கறி மணக்கும்… (Part2)

(SLM ஹனிபா)

இந்த நினைவுகளின் தொடரில் ஒரு போதும் கற்பனைகளை அவிழ்த்து விடுவதில்லை என இதை எழுதுபவர் உங்களுக்கு வாக்குறுதியளிக்கிறார். இங்கே இன்றிலிருந்து விதானைப் பொண்டிலை சீமாட்டி என்று அழைக்கப்போகிறேன்.

அந்தக் கிராமத்தில் 25 இற்கும் குறைவான குடும்பங்கள், 75 வாக்குகள், அதற்கு 2 வாக்காளர் பெட்டிகள், 1 ஜீப் வண்டி, இரண்டு அரச பணியாளர்கள். நமது ஜனநாயகத்தின் மாண்பு.

பொழுதும் மறைய மாவலி ஆற்றின் சோலை வனங்களிலிருந்து ஆனைக் கூட்டங்களின் பிளிறல்காதுகளை அடைத்தது.

வாசலில் இரண்டு தோட்டுப் பாய்கள். எங்கள் உடுப்புகளை களைந்து பாயின் ஒரு மூலையில் போட்டுவிட்டு நானும் எனது அதிகாரியும் அமர்ந்தோம். அந்த ஊரில் சீமாட்டிக்கு மட்டுமே மண்டபமும் வீடும். ஓலைக் கூரைக்குப் பதிலாக தகரம் அடித்திருந்தார்கள். வாசலில் அழகிய தெங்குகள். காற்றில் அசையும் ஓலைக்கீற்றுகள் ராகம் இசைத்தது.

திடீரென்று ஒரு மனிதர் இரண்டு கோழிச் சாவலுடனும் தோளில் அடப்பையுடனும் ஏறுகடப்பால் ஏறி இறங்கி வந்தார். சீமாட்டியின் வலது கரமான பக்கீரப்பா.

பத்து ஏக்கர் மும்மாரியும், மூன்று ஏக்கர் புகையிலைச் செய்கையும் மேற்கொள்ளும் அந்தக் கிராமத்தின் ஒரே ஒரு பெண், உழைப்பின் சின்னம், லேசுபட்ட உழைப்பல்ல. ராப்பகலா உழைப்பு. மாவலிக்கங்கையிலும் கரையிலும் அவரின் கால்த்தடம் பதியாத ஒரு துண்டு நிலத்தை காண்பதரிது.

உடனடியாக கோழியை நானே அறுத்து உரித்து கண்டம் போட்டுக் கொடுத்தேன். அடுப்படியில் அமர்ந்திருந்த சீமாட்டி அம்மியில் அரைத்து எடுத்த மஞ்சளைகோழி இறைச்சியில் போட்டு பிரட்டி ஒரு பக்கமாக வைத்தார். அவர் அருகே வெள்ளைப்பூடு, துப்பரவு செய்த வெங்காயம், கொச்சிக்காய் என்று பண்ணாக இருந்தது.

அடுப்பில் ஏறிய சட்டி காய்ந்ததும் அவர் கைக்கு எட்டிய தூரத்தில் பென்னம் பெரிய மண் அண்டாவிலிருந்து இரண்டு அகப்பையை அள்ளி சட்டிக்குள் போட்டுக் கடைந்தார். கம கம என வாசம். உற்றுப் பார்த்தேன் சட்டிக்குள் தயிர் ஆடைக்கட்டிகள் சல சலத்து நெய்யாகி உருகும் காட்சி.

அப்படியொரு மணம். மசாலாவில் பிரட்டிய கோழிக்கறியைவளித்துக்கொட்டி கறி மூடியைக் கவிழ்த்து விட்டார். கறி வாசம் காற்றில் கலந்தது. சிறு கொதியலுக்குப் பின்பு கொஞ்சம்சொட்டுப் பாலை விட்டு,பக்கீரப்பா கொண்டு வந்த முட்டைக் கத்தரியில் மூன்று காய்களை கீறு கீறாக வெட்டி கறிச் சட்டிக்கு மேலால் பரப்பி விட்டார்.

இன்று நமது வீடுகளில் சமைக்கும் நாகரீகக் கறியல்ல இது. காட்டுக் கறி, காட்டுப்பூ வாசம் கோழிக்கறிக்கு உருளைக்கிழங்கு தான் நமது கூட்டுஇங்கோ கத்தரிக்காய். கறி அடுப்பிலிருந்து இறங்கியதும் இரண்டு துண்டு இறைச்சியையும், இரண்டு துண்டு கத்தரிக்காயையும், அப்போதுதான் துருவிய சிரட்டையில் போட்டு எனக்கும் அந்த சிங்கள நண்பருக்கும் சீமாட்டி தந்தார்.

அது கறியில் போட்ட கத்தரிக்காய் அல்ல. ஒட்டி மீன் சினைக்கு நிகராக… அந்தக்கத்தரித்துண்டங்கள்் அப்படியொரு ருசிஇந்த 48 வருடங்களில் இன்னமும் எனது அடிநாக்கில்.. அப்பிக்கிடக்கிறது அந்தக்கறியின் பக்குவம்அப்படியொரு கறி இன்று வரையிலும் நான் சாப்பிட்டதுமில்லை.

கறி மணக்கும்…