நெடுந்தீவு மக்களை கொந்தளிக்க வைத்த ‘வாடைக்காற்று’

இந்தத் தடை ஈழத்து எழுத்தாளர்கள் தமது படைப்புகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு வழிவகுத்தது. அத்துடன் இதனால் வெளியீட்டு நிறுவனங்களும் பயனடைந்தன. குறிப்பாக வீரகேசரி பத்திரிகை நிறுவனம் மாதம் ஒரு நூல் என்ற வகையில் பல எழுத்தாளர்களின் நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டது. இந்த வெளியீடுகளுக்கு மக்கள் மத்தியில், குறிப்பாக கிராமப்புற மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. அந்த நாட்களில் கிராமப்புறங்களிலுள்ள வீடுகளுக்கு நீங்கள் சென்றால் அங்கு ஏதாவதொரு வீரகேசரி வெளியீடு இருப்பதைக் காணலாம்.

செங்கை ஆழியான் என்ற பெயரில் எழுதி வந்த க.குணராசாவின் பல நாவல்களும் இந்தக் காலகட்டத்தில் வெளிவந்தன. அவற்றுள் மீனவ மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட “வாடைக்காற்று” என்ற நாவலும் வெளிவந்து மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. இந்த நாவல் பின்னர் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.

இந்த நாவலில் வரும் சம்பவங்கள் நடைபெறும் இடமாக நெடுந்தீவு சித்தரிக்கப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பருவத்துக்கு நெடுந்தீவில் தங்கியிருந்து மீன் பிடிக்க வரும் வெளியூர் மீனவர்களைச் நேர்ந்த இளைஞன் ஒருவன் உள்ளுர் யுவதி ஒருவரைக் காதலிப்பதே நாவலின் கரு. இந்த நாவலை வாசித்த நெடுந்தீவு மக்கள் யாரும் அதைப்பற்றி அலட்டிக் கொள்ளவில்லை.

இந்த நிலைமையில் இந்த நாவலைப் பற்றி வீரகேசரி ஞாயிறு வாரவெளியீடு ஒன்றில் ‘அலசையன்’ என்ற பெயரில் விமர்சனம் எழுதிய ஒருவர், வாடைக்காற்று நாவலில் வெளியூர் மீனவர்கள் நெடுந்தீவைச் சேர்ந்த உள்ளுர் பெண்களுடன் தொடர்பு வைப்பது போலவே அந்நியர் ஆட்சிக் காலத்தில் நெடுந்தீவுக்கு வந்த வெள்ளையர்கள் அங்குள்ள பெண்களுடன் கூடியதனால் பிறந்த பிள்ளைகள் இருக்கின்றன என்றும், அவர்கள் வெள்ளை நிறமாகவும் அவர்களது தலைமயிர் செம்பட்டை நிறத்தில் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார்.

நெடுந்தீவு மக்களை கொச்சைப்படுத்தி அலசையன் எழுதிய இந்தக் கட்டுரை அங்குள்ள மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. அதை எழுதியவர் மீதும் அதை வெளியிட்ட வீரகேசரி பத்திரிகை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரினர். மக்களின் இந்தக் கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கு அங்கு எமது தோழர்களால் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்த நெடுந்தீவு முற்போக்கு வாலிபர் இயக்கம் முன்வந்தது.

முற்போக்கு வாலிபர் இயக்கத்தின் முயற்சியால் அலசையன் எழுதிய கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்து நெடுந்தீவு கிராமசபையில் கண்டனத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள விசேடம் என்னவென்றால் நெடுந்தீவு கிராமசபையின் வரலாற்றில் இந்த ஒரு விடயத்துக்குத்தான் ஏகமனதான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

இதைத் தவிர, இந்த விடயம் சம்பந்தமாக நெடுந்தீவில் பகிரங்க கண்டனக் கூட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கிராமசபைத் தலைவர் உட்பட மதப் பெரியார்கள், சமூக சேவையாளர்கள், முற்போக்கு வாலிபர் இயக்க பிரிநிதிகள், அரச ஊழியர்கள் எனப் பலரும் உரையாற்றினர். எமது இலங்கை மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நானும் கலந்துகொண்டு உரையாற்றினேன். கூட்டத்துக்கு முழு நெடுந்தீவு மக்களுமே திரண்டு வந்திருந்தனர். கூட்டத்தின் முடிவில் வாடைக்காற்று நாவலின் பிரதியும், அலசையனின் கட்டுரை வந்த வீரகேசரி பத்திரிகையின் பிரதியும் மக்கள் முன்னிலையில் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது.

இது தவிர, இந்த விடயம் குறித்து சட்ட நடவடிக்கையில் ஈடுபடவும் முற்போக்கு வாலிபர் இயக்கம் தீர்மானித்தது. எனவே முற்போக்கு வாலிபர் இயக்கத்தின் சார்பாக அதன் செயலாளர் காலஞ்சென்ற தோழர் சி.சண்முகநாதன் இலங்கை பத்திரிகைப் பேரவையில் முறைப்பாடு ஒன்றைச் செய்தார்.

இந்த முறைப்பாட்டைச் செய்வதற்காக கொழும்பு சென்ற தோழர் சண்முகநாதனுடன் நானும் சென்றேன். தோழர் வி.ஏ.கந்தசாமியும், நீர்வை பொன்னையனும் முறைப்பாடு செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தனர். கொழும்பில் வசித்து வந்த எமது தோழரும் வழக்கறிஞருமான ஜீ.குமாரலிங்கம் (இவர் தமிழசுக் கட்சித் தலைவராக இருந்த கு.வன்னியசிங்கத்தின் சகோதரி வழி மருமகன்) எமக்காக பத்திரிகைப் பேரவையில் ஆஜரானார்.

இலங்கை பத்திரிகைப் பேரவை சிறீமாவோ ஆட்சிக் காலத்தில் 1973 யூன் 14ஆம் திகதிதான் முதல்முதல் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவராக சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.கே.பிரேமதாச என்பவரும், ஆறு பேரவை உறுப்பினர்களும் இருந்தனர். தலைவரும் உறுப்பினர்களும் எமது முறைப்பாட்டை கவனமாகச் செவிமடுத்த பின்னர், தமக்குள் ஆய்வு செய்து வீரகேசரி பத்தரிகையில் அலசையன் என்பவர் நெடுந்தீவு மக்களை அவமதித்து எழுதிய கட்டுரை தவறு என்ற முடிவுக்கு வந்ததுடன், தமது தீர்ப்பையும் வழங்கினர்.

தீர்ப்பின்படி, அந்தக் கட்டுரையை வெளியிட்ட வீரகேசரி பத்திரிகை நெடுந்தீவு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அந்த மன்னிப்பு அடுத்து வரும் வீரகேசரி ஞாயிறு வார வெளியீட்டில், முன்பக்கத்தில், மூன்று கொலம் அளவில், 72 பொயின்ற் எழுத்தில், சிவப்பு நிறத்தில் வெளியிடப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பத்திரிகைப் பேரவை உத்தரவை மதித்து வீரகேசரி அந்த மன்னிப்பை வெளியிட்டது.

இதற்கிடையில் வாடைக்காற்று நாவலை திரைப்படமாக்கும் வேலையும் ஒருபுறம் நடந்து வந்தது. அந்தப் படத்துக்கான நிதி முதலீட்டை கோண்டாவிலில் சீமா சில்க் இண்டஸ்றீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த குணரத்தினம் என்பவர் செய்திருந்தார். அந்தப் படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கருத்து நெடுந்தீவு தோழர்களிடம் இருந்தது.

இதனால் அச்சமடைந்த குணரத்தினம் சிலர் மூலம் நெடுந்தீவுத் தோழர்களுடன் தொடர்பு கொண்டு அந்தத் திரைப்படம் சம்பந்தமாகப் பேசுவதற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தோழர்கள் அந்தப் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் தீர்மானித்தனர். என்னையும் தம்முடன் வருமாறு அழைத்தனர்.

படத் தயாரிப்புக்காக தாம் ஏற்கெனவே பல இலட்சம் ரூபா முதலிட்டுள்ளதாகவும், தயாரிப்பு இடையில் நின்று போனால் தன்னால் தாங்க முடியாது எனவும் குணரத்தினம் தனது நிலையை மிகவும் தயவுடன் விளக்கினார். நீண்ட கலந்துரையாடலின் பின் அவரது நிலையைக் கவனத்தில் கொண்டு நெடுந்தீவு தோழர்கள் ஒரு சமரச முடிவுக்கு வந்தனர்.

அதாவது, படத்தில் எந்தவொரு இடத்திலும் நெடுந்தீவு என்ற பெயர் பயன்படுத்தக்கூடாது, ஏற்கெனவே நெடுந்தீவில் ஏதாவது காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தால் அவை நீக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளை தோழர்கள் முன்வைத்தனர். குணரத்தினம் அதை ஏற்றுக்கொண்டார். அதன் அடிப்படையில் மீனவ சமூகம் சம்பந்தமான காட்சிகள் மன்னார் பகுதியில் எடுக்கப்பட்டதாக பின்னர் அறிந்தோம். படம் 1977ஆம் ஆண்டு வெளியானது.