OPERATION சுமந்திரன்!

(ப. தெய்வீகன்)
மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு மம்மல் பொழுதில் வீடு செல்லும்போது லோட்டன் வீதியில் காத்திருந்து நாயொன்று ஒவ்வொரு நாளும் கலைக்கும். அந்த நாயின் எரிச்சலை தவிர்த்துவிட்டு வேறுவீதி வழியாக வீட்டுக்கு போகமுடியாது என்றில்லை. ஆனாலும், நாயா நாமா என்றொரு கௌரவப்போரட்டாத்தில் போயும் போயும் அந்த நாயிடம் தோற்றுப்போவதா என்ற உள்மன எரிச்சல் எப்போதும் திரும்ப திரும்ப அந்த வீதி வழியாகத்தான் எங்களை வீரத்துடன் போகவைக்கும். அந்த நாயும் தவறாமல் எங்களை பார்த்து குலைக்கும். பிறகு கலைக்கும். அதற்கு ஊச்சு காட்டிக்கொண்டே இரண்டு கால்களையும் ஹாண்டிலுக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டே எங்களுடன் வரும் சிலர் தப்பித்துவிடுவர். நானும் இன்னும் சிலரும் செருப்பை கழற்றிவிட்டு, கலைத்துக்கொண்டு வரும் “தோழருக்கு” இரண்டு அடிகொடுத்துவிட்டுப்போவதுதான் வழக்கம். அடியை ஞாபகம் வைத்துக்கொண்டு அந்த நாய், முதல்நாள் அடிக்காதவர்களையும் அடுத்தநாள் கலைக்கும். இவ்வளவும் ஏன், அடிகொடுத்தது நாங்கள்தான் என்பதை மறந்துகொண்டு அந்த வழியால் போகும் வேறுபலரையும் கலைத்துக்கொண்டோடும். மொத்தத்தில் அந்த நாயின் வேலை அந்த வீதியில் படுத்துக்கிடந்து இரவு பகல் பாராது போய் வருவோரை கலைப்பதும் குரைப்பதும்தான்.

சுமந்திரன் அப்படிப்பட்ட ஒரு வீதியால் இவ்வளவு காலமும் போய் வருகின்றபோதெல்லாம் அவரை ஹாண்டிலுக்கு மேல் கால்களை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும் நபர் என்றுதான் பலர் எண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை அவர் ஓரிரு இடங்களில் கடியும் வாங்கியிருக்கிறார் என்பது எனது ஊகம்.

ஆனால், கடந்த சில மாதங்களாகவே அவர் இறங்கி அடி கொடுக்க ஆரம்பித்திருக்கும் முடிவினால் அவரை கலைத்துக்கொண்டு ஓடித்திரிந்த பல மரிக்கொழுந்துகளுக்கு அரசியலே மறந்துவிட்டது. பல காட்போட் கட்சிகளுக்கு அரசியல் கண்களே குருடாகியிருக்கின்றன. விளைவாக, இன்று சுமந்திரன்தான் கனவிலும் கலைத்துக்கொண்டு வருவதாக இந்த ‘வன்வலு’ வண்டுகள் இரவிலும் கூச்சலிடுகின்றனவாம்.

அது எப்படி?

தமிழ் தேசிய அரசியல் இன்று எந்த வழியில் போகிறது என்று யாருக்கும் தெரியாது. “கரகாட்டக்காரன்” கார் மாதிரி தமிழர் அரசியல் மாசத்துக்கொருமுறை தங்களிடம்தான் இருப்பதாக ஒவ்வொரு மாமன்னர்களும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். “கொஞ்சம் தள்ளிப்படுங்கோவன்” – என்றுகொண்டு ஒருத்தர் வருகிறார். சம்பந்தர் போகிறார். அவர் கேற்றை சாத்தும் முன்னரே இன்னொருத்தர் வருகிறார். அவர் வெளிக்கிட்டு முடக்கு தாண்டுவதற்கு முதலே அடுத்தவர் வருகிறார்.

சாதாரண பொதுமகனுக்கு ஏதாவது புரிகிறதா?

ஆனால், சுமந்திரனை பொறுத்தரை தான் நினைத்த அரசியலை களத்தில் செய்வதற்காக தேர்தல் அரசியலுக்குள் வந்தார். அதனை உண்மையாக – நேர்மையாக – மக்களிடம் பேசினார். இதுதான் கிடைக்கும், இது கிடைக்காது என்பதை – வெளிப்படையாக – எவ்வளவு எதிர்ப்புக்களுக்கும் மத்தியில் – முன்வைக்கிறார். (அதற்காக அவரது அந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக நான் கூறவில்லை) அவர் தனது நிலைப்பாட்டை கூறுகிறார். மக்கள் அதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். மறுமுனையில், சம்பந்தர் ஐயாவுடன் சேர்ந்து தமிழரசுக்கட்சியை மிகச்சாதுரியாக கையாளுகிறார். கிட்டத்தட்ட அந்த கட்சியின் அடுத்த தலைமையாக வரக்கூடிய அனைத்து தகமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்கிறார். அதன் வழி நின்று, தமிழர் உரிமைகளை வென்றெடுப்பதற்கு தான் நினைத்த பாதையில் பயணிக்கிறார்.

கவனத்தில் கொள்ளுங்கள் மக்களே!

இவ்வளவு சந்தர்ப்பங்களும் தங்கத்தாம்பாளத்தில் வைத்து திரு. கஜேந்திரகுமார் அவர்களுக்கு கொடுக்கப்பட்டன. அதனை அவர் என்ன செய்தார் என்பதை விளங்கப்படுத்துவதற்கு இங்கே இறங்குப்பெட்யை கிளறிக்கொண்டிராமல் அடுத்த விடயத்திற்குள்ளே போய்விடுகிறேன்.

கடந்த சில வருடங்களாகவே சுமந்திரனின் அரசியலுக்கு நடந்துகொண்டிருப்பதென்ன?

சுருக்கமாக சொன்னால், மகிந்த – டக்ளஸ் – கருணாகூட இன்று யாழ்ப்பாணத்தில் எங்கு வேண்டுமானாலும் வரலாம், பேசலாம், போகலாம். ஆனால், சுமந்திரனுக்கு எதிராக மாத்திரம் பாரிய எதிர்ப்பு வளையம் ஒன்றை வரைந்துகொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பு சதிராட்டத்தை தொடங்கிவைத்திருக்கிறது. இந்த அமைப்பு தமிழ் தேசிய அரசியலில் தாங்கள் ஒரு அசைக்கமுடியாத சக்தியாக உருவெடுப்பதுபோல வடக்கு மக்களுக்கு படம் காட்டுவது மட்டுமல்லாமல், கிழக்கிலும் வடலிகள் – வயல்வெளிகளில் எல்லாம் ஏறி இறங்கி ஏதோ பிரச்சாரம் செய்தது. “எழுக தமிழ்” என்றது, “விழுக தமிழரசுக்கட்சி” என்றது. போதாக்குறைக்கு போறவன் – வாறவன் எல்லோரையும் துரோகி என்று ‘லிஸ்ட்’ போட்டுவிட்டு தாங்கள்தான் தமிழீழத்தின் தலைப்பிள்ளைகள் என்றது.

இதைநம்பி, முகநூலில் “முஸ்தபா முஸ்தபா” பாடிக்கொண்டு ஒருபெரும் கூட்டம் இந்த கட்சிக்கு பின்னால் ஓடியது. மூன்று நாலு டம்மி இணையத்தளங்களையும் முப்பது முகநூல் கணக்குகளையும் வைத்துக்கொண்டு தமிழரசுக்கட்சிக்கு எதிராக பஜனை பாடுவதையே முழுநேரத்தொழிலாக செய்தது. அதற்கு வெளிநாட்டு பாகவதர்களையெல்லாம் வாடகைக்கு அமர்த்திவைத்து அதன் வழி காசுகளையும் பிடுங்கிக்கொண்டது,

நடந்துமுடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் ஓரளவுக்கு வாக்குகளை பெற்றுக்கொண்டு ஒரு வெற்றியை பெற்றது. அந்த வெற்றியை ஏதோ ஹிலாரியை வீழ்த்திய ட்ரம்பின் வெற்றிபோல கொண்டாடியது. அந்த வெற்றி தங்களுக்கோ தங்களது கொள்கைக்கோ கிடைத்த வெற்றி அல்ல – தமிழ் தேசியக்கூட்டமைப்பின் போதிய செயற்பாடின்மையினால் அதிருப்தியடைந்தவர்கள் அளித்த சொற்ப வாக்குகளே என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தது.

அலரிமாளிகைக்கே ஆட்லறி அடித்த புளுகத்தில் அடுத்து கோட்டையில் புலிக்கொடிதான் கொக்கரித்துக்கொண்டு ஓடித்திருந்தது.

இந்தக்கூட்டத்தினருக்கு ‘அந்தா பார், இந்த பார்’ என்று விக்னேஸ்வரன் ஐயாவும் காவடிக்கு முள்ளு பிடிப்பதுபோல வேட்டியை மடித்துக்கொண்டு நின்று உரு ஆடி ஏற்றிவிட்டார்.

இவ்வளவு கூத்தையும் மிகவும் நிதானமாக – நீண்ட காலமாக – பார்த்துக்கொண்டிருந்த சுமந்திரன் அப்போதுதான் களத்தில் இறங்கினார். உள்ளுராட்சி சபை தேர்தல் முடிவுகளுடன் வேட்டியை மடித்துக்கட்டினார்.

முதலாவது – உள்ளுராட்சி சபைகள், பிரதேச சபைகளில் தமிழரசுக்கட்சியின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கு சம்பந்தப்பட்டவர்களுடன் பேரம் பேசியதிலிருந்து சகல விதமான பேச்சுக்களிலும் தானே நேரில் போய் நின்று காய்களை நகர்த்தினார். யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவி தமிழரசுக்கட்சிக்கு வந்தது முதல் சகலதிலும் சுமந்திரன் ஆடியது முற்று முழுதாக unltimate covert political game. அந்த ஆட்டத்தில் யார் யாருக்கு எப்படி அடி விழுந்தது என்பதெல்லாம் இன்றுவரை வெளியே தெரியாத பரம இரகசியங்கள். திருடனுக்கு தேள் கொட்டியது போல பலர் பொத்திக்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டாவது – கொஞ்ச காலமாக ஓவராகவே வாலைத்தூக்கிக்கொண்டு தமிழரசுக்கட்சிக்கு எதிராக ஆடிய முதலமைச்சர் விக்னேஸ்வருக்கு எதிராக டெனீஸ்வரன் ஊடாக வைக்கப்பட்ட lock. இதில் சுமந்திரன் தரப்பு நேரடியாக அங்கொன்றும் செய்யவில்லை என்றாலும், டெனீஸ்வரனுக்கு பின்னணியில் யார் யார் இயங்கியிருப்பர் என்பதை அறிவதற்கு “வேட்டையாடு விளையாடு” கமல்தான் வரவேண்டுமில்லை. டெனீஸ்வரன் விவகாரத்தில் வழக்கையே ஒத்திவைக்குமாறு ஒரு நீதியரசர் கோரிக்கை வைக்குமளவுக்கு சுமந்திரன் தரப்பு ஒரு மூலையில் கொண்டுபோய் வைத்து கொடுத்திருக்கும் அடி, விக்னேஸ்வரனின் நீதித்துறை அனுபவத்தை முற்றுமுழுதாக கேலிக்கு உள்ளாக்கியது அன்றி வேறொன்றுமில்லை.

மூன்றாவதாக – மணிவண்ணனுக்கு எதிரான வழக்கு. தமிழரசுக்கட்சியையும் தன்னையும் தொடர்ச்சியாக சீண்டிக்கொண்டிருந்த முன்னணியினருக்கு மணிவண்ணன் வாயிலாக கொடுக்கப்பட்டிருக்கும் உச்சந்தலை சம்மட்டியடிதான் சுமந்திரன் கையிலெடுத்து களமாடிய இந்த வழக்கு. தன் மீது எவ்வளவு காழ்ப்புக்களை காட்டியபோதும் – கட்சிக்கு கரிபூசிக்கொண்டிருந்தபோதும் – யாழ். மாநகர சபை முதல்வர் விவகாரத்தில் முன்னணியை சமரசத்துக்கு அழைத்தது தமிழரசுக்கட்சி. இன்னொரு வகையில் சொல்லப்போனால், அரசியலை அரசியலாக கையாண்டது. ஆனால், முன்னணியினரோ தமிழரசுக்கட்சிக்கு தாலி கட்ட அழைத்ததுபோல முரண்டுகொண்டு, “ஏய்……..என்ன துணிச்சல் இருந்தால் எங்களப்போயி …….” – என்று ஏகப்பட்ட பஞ்ச் டயலொக்ஸ்.

கடைசியில் நடந்தது என்ன?

அன்று அணைக்க வந்த கையை அடித்து விரட்டிய முன்னணியின் தலையையே கொய்து எறிந்திருக்கிறது தமிழரசுக்கட்சி. அதை தனது சாணக்கியத்தினால் செய்து காட்டியிருக்கிறார் சுமந்திரன்.

மக்களின் உரிமைகள் – தேவைகள் என்று எத்தனையோ கிடக்க, சுமந்திரனுக்கும் தமிழரசுக்கட்சிக்கும் இது தேவையா என்று சிலர் எண்ணுவதுண்டு. என்னைப்பொறுத்தவரை இது தேவைதான்.

ஏனெனில், சுமந்திரனைப்பொறுத்தவரை, அவர் உள்ளுரிலிருந்து வெளியூர் வரை சென்று இன்று தமிழர் நிலை குறித்து பேசுகிறார். சிங்களவர்கள் மத்தியிலும் அரசியலைப்பு உருவாக்கம் பற்றி வெளிப்படையான விளக்கங்களை எடுத்துக்கூறிக்கொண்டிருக்கிறார். அவர் சென்றுகொண்டிருக்கும் அரசியல் பாதையில் அல்லது வெளிப்படைத்தன்மைகளில் பற்றாக்குறையிருக்கலாம். தான்தோன்றித்தனமான சில செயற்பாடுகள் இருக்கலாம். நம்பவே முடியாத சிங்கள தேசத்தை – எல்லோரும் எள்ளிநகையாடும் விதத்தில் நம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால், தானும் தனது கட்சியும் மக்களிடம் பெற்றுக்கொண்ட ஆணைக்காக அவர் உண்மையாக உழைக்கிறார். தமிழ்மக்களிடம் போலி வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டு நல்ல பெயர் வாங்கவேண்டும் என்ற நாடகமாடவில்லை.

ஆனால், அவர் அந்த உண்மையின் வழி நடப்பதற்கு விடுகிறார்களா?

அவரது அரசியலை துரோகம் துரோகம் என்று தூபமிட்டு முன்னணியினர் இன்பம் காண, அவர்களுக்கு சாம்பிராணி போட்டுக்கொண்டே சபாஷ் போடுகிறார் விக்னேஸ்வரன். இவர்களை லோக்கலில் கொஞ்சம் தட்டிவைப்பதற்குதான் இப்படியான உள்ளுர் சண்டித்தனங்களும் கொஞ்சம் தேவைப்பட்டிருக்கிறது.

லோட்டன் றோட் நாயிற்கு நன்றி இருக்கலாம். ஆனால், எந்த நாளும் குலைத்தும் கலைத்தும் கொண்டிருந்தால் என்னதான் செய்வது?

கண்ணா…..

சம்பந்தன் போடுறது வாக்கு கணக்கு
சரவணபவன் போடுறது பேப்பர் கணக்கு

சிறிதரன் போடுறது காணிக்கணக்கு
மாவை போடுறது காசுக்கணக்கு

கஜேந்திரன் போடுறது cardboard கணக்கு
கஜேந்திரகுமார் maintain பண்ணுறது முகநூல் கணக்கு

சுமந்திரன் போடுறது எப்பவுமே அரசியல் கணக்கு!

ஏதோ பெரிசா கணக்கு கணக்கு பற்றி கதைக்க வந்திட்டாங்கள். கூட்டி கழிச்சு பாருங்கடா, கணக்கு சரியா வரும்.

எட்றா வண்டிய…..!