புதிய அரசியலமைப்பைக் குழப்பிவிடுவாரா விக்னேஸ்வரன்?

புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்வதையே, புத்தாண்டில் தாம் நிறைவேற்ற வேண்டிய அதி முக்கிய கடமையாக அரசாங்கம் கருதுவதாகத் தெரிகிறது. உண்மையிலேயே, புதிய அரசியலமைப்பென்று கூறப்பட்டாலும், பிரதானமாக மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பாகவே அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வரப்படப் போகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழித்தல், தேர்தல் முறையில் சீர்த்திருத்தம் கொண்டு வருதல் மற்றும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியனவே அந்த மூன்று விடயங்களாகும்.

தாம் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் எதிர்வரும் சனிக்கிழமையன்று, (ஜனவரி 9 ஆம் திகதி) அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்காக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்கான பிரேரணையை முன்மொழிந்து, தாம் விசேட உரையொன்றை நிகழ்த்தவிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கெனவே தெரிவித்திருக்கிறார்.

அதேவேளை, அவ்வாறு அரசியலமைப்புச் சபையொன்றின் மூலம் புதிதாக அரசியலமைப்பொன்றை வரைபு செய்தாலும் அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்பொன்றின் மூலம் அதற்கு மக்களின் அங்கிகாரமும் பெறப்படும் என்றும் அரசாங்கம் தெரிவித்து இருக்கிறது.

அரசியலமைப்புச் சபையானது, இலங்கையில் முன்னுதாரணம் உள்ள விடயமாக இருந்த போதிலும் அது தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பொறிமுறையல்ல. ஆயினும், இது இலங்கையில் ஒரு முறை அரசியலமைப்பை மாற்றி அமைப்பதற்காக உபயோகிக்கப்பட்ட பொறிமுறையாகும்.

1972ஆம் ஆண்டு இலங்கையின் முதலாவது குடியரசு அரசியலமைப்பை வரைவதற்காக, அப்போதைய பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றினார். அந்த அரசியலமைப்புச் சபை, கொழும்பு ரோயல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த நவரங்கஹல என்ற மண்டபத்திலேயே கூடியது. அவ்வாறு வரையப்பட்ட முதலாவது குடியரசு அரசியலமைப்பின் மூலமே, இலங்கை மீதான பிரித்தானியாவின் ஆதிக்கம் முற்றாக ஒழிக்கப்பட்டது.

மேலே குறிப்பிடப்பட்ட மூன்று விடயங்களில், தற்போதைய நிலையில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வதானது, தேர்தல் முறையை மாற்றி அமைப்பதை விடவும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடவும் இலகுவானது என்றே தெரிகிறது. இதுவரை காலமும் இரு பிரதான கட்சிகளில், பதவியில் இல்லாத கட்சியே நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் எனக் கோரியது. பதவியல் இருந்த கட்சிகள் அந்த விடயத்தில் இழுத்தடிப்பு செய்து கொண்டே இருந்துள்ளன.

இம் முறையும் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான எதிர்க்கட்சிக் குழு, நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய விரும்பும் என்றே ஊகிக்க முடிகிறது. ஏனெனில், கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் படி, ஒருவர் இரு முறை தான் நாட்டின் ஜனாதிபதியாக இருக்கலாம். எனவே, ஏற்கெனவே இரு முறை ஜனாதிபதியாக இருந்த மஹிந்தவுக்கு இனி ஜனாதிபதியாக முடியாது. அவர் அரச தலைவராக மீண்டும் பதவிக்கு வருவதாக இருந்தால், ஒருவர் எத்தனை முறையேனும் ஜனாதிபதியாகும் வகையில் அரசியலமைப்பு மீண்டும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அல்லது நிறைவேற்று ஜனாதிபதி முறை முற்றாக ஒழிக்கப்பட்டு பிரதமர் அரச தலைவராகும் நிலை உருவாக வேண்டும்.

ஒருவர் எத்தனை முறையேனும் ஜனாதிபதியாகும் வகையில் அரசியலமைப்பு மீண்டும் மாற்றி அமைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை. ஆனால், பிரதமர் அரச தலைவராகும் வகையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். இதனை மஹிந்த எதிர்க்க வேண்டிய அவசியமே இல்லை. எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் தீர்க்கமான முடிவை எடுத்தால் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்வது கடினமான விடயமாகாகது.

ஆனால், மற்ற இரண்டு விடயங்களும் மிகவும் சிக்கல் மிகுந்த விடயங்களாகும். தேர்தல் முறையை மாற்றி அமைப்பதற்காக, பொதுத் தேர்தலுக்கு முன்னர் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு சிறுபான்மையினக் கட்சிகளும் சிறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அப்போது அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியவில்லை.

தற்போதைய விகிதாசார தேர்தல் முறைக்குப் பதிலாக, விகிதாசார தேர்தல் முறையினதும் தொகுதிவாரி தேர்தல் முறையினதும் கலப்புத் தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற விடயத்தில், நாட்டிலுள்ள சகல அரசியல் கட்சிகளும் இணக்கம் கண்டுள்ளன. ஆனால், விகிதாசார தேர்தல் முறையின் கீழ் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும், கலப்பு தேர்தல் முறையின் கீழ் எத்தனை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற விடயத்திலேயே இணக்கம் காண முடியாதிருக்கிறது.

இது சுமார் ஒரு தசாப்த காலமாக நிலவி வரும் சர்ச்சையாகும். அப்போது இருந்த நிலைப்பாடுகளில் இருந்து இரு பிரதான கட்சிகளோ சிறு மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளோ இன்னமும் விலகவில்லை. எனவே, இந்த விடயம் புதிய அரசியலமைப்பை வரையும் போதும் பெரும் இடைஞ்சலாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இந்த விடயத்தில் எவரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.

இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயமும் 1980களில் இருந்தே தீராத சர்ச்சையாகவே இருந்து வந்துள்ளது. ஒவ்வொரு அரசாங்கத்தின் கீழும், ஆளுங்கட்சி, தமிழ்க் கட்சிகளுடன் ஏதாவது இணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முற்படும் போது, அந்தந்தக் காலத்தில் இருந்த எதிர்க் கட்சிகள் அதனைப் பாவித்து இனவாதத்தை தூண்டி தீர்வை தடுத்து வந்துள்ளன. ஒரே ஒரு முறை மட்டும் அதாவது, 2002ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதான பேச்சுவார்த்தைகளின் போது மட்டும் ஆளுங்கட்சியின் முயற்சிக்கு எதிர்க்கட்சி முட்டுக்கட்டை போடாமல் இருந்துள்ளது.

அந்த சமாதானப் பேச்சுவார்த்தையின் போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் புலிகளும் சமஷ்டி முறையின் கீழ் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்ற இணக்கப்பாட்டுக்கு வந்த போது, ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி, அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை.

அதேவேளை, தாம் தேடும் தீர்வு என்ன என்பது தமிழ்க் கட்சிகளுக்கும் இன்னமும் தெரியாது. அண்மையில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையும், இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மக்கள் அபிப்பிராயத்தை திரட்டவும் நிபுணர்களின் கருத்துக்களை அறியவும் தாம் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தது. சுமார் முப்பது ஆண்டு கால ஆயுதப் போர் உள்ளிட்ட ஆறு தசாப்தங்களுக்கு மேலான போராட்டத்துக்குப் பின்னர் தான் பேரவை இவ்வாறு அறிவித்துள்ளது. அதாவது தமக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றி தமிழ்த் தலைவர்களிடையே இணக்கப்பாடு இல்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

தற்போதைய நிலையில், இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது இரண்டு காரணங்களினால் கடினமாகியுள்ளது. ஒன்று, மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான கும்பல் எந்தத் தீர்வாக இருந்தாலும் அதற்கு எதிராக இனவாதத்தை தூண்டுவதற்குக் காத்துக் கொண்டு இருப்பதாகும். இரண்டாவது, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தின் காரணமாக வட பகுதியில் தமிழ் தீவிரப் போக்கு மேலும் வலுப்பெறும் நிலைமையாகும்.

மஹிந்தவின் கும்பல், ஏற்கெனவே இனவாதத்தைத் தூண்ட ஆரம்பித்துள்ளது. அரசாங்கம், உத்தேச புதிய அரசியலமைப்பின் மூலம், ஒற்றை ஆட்சி முறையையும் பௌத்த சமயத்துக்கு முதலிடம் வழங்கும் நிலைமையையும் இல்லாதொழிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, மஹிந்தவின் கையாளும் முன்னாள் அமைச்சரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவருமான தினேஷ் குணவர்தன கடந்த ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் மாநாடொன்றின் போது கூறியிருந்தார்.

ஆனால், அவர் கூறியது பிழையானது என்று, அன்றைதினமே ஜனாதிபதி கூறிய கூற்றொன்றின் மூலம் தெரிகிறது. அன்றைய தினம் குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதா அல்லது தற்போதைய அரசியலமைப்பில் சில மாற்றங்களை கொண்டு வருவதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதானது, உள்நாட்டு பிரச்சினையொன்றை தீர்ப்பது மட்டுமன்றி, அரசாங்கத்துக்கு ஒரு சர்வதேச கடப்பாடும் ஆகும். ஏனெனில், 2013ஆம் ஆண்டு முதல், இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று பிரேரணைகளிலும் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணைக்கு இலங்கையும் அணுசரனை வழங்கிய நிலையில், இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதானது, அரசாங்கத்துக்கு ஒரு சர்வதேச கடப்பாடாகும் என தெளிவாகவே தெரிகிறது.

எனவே, புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளும் போது இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றை காண்பது இரட்டை பொறுப்பாகின்றது. ஆயினும் வடக்கில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றங்கள் காரணமாக நிலைமை மேலும் சிக்கல்வாய்;ந்ததாகவே தெரிகிறது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர், அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில், மிகவும் சுமுகமானதோர் உறவு நிலவி வருகிறது. முதலமைச்சராக பதவியேற்றவுடன் விக்னேஸ்வரனும் மிதவாதியாகவே நடந்து கொண்டார். வடக்கில் பலரது எதிர்ப்பை பொருட்படுத்தாது, அவர் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாலேயே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஆனால், பின்னர் நிலைமை மாறியுள்ளது. விக்னேஸ்வரன் தீவிரப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறார். வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை தொடர்பான பிரேரணை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான பிரேரணை ஆகியன அந்த தீவிரப் போக்கையே எடுத்துக் காட்டுகிறது. இப்போது அவர், தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கியிருக்கிறார். இனப் பிரச்சினைக்கு தீர்வொன்றை காண்பதே அதன் பிரதான நோக்கமாகும் என பேரவை அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்;டமைப்பே, தமிழர்களின் பிரதான அரசியல் சக்தியாக கருதப்படுகிறது. எனவே, எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர், புதியதோர் அரசியலமைப்பை வரைவதற்காக நாடாளுமன்றம் அரசியலமைப்புச் சபையாக மாற்றப்பட்டால், கூட்டமைப்பும் பேரவையும் தனித்தனியாக இனப் பிரச்சினை விடயத்தில் தத்தமது ஆலோசனைகளை அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிக்க முற்படலாம்.

இது இரு குழுக்களிடையே போட்டியை உருவாக்கலாம். அப்போது, இரு குழுக்களும் மற்றைய குழுவை விட, தாமே தமிழர்கள் விடயத்தில் கூடுதல் அக்கறையுள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ள முற்படலாம். அதற்காக இரு குழுக்களும் ஏட்டிக்குப் போட்டியாக தீவிரத் தன்மையை காட்டவும் முற்படலாம். அது தென் பகுதியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக, அது மஹிந்தவின் இனவாதக் கும்பலுக்கு வாய்ப்பாகலாம்.

இது புதிய அரசியலமைப்பை வரையும் திட்டத்தையே குழப்பிவிடலாம். அவ்வாறு நடந்தால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதென்ற விடயத்தை ஒத்திப் போட்டுவிட்டு, ஏனைய விடயங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பொன்றை நிறைவேற்றிக் கொள்ளவும் முற்படலாம்.

அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால். அது, தமிழ் மக்கள் அடையும் பெரும் தோல்வியாகும். ஏனெனில், தெற்கில் இந்த அளவுக்காவது வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள அரசாங்கமொன்று இனி உருவாகும் என நம்ப முடியாது.
(எம்.எஸ்.எம்.ஐயூப்)