எம்மவர் உண்ணா விரதம் தொடர் கதை தானா?

(மாதவன் சஞ்சயன் )

நல்லாட்சியில் கூட மாறாது தொடரும் மோசமான நிலை இதனை எழுதத் தூண்டுகிறது. சிறைகளில் வாடும் எம் உறவுகள் தம் விடுதலை வேண்டி தொடங்கிய உண்ணா விரதம் சிலருக்கு அரசியல், பலருக்கு வேதனை. இவர்கள் ஒன்றும் கொலையாளிகளோ, பாலியல் வன்புணர்வில், மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்களோ அல்ல. இனத்துக்கு நடந்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு போராடியவர்கள் அல்லது, போராளிகள் என்று அவர்கள் நம்பியவர்ளுக்கு உதவி செய்தவர்கள். அவர்களை பிடித்த படையினர் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் பிடித்தோம் என்ற சாட்சியங்களை அன்றே கொடுத்திருந்தால் நீதி மன்றில் அவர்கள் குற்றவாளிகளா இல்லையா என்பது எப்போதோ வெளிவந்திருக்கும். மாறாக அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே ஒரு காரண அடிப்படையில், கொட்டியா (புலி) என்று சந்தேகித்து, விசாரணை கூண்டில் அடைக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன.

கொட்டியாவுக்கு (புலி) உதவினார் என்ற தீர்ப்புக் கூறி ஐயருக்கு 300 வருட தண்டனை. அவர் மனைவிக்கு விடுதலை. ஆனால் அவரின் பல தங்கப் பவுண் நகையை கையகப்படுத்திய சிறை காவலர் கூறும் கதை, நடந்த கலவரத்தில் அவை காணாமல் போய்விட்டன என்பதே. தூரப் பயணம் போன வணிகன் நண்பனிடம் தனது இரும்பு கடையை பாதுகாக்க கொடுத்துச் செல்ல, நண்பனோ நல்ல விலை வந்ததால் அத்தனை இரும்பையும் விற்று பின் பயணம் முடித்து திரும்பி வந்த நண்பனிடம் உன் இரும்புகளை எலிகள் திண்டு தீர்த்து விட்டன என கூறிய, பாலர் வகுப்பு கதை போன்றதே சிறைக் காவலர் கூறும் கதை. தட்டிக் கேட்க நாதி அற்றவன் தமிழன் என நினைக்கும் சிங்கள சிறைக்காவல் அதிகாரியை, கூண்டில் நிறுத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற கேள்விக்கு நல்லாட்சியில் பதில் என்ன?

நல்லாட்சி என்று எல்லோரும் இன்று கூறும் நல்லாட்சி யாருக்கு என்ற கேள்வி நாளாந்தம் நடக்கும் அசாதாரண நிகழ்ச்சிகளால் எம் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை. நாம் வெறுக்கும் ஒருவர் இல்லாமல் போனால் அது நல்லாட்சி ஆகிவிடுமா ? எம்மை வெறுப்படைய செய்த அதே நிகழ்வுகள் தொடர்ந்தால் அது நல்லாட்சியா ? மகிந்தவை வெறுத்தோம். காரணம் யுத்தம் முடிந்தபின் அவர் முன்பு முழுநாட்டுக்கும் மட்டுமல்ல, இந்தியா உட்பட சர்வதேசத்துக்கும் சொன்ன, 13+ ஐ காற்றில் எழுதிய கவிதை போல கற்பனையாக்கி தெற்கை ஆசியாவின் அதிசயமாக்கவும் வடக்கு கிழக்கின் அழகிய கடற்கரைகளை தன் பூட்டன் சொத்துப் போல தன் அடிவருடி கூட்டத்துக்கு பங்கிட்டும், யுத்த வெற்றி தந்த ராணுவத்தை வடக்கின் வளமான தமிழர் நிலங்களை கபளீகரம் செய்ய, மூலை முடுக்கெல்லாம் முகாம் அமைக்க அனுமதித்துமே ஆகும்.

சரணடைந்த பொதுமக்கள், போராளிகள் கணக்கு விபரம் எவருக்கும் தெரியாது. அதில் பரலோகம் அனுப்பப்பட்டவர் தொகை அவர்களே, தம் உறவுகள் கனவுகளில் வந்து சொல்லி அதை புதிதாக கூட்டமைக்கும் சுரேஸ் பிரேமசந்திரன்-கஜேந்திர குமார் கூட்டணி பதிவு செய்து, ஐ நா வுக்கு அறிவித்தால் மட்டுமே தெரியவரும். அதனைக் கூட கனவுக்கான போதிய ஆதாரம் இல்லை என்பதால் குற்றவியல் நீதிமன்றம் கொண்டு செல்ல முடியாது என சுமந்திரன் கூறியதால் ஐ நா கவனத்தில் கொள்ளவில்லை, இனக்கொலை என்பதை எம் முதல்வரே சொன்னபின் ஐ நா வில் இவருக்கு என்ன வேலை
என, பத்திரிகை மாநாடு வைத்து சுமந்திரனை சாடுவர். காரணம் நல்லாட்சி மலர மைத்திரி வெல்லவேண்டும் என விரும்பிய சுரேஸ் பொது தேர்தலில் தான் தோற்பேன் என எதிர் பார்க்கவில்லை. குமார் மகன் நிலை அதை விட மோசம்.

ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க சொல்லி, அதன் மூலமாக மகிந்தவின் வெற்றியை எதிர்பார்த்தவர் பொதுத்தேர்தலில் தோற்று, தன் கட்டுப்பணத்தை மட்டும் காப்பாற்றினார். இப்போ இருவரும் கூட்டாக குட்டையை குழப்ப தொடங்கி உள்ளனர். ஏற்கனவே குழம்பி உள்ள தமிழர் அரசியல் குட்டையை தம் பங்கிற்கு மேலும் குழப்பி, சிக்கலை பெரும் சிக்கல் ஆக்க முயல்கின்றனர். சரணடைந்தவர்களில் 12 ஆயிரம் பேருக்கு புனர்வாழ்வு கொடுத்தததாக கூறிய மகிந்த அரசு எத்தனை பேரை காணாமல் போகச்செய்தது என்பதற்கு கணக்கு காட்டவில்லை. சனல் 4 காட்டுவதையும் அவர்கள் மறுக்கின்றனர் முள்வேலி முகாம்களில் மிருகங்கள் போல அடைக்கப்பட்ட மக்களில் எத்தனை பேருக்கு மண்ணுக்குள் புகலிடம் கொடுக்கப்பட்டது என்ற எண்ணிக்கை விபரம் தோண்டினால் தான் வெளிவரும். முள் கம்பி முகாம் அகன்று சொந்த மண்ணில் அகதி முகாங்களில் வாழ்பவர் நிலங்கள் இராணுவப் பிடியில்.

இந்த நிலை மாறும் என்று நல்லாட்சி மலர மக்கள் மைத்திரிக்கு வாக்களித்து, 100 நாள் வேலைத்திட்டத்தில் நல்லது நடக்கும் என எதிர் பார்த்தனர்.  நடந்தது என்ன? சிராணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதிபதி ஆனார். சரத் பொன்சேகா பீல்ட் மார்சல் ஆனார், இப்படி பல விடயங்கள் தெற்கை குளிரவைக்க நடந்தேறின. வடக்கில் அகதிமுகாம் வாழ்க்கையே தொடர்கிறது. ராணுவ பிரசன்னம் குறையவில்லை. மக்களின் காணிகள் மீளளிக்கப் படவில்லை. விசாரணை இன்றி சிறை வாடும் அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவில்லை. சீகிரிய குன்றில் கிறுக்கிய கிழக்கு தமிழ் பெண் மட்டும் மைத்திரி கருணையில் சிறைமீண்டது மட்டுமே நடந்தது. சில வாரம் சிறை இருந்தவரை விடுவிக்க போட்ட அதே கையால் பல வருடங்கள், மாதங்கள் என விசாரணை இன்றி வாடும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலைக்கும் உத்தரவு போட, அவருக்கு தெரியவில்லையா அல்லது விரும்பவில்லையா ?

கையெழுத்து போட்டால் தெற்கில் என்ன நடக்கும் என்பது அவருக்கு தெரியும். அதனால் தான் போட விரும்பவில்லை. வாக்கு அரசியல் அவரையும் விட்டு வைக்க வில்லை. அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலை அது பாதிக்கும் என்பது அவர் கணக்கு. அன்று நல்லாட்சிக்கு என மைத்திரியை தெரிவு செய்ய உதவிய, எமது மக்கள் தான் நல்லரசு வரவும் உதவினர். நல்லாட்சி நாயகனுக்கு நல்ல அரசு அமைந்தால், எம் பிரச்சனைகள் தீரும் என்ற ஒரு நப்பாசை தான் வாக்குகளாக மாறி 38 வருடங்களின் பின் தமிழர் ஒருவர் எதிர்க் கட்சி தலைவரானார். 1977ல் வந்த வடக்கின் பெரும் தலைவனுக்கு பின் 2015ல் கிழக்கின் பெரும் குடிமகன் எதிர்க் கட்சி தலைவர் ஆனதும் அன்று 1977ல் பெறுவோம் தமிழ் ஈழம் என நம்பியது போன்ற எதிர் பார்க்கை இன்றி, இன்று சர்வதேச தலையீட்டால் இனியாவது தீரும் எம் நீண்ட கால பிரச்சனை, என்ற நம்பிக்கை வாக்களித்த மக்கள் மனதில் ஏற்ப்பட்டது.

காரியம் கைகூட நிதானம் தேவை என சொல்பவர் சம்மந்தர். அதன்படி செயல்ப்படுபவர் சுமந்திரன். ஐ நா தீர்மானத்தில் இந்தளவாவது வந்தது அவரின் தொடர் செயல்ப்பாட்டால். அதை சகுனப் பிழைக்காக மூக்கறுக்கும் செயலை சுரேஸ்- கஜன் அணி செய்தாலும், உண்மை அந்த அறிக்கையை வாசித்து விளங்க கூடிய நடுநிலையாளர்களுக்கு விளங்கும். பதவி மோகத்தில் தொட்டதற்கெல்லாம் நொட்டை சொல்பவர் சொல்லிக்கொண்டே இருப்பர். அதை கவனத்தில் கொள்ளாது காரியம் தொடர சம்மந்தர் சுமந்திரன் முயலும் வேளையில், அதை விட முக்கியமான உள்ளூர் கடமை அவர்கள் கவனத்தில் முன்னுரிமை பெறவேண்டிய அவசரமான, அவசியமான நிலை தோன்றியுள்ளது. அதுதான் அரசியல் கைதிகளின் தொடர் உண்ணா நிலை போராட்டம். சர்வதேசத்தை ஓரளவு எமக்கு சாதகமாக்கிய இவர்கள், மைத்திரியின் கரிசனையை எமது அரசியல் கைதிகள் விடயத்தில் உடன் பெறவேண்டும்.

இறந்தவர்களுக்கு நீதிகேட்டு ஐ நா வரை போன நாம், உயிருடன் வதைபடும் இவர்களின் விடுதலைக்காய் விரைந்து செயல்ப்பட வேண்டும். இதுவரை மயங்கியவரின் இறப்புக்கு பின் பிலாக்கணம் பாட ஒரு கூட்டம் காத்திருக்கிறது. மரணத்தை கொண்டாடும் அவர்கள் பறைகளை தம் கையேந்தும் முன் சம்மந்தர் சுமந்திரன், மைத்திரியின் முடிவை எம்மவர் விடுதலைக்காய் பெற வேண்டும். எல்லா தேர்தல்களும் முடிந்துவிட்டன. இனி வாக்கு அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை. சர்வதேச விசாரணையில் தம் இருப்புக்கு பாரிய ஆபத்தில்லை என மகிந்த கூட்டமும் மன நிம்மதி அடைந்துள்ளது இந்த நேரத்தில் மைத்திரி தெளிவான முடிவை எடுக்கலாம். நல்லாட்சியில் இதுகூட அவரால் முடியவில்லை என்றால் பிள்ளையானை விசாரிப்பது போல் டக்ளஸ் கே பி கருணா என பல சம்பவங்களின் சூத்திரதாரிகளை விசாரணை என்ற பெயரில் உள்ளே வைக்க சொல்லுங்கள் நல்லாட்சி சிறக்கும்.