தோழர் சுசீலா

அவர்கள்மீது அபிமானம் கூடுகிற அதே வேளையில் கூடவே கழிவிரக்கமும் தொற்றிக்கொள்கிறது. அது ஒரு சுய கழிவிரக்கமே என்பதும் பலவேளைகளில் புரிகிறது.


இத்தகைய மனிதர்களில் மிகப் பெருஞ்சதவீதம் கம்யூனிஸ்ட் கட்சிகளில் இயங்குகிறார்கள் என்பது எனக்குக் கண்கூடு.


இவர்களுக்கு சமூகம் ‘பிழைக்கத் தெரியாதவர்கள்’ என்று பேர் வைத்திருக்கிறது. அத்தகையோர் வாழ்வை ஈகம் செய்து இலங்கும் கட்சிக்குள் ஒரு கரையானைப் பார்த்துவிட்டாலும் நெஞ்சு கொந்தளிக்கிறது.
தோழர் சுசீலாவை – அவர் இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தின் NFIW சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த காலங்களிலும், அதன் மாநிலத் தலைவராக இயங்கிய காலங்களிலும் – நகரப் பேருந்துகளில் மூச்சுமுட்டப் பயணிக்கிற நிலைமையில்தான் பலபோழ்தும் கண்டிருக்கிறேன்.


“ஏன், கூடாதா? பஸ் பயணமென்றால் இளக்காரமா? அந்தக் காலத்தில் ஜீவா எல்லாம் நடந்துநடந்தே….”


போதும், நிப்பாட்டுங்கள்! சேவை மனம் கொண்டவர்கள்தாம். ஆனால், கட்சி ஊழியர்கள் எந்திரங்கள் அல்ல.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எல்லா இயக்க நடவடிக்கைகளிலும், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம், கட்டடத் தொழிலாளர் சங்கம் என்று எல்லா வெகுசன இயக்கப் பணிகளிலும் நான் தொடர்ந்து சுசீலாவை ஆண்டுக்கணக்கில் பார்த்துக்கொண்டேயிருக்கிறேன்.


பாலன் இல்லம் போனாலும் சுசீலா இருப்பார். தென்சென்னை மாவட்ட அலுவலகம் போனாலும் சுசீலா இருப்பார். இதென்ன, ஸ்கூல் அட்டெண்டென்ஸா என்று யோசித்திருக்கிறேன்.


நான் பங்கேற்ற இந்திய கலாச்சார நட்புறவுக் கழகத்தின் ISCUF அநேகமான எல்லா நிகழ்விலும் சுசீலா பங்கேற்று இருந்திருக்கிறார்.
தொடர்ந்து ஓர் இயக்கத்தில் பயணிப்பது – அது சொல்லும் இலட்சியத்தின்பால் நம்பிக்கை கொண்டு இயங்குவது – விமர்சனமற்று, அவ்விதமிருந்தாலும் விலகாமல் விசுவாசத்துடன் கட்சியைப் பற்றிக் கொள்வது – அதன் கட்டளைகட்குப் படிவது – சமூகத்தை சிஷ்ருஷிக்குமென்ற தூர சிந்தனையுடன் இந்த நாளுக்கான தம்வாழ்வை கட்சிக்கு நல்குவதென்பதெல்லாம் – ஓர் இறை ஆராதனையைப் போன்றதுதான்.


நான் அவ்விடயத்திலொரு நாத்திகன் என்றாலும், சுசீலா போன்றவர்களின் கட்சிப் பற்றுறுதியை ஒருபோதும் மூட பக்தி என்று குறைத்துரைக்க முற்படமாட்டேன். இருப்பதில் சிறந்ததென்று ஓர் அமைப்பைத் தெரிவு செய்து, இயன்றவரை சமூகத்துக்கான தம் வாழ்வை உறுதி செய்துகொள்வது என்பது மூட பக்தி அல்ல.


பொதுமை இயக்கங்களிலும் கடுகு உள்ளங்கள் கலந்துவிட்ட காலகட்டத்தில், தொண்டு உள்ளத்தார் எப்போதும் உயர்வு நவிற்சிக்குரியவர்களே!


எலும்புப் புற்றால் தாக்குண்டு
உயிர்நீத்த தோழர் சுசீலாவுக்கு –
இறுதி நிகழ்வில் பங்கேற்க இயலாமல் போன வருத்தத்துடன்….
என் இறுதி வணக்கம்.


கண்ணுக்குத் தெரியாமலிருக்கலாம். ஆனால்,
உண்மை உழைப்பு வெறுமனே
காற்றில் கலந்து வீணாவதில்லை.
அதன் விதை
என்றேனும் எங்கேனும் முளைக்கும்.