தன்னைத் தானே அழிக்கும் இனம் மனித இனம்.

மனிதரையும் “தன் தின்னி” என்பதுபோல் ஏதாவது பெயர் வைத்தால் நல்லம்.

விளை நிலங்களைப் பாதுகாக்கும் உழைப்பாளி உயிரி மண்புழு.
ஆனால் இன்று உரங்களையும், கிருமிநாசினிகளையும் மண்ணில் கொட்டி நாம் மண் புழுக்களையும் அழித்து விட்டோம்.

அதேபோல் தாழைகடியன் என்ற பாம்பினம் எமது கடலில் இப்போது அறவே இல்லை. இழுவைப் படகுகளால் (ட்ரோலர்) முற்றுமுழுதாக அழிக்கப் பட்டுவிட்டது.

விளைநிலத்துக்கு மண்புழு எப்படியோ அதேபோல் கடலுக்கு இந்த தாழைகடியன் பாம்பினங்கள்.

கடற்தாவரங்களைத் தின்னும் பூச்சி புழுக்களை இந்தப் பாம்பினம்தான் வேட்டையாடும்.
அதனால் கடற்தாவரங்கள் தப்பித்து பெரும் விளைச்சலாகும்.
கடற்தாவரங்கள் பெரும் விளைச்சலாகும் இடங்களில்தான் மீன்வளங்கள் அதிகரிக்கும்.

வடபகுதிக் கடலில் இந்தப் பாம்பினங்கள் ஏராளமாக இருந்தன. அதனால் மீன் வளங்களும் எந்தவிதக் குறையுமில்லாமல் பெருமெடுப்பில் இருந்தன.

குறிப்பாக, இரணைதீவிலிருந்து பாலைதீவு, வலைப்பாடு, பள்ளிக்குடா, மண்டைதீவு கப்பல் பள்ளத்தாக்கு வரை இந்தத் தாழைகடியன் பாம்பினம் ஏராளமாக இருந்தன.
அப்போதெல்லாம் சாதாரணமாக களங்கட்டிகளிலேயே மீன் பிடிபாடு அமோகமாக இருந்தது.

இன்னும் சுருக்கமாகச் சொல்லப் போனால், பண்ணைப் பாலத்தில் நின்றே வெட்டுத் தூண்டி, வீச்சு போன்ற கையடக்க சிறு தொழில்களிலேயே கொழுத்த ஓரா மீனினம், கயல் மீனினம் மட்டுமல்ல அவற்றை வேட்டையாடப் படையெடுத்து வரும் கருங்கண்ணிப் பாரையைக்கூட பிடித்து விடக் கூடியதாக இருந்தது.

இப்படி உணவுச் சங்கிலி கடலுக்கடியிலும் மிக அற்புதமாக நிகழ்ந்த காலம் ஒன்றிருந்தது. இப்போ பல உயிரிகள் இல்லாமற் போயின. தரையை விடவும் இயற்கைச்சமநிலைச் சீரழிவு கடலுக்கடியில்தான் மிக மோசமாகப் போய் விட்டது. நாம்தான் பழுதாக்கி விட்டோம்.

நான் குறிப்பிடும் இந்தத் தாழைகடியன் பாம்பினம் பொல்லாத விசம், மனிதருக்கு ஆபத்து என்றெல்லாம் சொல்லப் படுவதுண்டு. உண்மைதான். ஆனால் எமது கடலில் நாங்கள் கடலட்டை, நாவடம் சங்கு, சிங்கறால் வேட்டைகள் நடாத்திய காலங்களில் இவைகளை விலத்தியே கடலுக்குள் சுழியோடியிருக்கிறோம். எந்தத் தீவினையும் செய்ததில்லை. ஒருவர்கூட இந்தப் பாம்புகளால் தீண்டப் பட்டது கிடையாது.
கடலுக்கடியில் சென்றுவிட்டு மேலெழுந்து வரும்போது எமது முதுகால் ஊர்ந்து சென்ற சந்தர்ப்பங்களும் அதிகமாக நடந்தேறி இருக்கின்றன. கிஞ்சித்தும் எம்மில் வாய் வைத்தது கிடையாது.
இந்தத் தாழைகடியன் பாம்பினத்தின் இன்னொரு வகைதான் ஆசிய கடல் நாகம். அவை கற்பாறைகளின் இடுக்கில் படுத்திருக்கக் கண்டிருக்கிறோம். குறிப்பாக அரிப்புத்துறைக் கடற் பூங்காவில் (சல்லி) இவற்றை அதிகம் காணலாம்.
அதனை நாங்களும் தொந்தரவு செய்ததில்லை, அதுவும் எங்களோடு சோலிக்கு வந்ததில்லை.
தனது இரை எதுவென அதற்குத் தெரியும்.