மசூர் மௌலானா மறைந்தார் !!!

வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையில் நான் பெற்ற அறிமுகம் மசூர் மௌலானா. அரசியல் மேடைகளில் அவரை தூர நின்று பார்த்து, அவர் பேசும் தமிழ் கேட்டு கவரப்பட்டு அவர் போல் ஆக வேண்டும் என ஆசைப்பட்ட வேளையில் அரசியல் விபத்தாக அதுவும் நடந்தது. கட்டை பனையில் நெட்டை பனை போல் யாரோ அமரவேண்டிய பேரவை தலைவர் ஆசனத்தில் நான் அமர்ந்த அரசியல் விபத்து 1988 மார்கழி 5ல் நிகழ்ந்தது. ஈபிஆர்எல்எப், ஈஎன்டிஎல்எப் முஸ்லிம் காங்கிரஸ் உடன் அம்பாறையில் யுஎன்பி யில் இருந்து ஒரு சிங்கள பிரதி நிதி மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஆனால் 1989 மார்ச்சில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்றதால் அந்த அம்பாறை பிரதிநிதியின் இடம் காலியாக அதற்கு யுஎன்பி உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் தான் மசூர் மௌலானா.

பேரவை தலைவர் காரியாலயத்தில் நான் இருந்த வேளை எனது செயலாளருடன் வந்தவர் தலைவரே நான்தான் மசூர் மௌலானா உங்கள் சபை உறுப்பினர் என்று என் கரம் பற்றினார். துரோணர் கரம் பற்றிய ஏகலைவன் நிலையில் நான் இருந்தேன். பல மேடைகளில் அண்ணார்ந்து பார்த்த தலைவரை அருகில் பார்த்தால் வரும் பரபரப்பு என்னையும் தொற்றிக்கொண்டது. நன்றியுடன் நாபாவை நினைவு கூர்ந்தேன் என்னை பேரவை தலைவராக தேர்வு செய்ததற்கு. வெள்ளை ஆடையில் வந்திருந்தவர் என்னோடு வெள்ளாந்தியாக பேசினார். வார்த்தைக்கு வார்த்தை தலைவரே என அவர் அழைக்கும் போது தந்தை செல்வநாயகத்தின் பாசறையில் வளர்ந்த பண்பாளனாக மிளிர்ந்தார். அவர் என்னை தலைவர் என்பதும் நான் அவரை ஐயா என்பதும் இறுதிவரை தொடர்ந்த உறவு.

சட்டக் கல்லூரியில் பாயிலும் போது தமிழ் அரசு கட்சியில் இணைந்தவர். மருதமுனை மண்ணின் மைந்தன். அழகு தமிழில் பேசும் ஆற்றல் கொண்டவர். பெயரை சொன்னால் மட்டுமே அவரை மத ரீதியாக முஸ்லிம் என தெரியவரும். மற்றப்படி அவர் தமிழன். அதே வேளை மும் மொழிகளும் தெரிந்த மூத்த அறிஞன். தமிழரசு கட்சியால் செனட்டராக தெரிவு செய்யப்பட்டவர். தமிழரசு கட்சிக்காக கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் மேடைகளில் முழங்கியவர். அவ்வாறு கோப்பாயில் அவர் பேசிய அழகு தமிழ் கேட்டு பிரேமித்து தான் தனக்கு பிரேமசந்திரன் என தன் தாய் பெயர் சூட்டியதாக சுரேஸ் மாகாண சபையில் மௌலானாவை சந்தித்வேளையில் கூறினார். மதத்தால் மட்டுமே முஸ்லிம் அழகு தமிழ் பேச்சால் என்றும் தமிழனாக வாழ்ந்த மசூர் மொலானா 03-12-2015 என்னை பிரிந்தார்.

அரியவை கிடைப்பதும் அதை நான் இழப்பதும் ஏனோ எனக்கு ஒரு சாபக்கேடு. நாபா தொடங்கிவைத்த என் அரசியல் வாழ்வில் நாபா உட்பட நான் நேசித்த பலர் என்னை முந்தி சென்று விட்டனர். திருமலை அன்னலிங்க ஐயா, பீற்ரர், சின்னவன், ஜேர்ஜ், சுந்தர், மட்டக்களப்பு சிவா, குமார், அருள், களுவாஞ்சிகுடி ரஞ்சித், வந்தாறுமூலை சின்ன பாலா, அம்பாறை சின்ன ரஞ்சித், பாட்டு ரவி, மிகிலார்(கமல்) வன்னி ஐயா தோழர், யாழ் சாமி, ஈஸ்வரன், முகுந்தன், கும்பகோணம் ஓட்டி கணேஷ், என நீண்டு செல்லும் பட்டியலில் 1990 ஜூன் 19 பேரழிவு மொத்தமாக நாபாவுடன் அத்தனையையும் அள்ளிச் சென்ற பின் மௌலானா மறைவு மீண்டும் மாகாண சபை காலத்தை நினைவு மீட்ட செய்கிறது. மணக்கோலம் பார்க்கப் போய் மணமகன் ஆன நிலை தான் நான் வகித்த பேரவை தலைவர் பதவி.

குருவி தலை பனங்காய் போல் சுமக்க முடியாதா பாரமாக பட்டாலும் சுமந்தேன். எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி தரப்பட்ட நகர சபை மண்டபத்தை பேரவை அமர்வு மண்டபமாக மாற்றும் வேலைப் பழுவை சில மாதங்களில் பூர்த்தி செய்து முழுமை அடைந்த பின்பு தான் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் பதவி ஏற்க்க வந்தனர். சபை ஆரம்பித்து 3 மாதங்கள் கழித்து வந்த அவர்கள் பேரவை கூடும் நாட்களில் தங்குவதற்கு 7ஐலன்ட்ஸ் விடுதியில் அறைகள் ஒதுக்கி கொடுக்க ஏற்பாடு செய்தேன். அன்று மாலை உறுப்பினர்களின் வசதி பற்றி அறிய 7ஐலன்ட்ஸ் விடுதிக்கு சென்ற போது மசூர் மௌலானா தனது பயண பையுடன் வரவேற்பு அறையில் இருந்தார். என்னை கண்டதும் தலைவரே என்னை அறையில் இருந்து வெளியேற்றி விட்டனர் என்றார். தம் கட்சி விடயங்களை அறிந்து விடுவார் என சந்தேகித்து முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் செய்த நற்காரியம் அது. வேறு அறைகள் இல்லாததால் நான் அவரை எனது உத்தியோக இல்லத்துக்கு அழைத்து சென்றேன்.

அந்த நேரத்தில் நாபா தன் மனைவி மற்றும் பாதுகாப்பு தோழர்களுடன் அதே இல்லத்தில் தான் தங்கியிருந்தார். மௌலானாவுடன் நான் சென்ற வேளை நாபா வீட்டில் இருந்தார். அவர் கரம்பற்றி அழைத்து சென்று அமரவைத்தவர் அவரின் நிலைமை அறிந்ததும் நோ புறப்ளம் நீங்கள் ராம் தோழருடன் தங்கலாம் என கூறினார். நாபா வாக்குப்படி மாகாண சபை கடைசி அமர்வு வரை நடந்த அத்தனை அமர்வுகளுக்கும் வரும் மசூர் மௌலானா தங்குவது எனது உத்தியோக இல்லத்தில் தான். அன்று இருந்த உறுப்பினர்கள் மத்தியில் நீண்ட அரசியல் அனுபவம் கொண்டவராக மௌலானா இருந்தார். எஸ் ஜே வி செல்வநாயகத்துடன் ஆரம்பித்த அவர் தமிழ் அரசு கட்சி அரசியல் வாழ்வு சமஸ்டியை விட்டு தனி நாடு கோசம் எழுந்த போது முடிவுக்கு வந்தது. நேர்மையாக தன் நிலைப்பாட்டை விளக்கிவிட்டு அவர் தமிழ் அரசு கட்சியை விட்டு விலகினார்.

அதே நேர்மையை வடக்கு கிழக்கு மாகாண சபை இறுதி நாள் அமர்விலும் நேரில் கண்டேன். 19 அம்ச கோரிக்கையை முன்வைத்து முதல்வர் ஒரு பிரேரணையை முன்மொழிந்த போது மசூர் மௌலானா எழுந்து மின்னாமல் முழங்காமல் பெரு மழை வந்து விட்டது இது காட்டாற்று வெள்ளமாகலாம். நான் சார்ந்த யுஎன்பி இதனை ஏற்காது என்பதால் இந்த பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நான் பேரவையை விட்டு வெளியேறுகிறேன் என கூறி வெளியேறினார். தனி ஒருவனாக அந்த சபையில் துணிந்து தன் கருத்தை எந்த சமரசமும் இன்றி நேர்மையாக வெளிப்படுத்தியது என்னை மெய்சிலிர்க்க வைத்தது. பேரவை அமர்வு முடிந்து உத்தியோக இல்லம் சென்ற போது நாபாவுடன் மௌலானா இருந்தார்.

நாபா என்னிடம் சிங்கன் இன்றே கொழும்பு செல்ல வேண்டுமாம் நீங்கள் எதாவது வாகன ஒழுங்கு செய்யுங்கள் என்றார். அப்போது அக்கரைபற்று சர்மாவின் பச்சை நிற பஜரோவை கொடுத்து அனுப்பி வைத்தேன். கொழும்பு சென்ற மௌலானா அதை சாம் தம்பிமுத்து விடம் கையளித்து பின் அது சுரேஸ் வசமானது. திருமலையை விட்டு வெளியேறி கொழும்பு வந்த பின் மௌலானாவுடனான உறவு தொடர்ந்தது. பிரேமதாசாவின் படுகொலை அவரை யுஎன்பி யில் தொடர விடவில்லை. அவரை போலவே தமிழரசு கட்சியில் தன் அரசியலை ஆரம்பித்த அஸ்ரப்பின் அழைப்பை ஏற்று முஸ்லிம் காங்கிரசில் இணைந்தார். இறுதிவரை அவர் முஸ்லிம் காங்கிரசில் தான் இருந்தார். அன்று 7ஐலன்ட்ஸ் விடுதி அறையில் இருந்து வெளியேற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தான் பின்னாளில் மசூர் மௌலானாவை கல்முனை மேயராக முடி சூட்டியது.

மசூர் மௌலானா மறைவு எனக்கு நாபாவுடனான் நாட்களை தான் நினைவூட்டுகிறது.

-ராம்-