ஒரு பிள்ளை, இரண்டு தாய்மார்; அம்பாறையில் சர்ச்சை

2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர், கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதங்கள் நிரம்பிய ஆண் குழந்தையொன்றுக்கு, ஒன்பது பெற்றோர் உரிமை கோரிய சம்பவத்தை மறந்துவிட முடியாது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பேரில், மேற்கொள்ளப்பட்ட மரபணுப் பரிசோதனையை அடுத்து, ‘சுனாமி பேபி – 81’ எனப் பெயரிடப்பட்டிருந்த அக்குழந்தை, உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தையும் அறிவோம்.

இப்போது, அது போன்றதொரு சம்பவம், நம் முன்னே மீண்டும் வந்து நிற்கிறது.
அம்பாறை மாவட்டம், மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஹமாலியா. அரச வைத்தியசாலை ஒன்றில் ஊழியராகப் பணியாற்றுகிறார். ‘சுனாமி’ அனர்த்தத்தின் போது, ஹமாலியாவின் ஐந்து வயது மகன் காணாமல் போனார்.

இந்தப் பின்னணியில், இப்போது 16 வருடங்களின் பின்னர், காணாமல் போன தனது மகன், தன்னைத் தேடி வந்துள்ளார் என, சில நாள்களுக்கு முன்னர் ஹமாலியா தெரிவித்தார்.

இது ஊடகங்களில் பரபரப்பான செய்தியானது. சமூக வலைத்தளங்களிலும் இதுபற்றி அதிகம் பேசப்பட்டது. ஹமாலியாவும் அவரின் மகனும் ஒன்றாகக் காணப்படும் படங்கள்

ஹமாலியாவும் அவரின் மகன் சியானும்

அதிகளவில் பரவின.

“பிள்ளைக்கு வேறு பெயர் வைத்துவிட்டார்கள்”

ஹமாலியாவுக்கு இப்போது 48 வயதாகிறது. காணாமல் போன மகன் மட்டும்தான் அவருக்கு பிள்ளை.

“1999ஆம் ஆண்டு மகன் பிறந்தார். எனது பிள்ளைக்கு, நான்கு மாதமாக இருந்தபோது, கணவர் பிரிந்து விட்டார். எனது மகனுக்கு முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனப் பெயரிட்டிருந்தேன்” என்கிறார் ஹமாலியா.

ஆனால், ஹமாலியாவைத் தேடிவந்துள்ள பையனோ, தனது பெயர் முஹம்மட் சியான் என்கிறார்.

“எனது பிள்ளையை வளர்த்தவர்கள், அவருக்கு வேறு பெயர் வைத்திருக்கிறார்கள்” என, இது குறித்து ஹமாலியா கூறுகிறார்.

‘சுனாமி’ அனர்த்தம் ஏற்பட்டு, நாலாவது நாளன்று, வைத்தியசாலையொன்றில் தனது மகன்

நூறுல் இன்ஷான்

அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தியொன்றை, ஹமாலியா கேள்வியுற்றார். அங்கு சென்று பார்த்தபோது, அவருடைய மகன் அந்த வைத்தியசாலையில் இல்லை. ஆனாலும், பிள்ளையைத் தேடும் முயற்சியை அவர் தொடர்ந்தார்.

“எனது மகன், அம்பாறையிலுள்ள வீடொன்றில் வளர்கிறார் என்றும், அங்குள்ள ‘சத்தாதிஸ்ஸ’ என்ற பாடசாலையில் படிக்கிறார் எனவும், அரச சார்பற்ற நிறுவனமொன்றில் பணியாற்றும் பெண் ஒருவர், 2016ஆம் ஆண்டு என்னிடம் கூறினார். அந்தத் தகவலின் அடிப்படையில் எனது மகன் படிக்கும் பாடசாலைக்குச் சென்று விசாரித்தேன். ‘அப்படியொரு பிள்ளை இல்லை’ என்று கூறி, என்னை விரட்டி விட்டார்கள்”.

“பிச்சைக்காரி வேடமிட்டுத் தேடினேன்”

“அதன் பின்னர், எனது மகன் இருக்கும் வீடு உள்ள பகுதிக்குச் சென்றேன். சிங்களப் பெண் போல் ஆடையணிந்து, ‘சோப்’ விற்கும் பெண்ணைப்போலவும் பிச்சைக்காரியைப் போலவும் வேடமிட்டு, எனது மகனைத் தேடி அலைந்தேன். ஒரு கட்டத்தில், எனது மகனைக் கண்டேன். அவர் வளரும் வீட்டாரிடம் விவரங்களைக் கூறி, ‘இவர்தான் எனது மகன்’ என்றேன். அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அப்போது எனது மகனை மீளப் பெற்றுக் கொள்ள முடியவில்லை” என்று, நடந்த விடயங்களை ஹமாலியா பகிர்ந்துகொண்டார்.

இந்தக் காலகட்டத்தில், காணாமல் போன தனது மகன் தொடர்பில், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை, ஹமாலியா பதிவு செய்தார். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி செயலகம், மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இடங்களுக்கும் தனது மகனை மீட்டுத் தருமாறு கோரி, கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார்.

“ஆனாலும், எனது மகனை மீட்டுத் தருவதற்கு யாரும் முன்வரவில்லை” என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

கதவைத் தட்டிய மகன்

இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்னர், சிங்கள நண்பர்கள் மூலமாகத் தனது மகனுடைய தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்ட ஹமாலியா, அவருடன் பேசியுள்ளார். மகனுக்கு தொழிலொன்றைப் பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கின்றார். இதையடுத்து, கொழும்பிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிவந்த அவரின் மகன், கடந்த ஞாயிற்றுக்கிழமை (25), மாளிகைக்காட்டில் அமைந்துள்ள ஹமாலியாவின் வீட்டுக்கு வந்துள்ளார்.

காணாமல் போன முஹம்மட் அக்ரம் றிஸ்கான் எனும் பெயருடைய தனது மகன்தான், தற்போது திரும்பி வந்துள்ள முஹம்மட் சியான் என்று நிரூபிப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் ஹமாலியாவின் கைகளில் இல்லை. ‘சுனாமி’ வருவதற்கு முன்னர், சிறு வயதில் எடுத்த ஒரு ‘போட்டோ’வை மட்டும் வைத்துக் கொண்டு, “இந்தப் படத்தில் உள்ளவர்தான், இப்போது திரும்பி வந்துள்ளார்” என்கிறார்.

இதன் பின்னர், ஹமாலியாவின் மகனுடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது. தமிழில் பேசுவதற்குத் தடுமாறும் அவர், சிங்களத்தில் சரளமாக உரையாடுகின்றார். “நான்தான் உனது தாய்” என்று, ஹமாலியா சொன்னதை நம்பித்தான், இங்கு வந்ததாக அவர் கூறினார். அம்பாறையில், அவர் வளர்ந்த வீட்டின் விலாசத்தை அவரிடம் பெற்றுக் கொண்டு, அந்த வீட்டுக்குச் சென்றபோது….

“நான்தான் தாய்”

சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை நகரில், சியான் வளர்ந்த வீடு அமைந்துள்ளது. அங்கு, நூறுல் இன்ஷான் எனும் ‘மலாய்’ சமூகத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண், தன்னைச் சியானின் தாய் என அறிமுகப்படுத்திக் கொண்டார். தனது வயதான தாயுடன், நூறுல் இன்ஷான் வசித்து வருகிறார்.

“சியான் எங்கே” என்று நூறுல் இன்ஷானிடம் கேட்டபோது, “கொழும்புக்குச் சென்று விட்டார்” எனக் கூறினார்.

மாளிகைக்காடு பகுதிக்கு சியான் வந்தமை பற்றியோ, அங்கு நடந்த சம்பவங்கள் குறித்தோ அவர் அறிந்திருக்கவில்லை. நாம், அவருக்குச் செய்தியைத் தெரியப்படுத்தினோம்; அதிர்ந்து போனார்.

“சியான் எனது மகன். 2001ஆம் ஆண்டு அம்பாறை வைத்தியசாலையில்தான் பிறந்தார். சில வருடங்களுக்கு முன்னர், பெண்ணொருவர் இங்கு வந்து, சியான் தனது மகன் என்று கூறி, பிரச்சினைப்படுத்தினார். அப்போது, நான் வெளிநாட்டில் இருந்தேன். அந்தப் பெண்ணிடம், ‘சியான் எங்கள் பிள்ளை’ என்பதை, எனது உம்மா தெளிவுபடுத்தி அனுப்பி வைத்திருந்தார். அவர்தான் இப்போது, எனது மகனைத் தனது வீட்டுக்கு அழைப்பித்திருக்கிறார்”என்று நூறுல் இன்ஷான் கவலையோடு கூறினார்.

இதையடுத்து, சியான் கர்ப்பத்தில் இருந்த போது, சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் வழங்கப்பட்ட ‘கர்ப்பவதியின் பதிவேடு’, சியான் பிறந்த பிறகு வழங்கப்பட்ட ‘குழந்தையின் சுகாதார வளர்ச்சிப் பதிவேடு’ போன்றவற்றைத் தேடி எடுத்துக் காண்பித்தார் நூறுல் இன்ஷான்.

“சியானுடைய சிறிய வயதில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இல்லையா” எனக் கேட்டபோது, மீண்டும் தேடினார்! இரண்டு படங்கள் கிடைத்தன; நம்மிடம் தந்தார்.

அம்பாறை முதல் ஹம்பாந்தோட்டை வரை

இதன்போது, சியானுடைய பாட்டியும் உரையாடினார். “சியானின் தாய் கர்ப்பமாக இருக்கும் போதே, அவரின் கணவர் பிரிந்து சென்று விட்டார். அவரின் பெயர் அமீர்; வரிப்பத்தான்சேனையைச் சேர்ந்தவர். சியானின் தாய்க்கு அம்பாறை வைத்தியசாலையில்தான் பிரசவம் நடந்தது. அப்போது அவருக்குத் நூறுல் இன்ஷானின் தாயார் துணையாக நான்தான் இருந்தேன்” என்றார்.

“சியானைத் தேடி, ஒரு பெண் இங்கு சில தடவை வந்தார். ‘சுனாமி’யில் காணாமல் போன தனது மகன், சியான்தான் என்று அவர் கூறினார். நாங்கள் அவரை விரட்டி விட்டோம். தன்னை ‘உம்மா’ என்று சியான் அழைத்தால் மட்டும் தனக்குப் போதும் என்று அவர் அப்போது சொன்னார்” என்றும் பாட்டி கூறினார்.

நூறுல் இன்ஷான், நம்மிடம் கூறிய தகவல்களின் படி, சிறிய வயதில் சியான் – நூறுல் இன்ஷான் வழங்கிய படம் அம்பாறையிலுள்ள பாடசாலையில் முதலாம் வகுப்பில் சேர்ந்து கொண்ட சியான், அங்கு மூன்று மாதங்கள் மட்டுமே படித்துள்ளார்.

அந்தக் காலகட்டத்தில், சியானுடைய தாய் நூறுல் இன்ஷான், ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த ஒருவரை மறுமணம் செய்துள்ளார். இதையடுத்து அவர்கள் ஹம்பாந்தோட்டை சென்றுள்ளனர். அங்குள்ள பாடசாலையொன்றில் முதலாம் வகுப்புத் தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரை சியான் படித்துள்ளார்.

பின்னர் சில பிரச்சினைகள் காரணமாக, நூறுல் இன்ஷான் தனது மகன் சியானை அழைத்துக் கொண்டு, மீண்டும் அம்பாறை வந்துள்ளார். அதனால் அம்பாறையிலுள்ள பாடசாலையில் 05ஆம் வகுப்புத் தொடக்கம் 10ஆம் வகுப்பு வரை சியான் படித்துள்ளார்.

கொழும்பில் வேலை

இதன் பின்னர், ஊரில் சியானுடைய அம்பாறை வீடு சிலகாலம் சுற்றித் திரிந்த சியான், சில வாரங்களுக்கு முன்னர் நண்பர்கள் சிலருடன் கொழும்பு சென்று, அங்குள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இதன்போதுதான், சியானுடன் ஹமாலியா பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. “காணாமல் போன எனது மகன் நீதான்” என்று கூறியுள்ளார். “நீ என்னிடம் வா, உனக்கு நல்ல வேலையொன்று பெற்றுத் தருகிறேன்” என நம்பிக்கை அளித்திருக்கிறார். அதன் பிறகுதான் ஹமாலியாவின் வீட்டுக்கு சியான் வந்துள்ளார்.

சட்டம் தரும் தீர்வு என்ன?

இப்போது, சியான் எனும் மகனை இரண்டு தாய்மார் உரிமை கோருகின்றனர்.
இந்தநிலையில், ஹமாலியாவிடமிருந்து தனது மகனை மீட்டுத் தருமாறு கோரி, சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில், நூறுல் இன்ஷான் புதன்கிழமை (28) முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருக்கிறார்.

இப்போது இந்த விவகாரம் சட்ட ரீதியாக அணுகப்பட வேண்டிய விடயமாக மாறியுள்ளது.

சியான் என்பவர், தமது மகன்தான் என்று, இரண்டு தாய்மார்களும் வாதிட்டுக் கொண்டேயிருந்தால், நீதிமன்றம் வரை இந்த விடயம் செல்லக்கூடும்.

சியானிடமும் அவருக்கு உரிமை கோரும் இரண்டு தாய்மாரிடமும் ‘டி.என்.ஏ’ எனப்படுகின்ற மரபணுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் போது, இந்த மர்மக் கதையின் முடிச்சு அவிழ்ந்து விடும்.