அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது

 

வெளிநாடு வாழ் இலங்கையர் தமிழர் ( NRTSL )அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்ட கூட்டத்தில் இலங்கைக்கான அரசியல் அமைப்பின் உள்ளமைப்பு, அதனை நிறைவேற்றுவதற்கான புறச்சூழல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த 9-10-15ம் திகதி லண்டனில் இடம்பெற்றது.  இச் சந்திப்பில் தேசத்தின் நலனில் குறிப்பாக சிறுபான்மைத் தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் குறித்து ஆர்வமும், அபிப்பிராயங்களையும் வெளியிடும் பலர் கலந்துகொண்டனர். மிகவும் திறந்த அடிப்படையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தற்போது இலங்கையில் நிலவும் அரசியற் பின்னணியானது அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உகந்த சூழல் என்பதோடு அதிகார பரவலாக்கத்தினை வழங்கும் நல்லாட்சியை உறுதிப்படுத்துவதற்கான தருணம் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


தமிழர் தேசியக் கூட்டமைப்பினரால் தொடரப்படும் அரசுடனான நல்லிணக்கமும், நட்பும் தீவிரவாத சக்திகளின் பிரச்சார சுமைகளை முறியடிப்பதாக உள்ளது என்பது அடையாளப்படுத்தப்பட்டது. புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்தவதற்கான பல்வேறு வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டது. தேசிய அரசாங்கம் என்பது இரண்டு ஆண்டுகள் செயற்படும் என தற்போது வரையறுக்கப்பட்டுள்ள நிலையில் அரசிற்கு ஏற்படக்கூடிய பலவேறு அழுத்தங்கள் குறித்தும் குறிப்பாக வெளியார் தரப்பான ஐ நா மனித உரிமை ஆணைக்குழுவின் அழுத்தங்களால் ஏற்படக்கூடிய சர்வதேச விளைவுகள் குறித்தும் பல்வேறு அபிப்பிராயங்கள் வெளியிடப்பட்டன.

கடந்த காலங்களில் தேசியப் பிரச்சனைகள் குறித்து வெளியான பல்வேறு முன்மொழிவுகள் பரந்த, பகிரங்க விவாதங்களினூடாக சென்றுள்ளதால் அவற்றை மீண்டும் விவாதத்திற்குட்படுத்தி நீண்ட விவாதங்களையும், தேவையற்ற குழப்ப நிலமைகளையும் தோற்றுவிக்க உதவாமல் அவற்றை ஒருசேர ஆராய்ந்து, மீளாய்வு செய்து நடைமுறைக்குட்படுத்துவது தற்போதைய புறச்சூழலுக்குப் பொருத்தமானது என பொதுவான கருத்து உடன்பாடு காணப்பட்டது.

கடந்த காலத்தில் விவாதிக்கப்பட்ட சில முக்கிய ஆவணங்களான மங்கள முனசிங்க அறிக்கை, சந்திரிகாவின் அரசியல் பொதி, பேரா. திஸ்ஸ விதாரணவின் சர்வகட்சி மாநாட்டு அறிக்கை என்பன தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது அவசியம் எனவும் குறிப்பாக சந்திரிகா அவர்களால் 1995 இல் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் பொதி பலராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது என்ற அபிப்பிராயம் நிலவியது. இருப்பினும் 1997 இல் திருத்தங்களுடன் அப் பொதி சமர்ப்பிக்கப்பட்டது போல மீண்டும் திருத்தங்களை முன்வைக்கும் சூழல் இல்லாமலில்லை என்ற எச்சரிக்கையும் வெளியிடப்பட்டது.

திஸ்ஸ விதாரண தலைமையிலான சர்வகட்சி மாநாட்டு அறிக்கை முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ இனால் கிடப்பில் போடப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகளின் அபிப்பிராயங்களின் அடிப்படையில் உருவாகிய அவ் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாதது துர் அதிர்ஸ்டமே என்ற வருத்தமும் வெளியிடப்பட்டது.

அரசியல் அமைப்புத் தொடர்பான பரந்த விவாதங்களினால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பரந்த, வெளிப்படையான, அர்த்தமுள்ள விவாதங்களின் அவசியம் பற்றிய கரிசனைகள் மத்தியில் தமிழ், சிங்கள தீவிரவாத சக்திகள் இவ் விவாதங்களைத் திசை திருப்பி தத்தமது குறுகிய நலன்களுக்குப் பயன்படுத்தும் ஆபத்துக் குறித்த அம்சங்களும் வெளியிடப்பட்டன. இவ்வாறான ஆபத்துக்கள் இருந்த போதும் அவை மக்கள் மத்தியிலான பரந்த ஜனநாயக விவாதத்தைத் தடுக்கும் காரணியாக அமைய இடமளிக்கக் கூடாது எனவும் கருதப்பட்டது.

இவ்வாறான சிக்கலான பின்னணியில் அரசாங்கமும், தமிழர் கூட்டமைப்பும் மிகவும் திறந்த விதத்தில் அரசியல் அமைப்பு அம்சங்கள் குறித்த விவாதங்களை நடத்துவதே உகந்தது எனவும், குறிப்பாக இரகசிய உடன்பாடு எதிலும் ஈடுபடுவதை தவிர்ப்பதே மேலானது என அபிப்பிராயம் தெரிவிக்கப்பட்டது. இலங்கைத் தேசியப் பிரச்சனையில் புலம்பெயர் இலங்கையர்களின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால் அரசும், கூட்டமைப்பினரும் புலம்பெயர் மக்களுடனும் கலந்துரையாட பொறிமுறை தேவை எனவும் வற்புறுத்தப்பட்டது.