கோப்பா அமெரிக்கா: மீண்டுமொரு ‘கடவுளின் கோல்’; வெளியேறியது பிரேஸில்

தென்னமரிக்க நாடுகளுக்கிடையே, ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்றுவரும் 100ஆவது கோப்பா அமெரிக்கா தொடரின் குழு நிலைப் போட்டிகளுடனேயே, கால்பந்தாட்ட ஜாம்பவானான பிரேஸில் வெளியேறியுள்ளது. 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதற்தடவையாக, இம்முறையே, குழுநிலைப் போட்டிகளுடன் பிரேஸில் வெளியேறியுள்ளது.

1986ஆம் ஆண்டு உலகக்கிண்ண காலிறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணிக்கெதிராக, கால்பந்தாட்ட ஜாம்பவானான டியகோ மரடோனா கையால் பெற்ற கடவுளின் கோல் போல, பெரு, பிரேஸில் ஆகிய அணிகளுக்கிடையிலான இறுதிக் குழு பி போட்டியில், பெரு அணியின் ராவூல் ருடியாஸ், போட்டியின் 75ஆவது நிமிடத்தில் கையால் தட்டிப் பெற்ற கோலின் மூலம் பெரு அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கோப்பா அமெரிக்காவின் இந்தத் தொடர் முழுவதுமே நடுவரின் தீர்ப்புகள், பரவலாக விமர்சனத்துக்குள்ளாகியிருந்த நிலையில், பிரேஸிலின் முதலாவது குழு நிலைப் போட்டியில், ஈக்குவடோர் பெற்ற கோலானது, செல்லுபடியற்றது என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஈக்குவடோர், ஹெய்ட்டி அணிகளுக்கிடையிலான மற்றைய குழு பி போட்டியில், 4-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஈக்குவாடோரும் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.