப்பிள்ளையான விக்னேஸ்வரன், சிங்கள தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில், புலிகளின் ஒடுக்குமுறைக்குள் இருந்தமையாலேயே தாம் இதுவரை அரசியலில் ஈடுபடவில்லை என்றும், பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இயக்கங்கள் இருந்த காலத்தில் பேச்சுரிமை மறுக்கப்பட்டது என்றும் வெளிப்படையாக கூறினார்.

போராட்ட இயக்கங்களை மறுத்த விக்னேஸ்வரன், ராஜபக்ச முன்னிலையில் மட்டுமே சத்தியப்பிரமாணம் செய்வேன் என அடம் பிடித்து, அதயே நல்லிணக்கமும் என்றார்.

புலிகளின் தொடர்ச்சி தாமே என மார் தட்டிக்கொண்டு, தமிழ்த் தேசியத்தைப் கால்பந்தாட்ட கிளப் போன்று மாற்றி மாவீரர் நாள் உட்பட பல்வேறு வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் புலம்பெயர் குழுக்கள் விக்னேஸ்வரனின் இக் கருத்துக்களைக் கண்டுகொள்வதில்லை.

கஜேந்திரகுமாரும் குழுவினரும் இரண்டு தேர்தல்களில் தோற்றுப்போன பின்னர், விக்னேஸ்வரன் மட்டுமே புலம்பெயர் குழுக்களின் வியாபாரத்திற்கு உள்ளூர் ஊன்று கோலாகும் நிலை தோன்றியதால் தமது வியாபாரத்தின் தாரக மந்திரமான விடுதலைப் புலிகளின் கடந்த காலத்தையே கேள்விக்கு உட்படுத்துவதைக் கூட அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இவ்வாறான இக்கட்டான சூழல் நிமலன் கார்த்திகேயனின் தலையீட்டை இலகுபடுத்திற்று.

ஆயிரக்கணக்கான ஆயுதம் தாங்கிப் போராடிய போராளிகள் வடக்கிலும் கிழக்கிலும் வாழும் சூழலில், ஆயுதப் போராட்டமே வன்முறை என்ற கருத்தை சமுகத்தின் பொதுச் சிந்தனையாக்கி, இலங்கையின் பிரதான பிரச்சனை வெறும் மதங்களுக்கு இடையேயான மோதலாக உருவகப்படுத்த முயலும் சதியின் மூல கர்த்தாவாக நிமலனும், அவரால் எய்யப்படும் அம்பாக விக்னேஸ்வரும் செயற்படுகின்றனர்.

இந்த சூழலில் நிமலனின் பின்னணியில் யார் செயற்படுகின்றனர் என்ற ஆய்வு அவசியமானது. நிமலன் கார்த்திகேயன், நோர்வே அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுகளின் போதே அரசிலுக்குள் அறிமுகமாகிறார். சுதா நடராஜன் போன்றவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிவந்த நிமலன், அமெரிக்காவிலிருந்து செயற்படும் பேர்ள் என்ற அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார்.

வியட்னாமியப் போராட்டத்திலிருந்து ஈழப் போராட்டம் வரை அழிப்பதற்குத் துணை சென்ற ஆர்மிதேஜ், பேர்ள் அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகிறார். பேர்ள் அமைப்பின் உறுப்பினரான மரியோ அருட்பிரகாசம் என்ற தமிழர், சுதா நடராஜனின் தமிழ் கார்டியனின் ஆசிரியர் மட்டுமன்றி அமெரிக்க ராஜாங்க அமைச்சிலும் வேலை செய்கிறார்.

அவுஸ்திரேலியப் பிரசையான நிமலனுக்கு இப்போது அவசர அவசரமாக இலங்கைப் பிரசா உரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் இலங்கைக்குச் செல்லவிருக்கும் நிமலன், வட மாகாண சபை முதலமைச்சரின் செயலாளராகவோ அன்றி அதற்கு இணையான பதவியிலோ நியமிக்கப்படுவார்.

(இனியொரு…)