வட மாகாண சபை தலைவரின் விசனம் / விசமத்தனம் !

(மாதவன் சஞ்சயன்)

அண்மையில் ஆதவன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வட மாகாண சபை தவிசாளர் தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மேலதிகமாக பல கொசுறு செய்திகளையும் பதிலாக சொல்லி வைத்தார். மூட்டை பிரிந்து நெல்லிக்காய்கள் நிலமெங்கும் உறுள்வது போல் நடந்தவைகள் அவர் வாய் வார்த்தைகளாய் வந்து வீழ்ந்தன. நீண்ட நாட்களாய் நெஞ்சில் கனன்ற விடயங்களின் புகை முழு மூச்சாய் வெளிப்பட்டது. வட மாகாண சபையின் செயலாமையை, அமைச்சர்களின் செயல் திறன் அற்ற அவர்களின் இயலாமை உடன் ஒப்பிட்டு, பேசுவது சபை தவிசாளரா அல்லது எதிர் கட்சியின் தலைவரா என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது.

வாழ்த்துக்கள் கௌரவ சி வி கே சிவஞானம் அவர்களே. நீங்கள் வட மாகாண சபை தலைவர் ஆன பின்பு உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மாகாண சபை உண்மை நிலை என்ன என்பதை தொலைக் காட்சி பேட்டியில் இரண்டு வருடங்களுக்கு பின்பாவது தெரியப்படுத்தி இத்தனை நாளாய் இதை ஏன் நீங்கள் கூறவில்லை என ஒரு பட்டிமன்ற விவாதத்துக்கு எம்மை உட்படுத்தியதற்கு மிக்க நன்றி.

கூட்டுத் தர்மம் உங்களை மௌனிக்க செய்தாலும் உங்கள் மனசாட்சி மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என உறுத்திய தால் எதிர் கட்சி தலைவருக்கு நீங்கள் மழுப்பிய உண்மைகளை கூட 2 வருடங்களின் பின்பு வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

பாராளுமன்ற சபாநாயகர் தெரிவு நடந்த பின் அவர் கட்சி சார்பற்றவராக செயல்படுவார், செயல்பட வேண்டும் என்பது சம்பிரதாயம். பாராளுமன்றங்களின் தாய் என வர்ணிக்கப்படும் லண்டன் வெஸ்ட் மினிஸ்ரறில் இது ஏற்றுக் கொண்ட நடைமுறை. அடுத்த தேர்தலில் சபாநாயகராக இருந்தவர் போட்டியிட முனைந்தால் அவரை போட்டி இன்றி தெரிவு செய்யும் நடைமுறையும் முன்பு இருந்தது.

பின்பு போட்டியும் பொறாமையும் கோலோச்சியதால் நல்லவை நீங்கி தீயவை புகுந்தன. ஆனால் இன்றளவும் சபாநாயகர் பக்க சார்பு அற்றவராக செயல்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்று எதிர் பார்க்கப்படும் ஜனநாயக பண்பு.

அந்த நடைமுறை மாகாண சபைக்கும் பொருந்த வேண்டும். காரணம் மாநகரசபைக்கு மேல் பாராளுமன்றத்துக்கு கீழ் மாகாண சபை வருவது மட்டுமல்ல நியதி சட்டங்களை உருவாக்கும் அதிகாரம் மாகாண சபைக்கு உண்டு. இந்தியாவின் சட்ட சபைக்கு உள்ள அதிகாரங்களின் அடிப்படையில் தான் மாகாண சபை உருவாக்க பட்டாலும் ஜே ஆர் அதன் அதிகாரங்களை குறைத்து

சட்ட சபை என்ற பதத்திற்கு பதிலாக மாகாண சபை என கூறி சபாநாயகர் பதவியை மாகாண சபை தலைவர் என மாற்றினார். அதனால் தான் வானளாவிய அதிகாரம் சபாநாயகருக்கு உண்டு என கூறி செயல்பட்ட திரு பி எச் பாண்டியன் போல் செயல்பட முடியாமல், வட மாகாண சபை தவிசாளர் சிவாஜிலிங்கத்தின் சேட்டைக்கு தான் நட்டஈடு கொடுத்தார் .

பி எச் பாண்டியன் தமிழ்நாடு சட்ட பேரவை சபாநாயகராக இருந்தபோது ஆனந்தவிகடனில் வந்த கேலிச்சித்திரம் சட்டசபை உறுப்பினர்களை அவமதிப் பாதாக கூறி அதன் ஆசிரியரை சிறையில் அடைப்பித்தார்.

எத்தனையோ போராளிகள் பொது மக்களின் உயிர் தியாகத்தில் உருவான வட மாகாண சபை செங்கோலை சிவாஜிலிங்கம் தூக்கி வீசிய போது வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, அவரை சில காலமாவது சபை நடவடிக்கைகளில் இருந்து இடை நிறுத்த கூட தவிசாளரால் முடியவில்லை. காரணம் அவர் கூட்டு கட்சி உறுப்பினர். இங்குதான் தவிசாளர் நடுநிலை தவறி பக்க சார்பாக நடந்து கொண்டார்.

சபையில் தனக்கு ஏற்படும் இடையூறுகள் பற்றி கட்சி தனது தலைமைக்கு அறிவித்ததாகவும் கட்சிதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் பேட்டியில் கூறிய தவிசாளர் தான் கட்சி அரசியலை தொடர்வதை வாக்குமூலமாக தந்தார். தவிசாளருக்கு உள்ள அதிகாரங்கள் மாகாண சபை ஒழுக்கவிதி கோவையில் உண்டு. அது நடைமுறையில் உள்ளதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

பல தடவைகள் மாகாண சபை அமர்வுகளை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்த போதும் என்னால் ஒரு சில உறுப்பினர்கள் உட்பட தவிசாளரின் செயல்பாட்டை விளங்கிக் கொள்ள முடியவில்லை. தவிசாளர் சபையில் ஏதாவது கூறும் போது பேசிக்கொண்டு இருக்கும் உறுப்பினர் ஆசனத்தில் அமர்ந்து விடவேண்டும் என்பது ஒழுக்க விதி.

ஆனால் தவிசாளர் பலமுறை அமரச்சொல்லியும் அமராது வீராவேசமாக விடாது வாதிடும் சபை உறுப்பினர்கள் செயல் கண்டு சங்கானை சந்தையிலா ? மாகாண சபை பார்வையாளர் பகுதியிலா ? நான் இருக்கிறேன் என்ற சந்தேகம் பல தடவை எனக்கு வந்திருக்கிறது. வாக்களித்த மக்களுக்கு இந்த கூத்தை நேரடியாக ஒளிபரப்பினால் எப்படி இருக்கும் இவர்கள் நிலை என நான் எண்ணுவதும் உண்டு.

1970ல் பழைய பாராளுமன்ற அமர்வுகளை பார்க்கும்போது பெற்ற அறிவு அனுபவம் தெளிவு இன்று அற்றுப்போகும் அளவுக்கு விதி மீறல்கள், வெட்டிப் பேச்சுக்கள் நிறைந்ததாகவே இந்த சபை தென்படுகிறது. புதிய பாராளுமன்றின் குறைப் பிரவச அரசியல்வாதிகள் போலவே இவர்களும் நடக்கின்றனர்.

அன்று படைக்கல சேவிதர் சபை ஒழுங்கு விதி மீறல்களின் போது அழைக்கப்பட்டு, உறுப்பினர் வெளியேற்றப்பட்ட நிகழ்வுகளை பழைய பாராளுமன்றில் பார்த்த எனக்கு இன்று வட மாகாண சபையில் தவிசாளரின் கட்டளையை செவிமடுக்காது தன் இஸ்டப்படி நடந்து சபை ஒழுங்கை மீறும் உறுப்பினரை வெளியேற்றும் படி சொல்ல தவிசாளர் ஏன் துணிவதில்லை என்ற என் கேள்விக்கு,

செங்கோலையே வீசியவர் தன் மேலங்கியை உருவினால் கூட கட்சி தலைமையிடம் புகார் செய்வதை தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ள தவிசாளர் தற்காப்புக்காக அவ்வாறான விசப்பரீட்சைக்கு தன்னை உட்படுத்துவது இல்லை என்பது பதிலாக கிடைத்தது.

இன்னொரு உள்குத்து செயலும் இங்கு வெளிவராத உண்மை. மாகாண சபைக்கு தவிசாளர், உதவி தவிசாளர் என இரண்டு பதவிகள் உண்டு. அதற்கான ஆளணி சம்பளம் படிகள் இதர சலுகைகளும் உண்டு. வட மாகாண சபை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் முடிந்த பின்பும் இதுவரை ஒரு தடவையாவது முழு அமர்வுக்கும் உதவி தவிசாளர் சபைக்கு தலைமை தாங்கவில்லை.

சபை அமர்வுகளில் நீக்கமற அமர்வது தவிசாளர் மட்டுமே. அதிகார பகிர்வு பற்றியும் மத்திய அரசு எமது உரிமைகளை தர மறுப்பது பற்றியும் பேசப்படும் சபையில் உதவி தவிசாளர் உரிமை தவிர்க்கப்படுகிறது. முல்லைத்தீவு பிரதி நிதிக்கு கிடைத்த ஒரே ஒரு பதவியில் கூட அவரை அமர வைக்க விரும்ப வில்லை.

பல உறுப்பினர்களின் முன் முயற்சிக்கு செவிசாய்த முதல்வரின் வேண்டுகோளை வேண்டா வெறுப்பாக ஏற்ற தவிசாளர் ஒரே ஒரு தடவை மட்டும் சபை அமர்வின் தேநீர் இடைவேளையின் பின்பு தொடர்ந்த சபைக்கு தலைமை தாங்கும் சந்தர்ப்பத்தை உதவி தவிசாளருக்கு கொடுத்து அவரை அரை நேர சபைக்கு தலைமை தாங்க அனுமதித்தார்.

தான் ஒரு முன்நாள் அரச நிர்வாகி என அடிக்கடி கூறும் தவிசாளருக்கு அரச நிர்வாகத்துக்கும் அரசியல் நிர்வாகத்துக்கும் உள்ள வேறுபாடு தெரியாது, இன்னமும் உள்ளூர் ஆட்சி ஆணையாளர் போல நான் சொல்கிறேன் நீ கேள் என்பதுபோல உறுப்பினர்களை விட அவர்தான் அதிகம் பேசுகிறார்.

சபையை தலைமை தாங்குவதும் தேவைப்படும் இடத்தில் சபை ஒழுங்கை பேணுவதையும் விடுத்து, உறுப்பினர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய அமைச்சர்கள் சபையில் இருக்கும் போது தான் முந்திக்கொண்டு பதில் கூறுவது, உறுப்பினருடன் தர்க்கிப்பது எதிர்கட்சி தலைவருக்கு உண்மையை மறைத்து தனது அமைச்சர் குறைகளை சபையில் மறைப்பது என செயல்ப்பட்ட தவிசாளர்

தொலைக்காட்சி பேட்டியில் குறைகளை கூறி அவர்களை செயலூக்கம் அற்றவர் என சொல்வது ஏற்புடையதல்ல. பேட்டி எடுப்பவர்கள் போட்டு வாங்குவது வழமை. ஆனால் ஆதவன் பேட்டியாளருக்கு அந்த சிரமத்தை பேட்டி கொடுத்த வட மாகாண சபை தவிசாளர் கௌரவ சி வி கே சிவஞானம் ஐயா அர்கள் கொடுக்காமல் சகலதையும் கொட்டித் தீர்த்தார்.

கூட்டுத் தர்மம் கூட்டுத் தர்மம் என கூறியே உள்வீட்டு விடயங்கள் எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இன்றி போட்டு உடைத்தார். ஐங்கரநேசன் முன்பு ஈ பி ஆர் எல் எப் இப்போது அவர் கட்சி இல்லாத கட்சி உறுப்பினர் என கூறியது சுவாரசியமாக இருந்தது. நேரம் இன்மையால் பேட்டி தொடரவில்லை. இல்லையேல் வட மாகாண சபை புதையல் மலைபோல் குவிந்துருக்கும் தவிசாளர் வாயால்.

தவிசாளராக தனது இருப்பு நிலையை தக்க வைக்க அவர் ஒரு தந்திரமும் செய்தார். தனது சபை உறுப்பினர்கள் மீது தான் எந்த குறையும் காணவில்லை என முத்தாய்ப்பாய் கூறி தனக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டு வந்து தன் கதிரையை பறித்து விடாமல் பார்த்துக்கொண்டார். ஆனாலும் அவருக்கு சிவாஜிலிங்கம் கொடுக்கும் குடைச்சல் மட்டும் அவர் பேட்டியில் வெளிப்பட்டது.

கட்சி ஏதாவது செய்து சிவாஜிலிங்கம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டால் தான் தனிக்காட்டு ராஜாவாக சபையை நடத்த முடியும் என்ற தன் உள்மனக் கிடக்கையை அந்த பேட்டியில் கோடிட்டு காட்டினார் வட மாகாண சபை தவிசாளர் கௌரவ சி வி கே சிவஞானம் ஐயா அவர்கள்.

* நுணலும் தன் வாயால் கெடும் *