இந்தியாவில்: 26வது தியாகிகள் தினம்

 

தோழர் பத்மநாபா மற்றும் 12 தோழர்கள் சென்னையில் 19.6.1990 அன்று விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தினத்தினை பத்மநாபா மக்கள்  முன்னணியினர் தியாகிகள் தினமாக வருடா வருடம் அனுஸ்டித்து வருகின்றனர். தியாகிகள் தினம் என அனுஸ்டிக்கபட்டு வரும் இத் தினம் 19.6.2016 அன்று 26வருடங்களை எட்டி நிற்கிறது. இத்தினத்தை சென்னை புழல் முகாமில் உள்ள தோழர்களும் வருடா வருடம் கடைபிடித்து இறந்த தோழர் பத்மநாபா மற்றும் ஈழ போராட்டத்திற்காக உயிர்நீத்த அனைத்து தரப்பினரையும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.


இம்முறை தியாகிகள் தினத்தில் விசேடமாக எமக்கெல்லாம் 1983களில் எல்லாமுமாக இருந்து பல அளப்பரிய உதவிகளைச் செய்த கும்பகோணம் ஸ்டாலின் அண்ணன் அவர்களையும் நாம் நினைவு கூர்வோமாக, ஸ்ராலின் அண்ணன் அவர்கள் ஒரு வக்கீலாக தனது சமூகப்பணியை ஆற்றிய உயர்ந்த மனிதர் பெரியாரின் கொள்கையில் ஈடுபட்டு அவர் வழியிலேயே இறுதிவரை செயல்பட்டு வந்தார். 1983களில் இலங்கையில் ஏற்பட்ட போராட்ட சூழல்காரணமாக பல இளைஞர்கள் தமிழகத்துக்குச் சென்ற போது கும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் தோழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பல வகையிலும் உதவிகளைச் செய்தவர். அவர் செய்த உதவிகள் என்பது சாதாரணமானது அல்ல தங்குவதற்கு இடம் எடுத்துக் கொடுத்தார். அவரது வீட்டையே தோழர்கள் தங்குவதற்கு கொடுத்தார். உண்ண உணவு கொடுத்தார் உடுக்க உடை கொடுத்தார் படுக்க இடம் கொடுத்தார். தோழர்களுக்கு பாதுகாப்பு அரனாக இருந்தார்.

தோழர் பத்மநாபாவின் உற்ற தோழனாகவும், நல்ல நண்பனாகவும் இருந்தவர் ஸ்ராலின் அண்ணன். பத்மநாபா அவர்களும் அண்ணன் மேல் அளவு கடந்த பாசத்துடன் இருப்பார்.தோழர் நாபா அவர்கள் இந்தியா வரும்போதெல்லாம் ஸ்ராலின் அண்ணனை பார்க்கமால் இருந்ததில்லை. தோழர் பத்மநாபா அவர்கள் இன்றில்லாதது கட்சிக்குள்ளும் இலங்கையிலும் பலவகை இடைவெளிகளை ஏற்படுத்தியுள்ளதென்பதை அவரில்லாத போது உணரக் கூடியதாக இருக்கிறது. எதிரியுடனும் இன்முகத்துடன் பழகும் இனிய பண்புகள் நாபா அவர்களிடம் காணப்பட்டது. மாறுக்கருத்தாளனையும் மதிக்கும் ஜனநாயகப்பண்பு அவரிடம் காணப்பட்டது.

ஈழ போராட்ட இயக்கங்களிடையே ஒற்றுமையின்மையால் எற்படப்போகும் ஆபத்தை அன்றே அறிந்து ஒற்றுமைக்காக உழைத்த உத்தமர் அவர். ஈழப்போராட்டம் திசைமாறிச் செல்வதை துல்லியமாக கணித்து இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை துணிச்சலுடன் ஏற்றுக்கொண்ட மகத்தான மனிதர் அவர். இந்தியாதான் எமது நேச சக்தி என கணிப்பிட்டு இந்தியாவுடன் எப்போதும் நட்பில் இருந்தவர்.
தோழர் நாபா அவர்களையும் ஸ்ராலின் அண்ணன் அவர்களையும் ஈழ போராட்டத்திற்காக மரணித்த அனைவரையும் இந்நாளில் நினைவு கூருவோம்.

பத்மநாபா மக்கள் முன்னணி(PPF)
தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி(SDPT)
புழல் அகதிகள் முகாம்
சென்னை.