முஸ்லிம் மாகாணம்: கோரிக்கையும் கோசங்களும்!

முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம், மீண்டும் உசாரடைந்து இருக்கிறது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தனி ஆட்சி அலகு என்கிற கோரிக்கையின் எதிர் விளைவாகும். இலங்கையில், தமிழர்களுக்கு ஓர் ஆட்சி அலகு வழங்கப்படுமாயின், முஸ்லிம்களுக்கென்றும் ஓர் ஆட்சியலகு வழங்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டதோடு, அவ்வாறானதொரு அலகுக்கு வைக்கப்பட்ட பொதுப் பெயர்தான், முஸ்லிம் தனி மாகாணம் என்பதாகும்.

புதிய அரசியலமைப்பு ஒன்றின் உருவாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வரும் நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படுதல் வேண்டும் என்கிற நிலைப்பாட்டினை தமிழர் சமூகம் மீளவும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக, முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்கிற கோசமும் இன்னொருபுறம் உயர்ந்தெழ ஆரம்பித்துள்ளது. முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் அல்லது ஆட்சியலகு என்கிற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கி, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கடந்துவிட்டன.

முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் அல்லது தனியலகு என்கிற கோசம், எவ்வித காரண காரியங்களுமின்றி திடீரென உருவானது அல்ல. தமிழ் சமூகத்துடன் ஒன்றாகக் கலந்து, ‘தமிழ் பேசும் மக்கள்’ என்கிற அரசியல் அடையாளத்துடன் முஸ்லிம் சமூகம் பயணித்த ஒரு காலம் இருந்தது. ஆனால், பிற்காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட அரசியல் ரீதியான ஏமாற்றங்கள் காரணமாக, தமிழர்களின் அரசியலில் இருந்து பிரிந்து, தமிழ் பேசும் மக்கள் என்கிற பொதுமையிலிருந்து விலகி நின்று, தனி அடையாளத்துடன் அரசியல் செய்ய வேண்டியதொரு நிலை முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது.

இவ்வாறானதொரு மாற்றம் உருவாகுவதற்கு தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழர் ஆயுதப் போராட்ட இயக்கங்களுமே பிரதான காரணமாகும் என்கிற குற்றச்சாட்டு முஸ்லிம்களின் தரப்பில் உள்ளது. அண்ணன் அமிர்தலிங்கம், தமிழீழத்தைப் பெற்றுத் தரா விட்டாலும், தான் பெற்றுத் தருவேன் என்று கோசித்து, ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியோடு இணைந்து அரசியல் செய்த எம்.எச்.எம். அஷ்ரப், பிற்காலத்தில் முஸ்லிகளுக்கென்று ஒரு கட்சியினை உருவாக்கியமைக்கும், முஸ்லிம் தனி ஆட்சி அலகு பற்றிய கோரிக்கையினை முன்வைத்து அரசியல் செய்தமைக்கும் காரண, காரியங்கள் இல்லாமல் இல்லை.

பல தசாப்தங்களுக்கு முன்னர், தமிழ் பேசும் மக்கள் என்கிற பொது அடையாளத்தின் கீழ், தமிழ் சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கும் அரசியல் செய்வதற்கும் தயாராக இருந்த முஸ்லிம் சமூகம், இப்போது அதற்குத் தயாரில்லை என்பதுதான் நிலைவரமாகும். தமிழ் பேசும் மக்களுக்கானது என்கிற கோசத்தோடு ஆரம்பிக்கப்பட்ட அரசியலும் ஆயுதப் போராட்டங்களும், பின்னர் தமிழ் மக்களுக்கான போராட்டமாக திசை மாறத் துவங்கியபோது, முஸ்லிம் சமூகம், தனக்கான தனித்த அரசியல் தேவை குறித்து, மிகத் தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கியது என்பதுதான் கசப்பான உண்மையாகும்.

அவ்வாறான சிந்தனையிலிருந்து பிறந்த விடயங்களில் ஒன்றுதான் முஸ்லிம்களுக்கான தனி ஆட்சியலகு அல்லது முஸ்லிம் மாகாணம் என்பதாகும். மாகாண சபை முறைமை நாட்டில் உருவாக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்த கையோடு, வடக்கு – கிழக்கு மாகாணங்கள் நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு அதற்கான தேர்தலும் நடத்தப்பட்டது. வடக்கு மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இவ்வாறு இணைக்கப்பட்டு, ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டமை காரணமாக, கிழக்கில் 33 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் சனத்தொகையானது, இணைந்த வடக்கு – கிழக்கில் 17 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது.

இதனால், இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகத்தில் முஸ்லிம்களுக்கான அனைத்துவித வளப் பங்கீட்டிலும் பாதிப்பு ஏற்பட்டது. ஆகையினால்தான், வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைக்கும் வகையிலான ஏற்பாடொன்றுக்கு வழிகோலிய இலங்கை – இந்திய ஒப்பந்தத்தினை முஸ்லிம் சமூகத்தின் முதுகில் எழுதப்பட்ட அடிமை சாசனம் என்று, முஸ்லிம் காங்கிரஸ் கூறிவருகிறது. இன்னொருபுறம், இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தின் கீழ், முஸ்லிம் மக்கள் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டனர் என்கிற குற்றச்சாட்டுக்களும் பரவலாக உள்ளன.

எனவே, இவ்வாறான கசப்பான அனுபவங்களின் காரணமாக முஸ்லிம்களுக்கென்று தனி ஆட்சி அலகொன்றின் தேவையானது பரவலாகவும், ஆழமாகவும் உணரப்பட்டது. அவ்வாறான அலகுக்கு முஸ்லிம் தனி மாகாணம் என்றும், தென்கிழக்கு அலகு என்றும் பல்வேறு பெயர்கள் முஸ்லிம்கள் தரப்பில் சூட்டப்பட்டன. முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசம், ஒரு காலத்தில் உச்ச நிலையினை அடைந்திருந்த போதிலும், பின்னர் அந்தக் கோசம் ஒரு கட்டத்தில் நிசப்தித்துப் போனது. ஆயினும், அந்தக் கோரிக்கையை உயர்த்திப் பிடித்தவர்கள், அதற்குச் சமாந்தரமாக கரையோர மாவட்டக் கோரிக்கையினை கையில் எடுத்தார்கள்.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் தனியலகு அல்லது மாகாணக் கோரிக்கையானது, கரையோர மாவட்டக் கோரிக்கையாகத் தேய்ந்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், இது குறித்து முஸ்லிம் தனியலகுக் கோரிக்கையாளர்கள் எதுவித தெளிவினையும் முஸ்லிம் சமூகத்துக்கு வழங்கியிருக்கவில்லை. எவ்வாறாயினும், இப்போது மீண்டும் முஸ்லிம் தனி மாகாணம் பற்றிய கோசம் மேலெழத் தொடங்கியிருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி ஆகியோர் முஸ்லிம் தனியலகுக் கோரிக்கையினை இப்போது தூக்கிப் பிடித்திருக்கின்றார்கள்.

ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேற்படி இருவரின் கோசங்கள் குறித்து, தனது தரப்பில் எதுவித அசைவினையும் தற்போதைய நிலையில் வெளிக்காட்டவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. மு.காங்கிரஸின் தவிசாளரும் செயலாளரும், மு.கா. தலைவருடன் வெம்மையான மனநிலையில் உள்ளனர் என்பது குறித்து, அந்தக் கட்சி தொடர்பான அரசியல் பற்றித் தெரிந்தவர்கள் அறிவர். மு.கா. தலைவருக்கும் அந்தக் கட்சியின் தவிசாளர் மற்றும் செயலாளருக்கும் சொல்லிக் கொள்கின்றாற்போல் நல்லுறவில்லை என்பது கட்சியின் அடிமட்ட ஆதரவாளருக்கும் தெரியும்.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் மற்றும் செயலாளர் ஹசன் அலி ஆகியோர் முஸ்லிம் தனி மாகாணம் என்கிற கோசத்தினை, ஏன் திடீரென உயர்த்திப் பிடிக்கத் துவங்கியுள்ளனர் என்கிற கேள்வி பரவலாக எழத் துவங்கியுள்ளது. இந்தக் கோசத்துக்கு அரசியல் உள்நோக்கம் இல்லாமலிருக்க முடியாது என்று பலரும் பேசிக் கொள்கின்றனர். ஆனாலும், முஸ்லிம்களுக்கான ஆட்சியலகு அல்லது தனி மாகாணம் என்கிற கோசத்தினை உயர்த்திப் பிடிப்பவர்களிடம், அவ்வாறானதொரு அலகு பற்றிய உத்தேச வரைபுகள் எவையும் இருக்குமா என்று தெரியவில்லை. மேலும், அவ்வாறானதொரு வரைவினை உருவாக்குவதற்கான முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டதாகவும் அறியக் கிடைக்கவுமில்லை.

ஆக, முஸ்லிம் தனியலகுக் கோரிக்கை என்பது, இன்று வரை முஸ்லிம்கள் தரப்பில் வெறும் கோசமாக மட்டுமே முன்வைக்கப்பட்டு வருகிறது என்பதுதான் உண்மை நிலையாகும். இது ஒருபுறமிருக்க, இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணம் என்பதை தமிழர் தரப்பு வலியுறுத்தி வருகின்ற போதிலும், அந்த மாகாணங்களை மீளவும் இணைப்பதற்கு, முஸ்லிம்கள் தரப்பில் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. மிகச் சரியாகக் கூறினால், வடக்கு – கிழக்கு மாகாணங்களை மீளவும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அதனை நிச்சயம் எதிர்ப்பார்கள். மட்டுமன்றி, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களில் ஒரு தொகையினரும் அவ்வாறானதொரு இணைப்புக்கு எதிராகக் கிளம்பவும் கூடும்.

இன்னொருபுறம், வடக்கு – கிழக்கு முஸ்லிம்களின் பிரதான அரசியல் கட்சியான முஸ்லிம் காங்கிரஸும், வடக்கு – கிழக்கு இணைப்பினை எதிர்த்து நிற்பதற்கான சாத்தியங்கள்தான் அதிகம் உள்ளன. இது இவ்வாறிருக்க, வடக்கு – கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு சிங்கள ஆட்சியாளர்கள் சம்மதிப்பார்களா என்பது, இன்னொரு பக்கக் கேள்வியாக உள்ளது. ஆக, வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமாகாது என்கிற நிலைவரமொன்று உருவானால், தமிழர் தரப்பு எவ்வாறான எதிர்வினையினை ஆற்றும் அல்லது என்ன வகையான மாற்றுத் திட்டத்தினை முன்வைக்கும் என்பதைப் பொறுத்தே, முஸ்லிம்களுக்கான தனி ஆட்சியலகு அல்லது மாகாணம் என்கிற விவகாரமும் கவனம்பெறும்.

முஸ்லிம்களுக்கான தனி ஆட்சியலகு அல்லது முஸ்லிம் மாகாணம் என்பது, தமிழர்களுக்கான தீர்வுத் திட்டத்துடன் ஒன்றிப் பிணைந்த ஒரு விவகாரமாகும். அநேகமாக, இப்போது உள்ளமை போல, வடக்கும் கிழக்கும் தனித்தனியான மாகாணங்களாக இருக்கும் வகையில், மாகாண சபை ஆட்சி முறைமையே இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டமாக அமுல்படுத்தப்படுமேயானால், இனங்களின் அடிப்படையில் தனியான ஆட்சி அலகு என்கிற பேச்சுக்களுக்கெல்லாம் இடமில்லாமல் போய்விடும். ஆனாலும், உத்தேச அரசியலமைப்பில், முஸ்லிம்களுக்கான தனி மாகாணம் என்கிற விடயத்தினை, ஒரு யோசனையாக முன்வைப்பதில் முஸ்லிம்களுக்கு நஷ்டம் ஒன்றும் ஏற்பட்டு விடப் போவதில்லை.

அதனால், இந்தக் கோரிக்கையின் சொந்தக்காரரக்கள் அல்லது இந்தக் கோரிக்கையினை இப்போதைக்குத் தூக்கிப் பிடித்திருப்பவர்கள், தமது கட்சி சார்பில் அல்லது தனிப்பட்ட ரீதியில் இதனை புதிய அரசியலமைப்புக்கான யோசனையாக முன்வைக்க முடியும். ஒரு காலகட்டத்தில் தமிழர்களிடையே உணர்வுபூர்வமாக முன்வைக்கப்பட்டு வந்த தமிழீழக் கோரிக்கையானது, பின்னர் அரசியல் கோசமாக மாறியமை போல, முஸ்லிம் தனியலகு என்கிற கோரிக்கையானது, இப்போது வெற்றுக் கோசமாக மாறிப்போய் விட்டது எனும் குற்றச்சாட்டுக்கள் பரவலாகவே உள்ளன. இதில் உண்மைகளும் இல்லாமலில்லை.

இதில் சுட்டிக்காட்டத்தக்க இன்னொரு விடயம் என்னவென்றால், முஸ்லிம்களுக்கான தனியலகு அல்லது முஸ்லிம் மாகாணம் என்கிற கோரிக்கை தொடர்பிலும், அதன் தேவை குறித்தும் அலட்டிக்கொள்ளாத கணிசமானதொரு தொகை முஸ்லிம் மக்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் உள்ளனர் என்பதாகும். வடக்கு – கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் சிங்கள சமூகத்தினரிடையே வாழ்ந்து வரும் முஸ்லிம் மக்கள், முஸ்லிம் தனியலகுக் கோரிக்கை என்பதை, பிரச்சினைக்குரியதொரு விவகாரமாகவே பார்க்கின்றனர்.

இவ்வாறு, பல்வேறுபட்ட முகங்களையும் கோணங்களையும் கொண்ட முஸ்லிம் மாகாணம் என்கிற விவகாரத்தினை, அரசியல் என்கிற குளத்தில் சலனத்தினை ஏற்படுத்துவதற்காக எறியும் கற்களாக யாரும் பயன்படுத்தி விடக் கூடாது. புதிய அரசியலமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் காலகட்டத்தில், முஸ்லிம் தரப்பில் வெறும் சிலுசிலுப்புக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்காமல், பலகாரங்களை சுட்டெடுக்கும் பணிகளை மேற்கொள்தல் அவசியமாகும்.

– மப்றூக் –