யாழ் இல் ஆறுமுகநாவலரின் வாரிசுகள்

திருமணம் ஆன பின்பும் நம்பி படிக்க அனுப்பிய கணவனை ஏமாற்றலாமா? யாழ் பல்கலைக்கழகத்தில் காதல் என்றால் என்னவெல்லாம் நடந்திருக்கும்? சும்மா விடலாமா? என்று ஆறுமுகநாவலரின் பேரன்கள் முகநூலில் கொக்கரிக்கிறார்கள்.

ராமனுக்கு செருப்படி நடந்த புகழ்பெற்ற சேலம் மாநாட்டில் தந்தை பெரியார் பத்து தீர்மானங்களை நிறைவேற்றினார். அதில் மூன்றாவது தீர்மானம் மிக முக்கியமானது.

‘ஒருவனுடைய மனைவி வேறொருவனை விரும்புவதை குற்றமாக்கக் கூடாது’

இந்தத் தீர்மானத்தின் தீவிரத்தன்மையை தாங்க முடியாத பார்ப்பனப் பத்திரிகைகள் இதை திரித்து எழுதின. மாற்றான் மனைவியை அபகரிக்கலாம் என்று தீர்மானம் போட்டதாக மாற்றி எழுதினார்கள். தொண்டர்கள் ராமனை செருப்பால் அடிக்க, அதை பெரியாரே அடித்ததாக எழுதியதற்கு மட்டும் இந்துப் பத்திரிகையும், துக்ளக்கும் மன்னிப்புக் கேட்கவில்லை. மிக முக்கியமாக இந்த மூன்றாவது தீர்மானத்தை திரித்து எழுதிய முதன்மைக் குற்றத்திற்காவே அவர்கள் மன்னிப்புக் கேட்டார்கள்.

இந்தத் தீர்மானம் 1971இல் தந்தை பெரியாரால் நிறைவேற்றப்பட்டது. ஆனால் 2018இல்தான் பெண்களுக்கு எதிராக இருந்த சட்டத்தை இந்திய உச்சநீதிமன்றம் நீக்கியது. இதற்கும் ‘கள்ளக்காதலை நீதிமன்றம் அங்கீகரித்து விட்டது’ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்தபடி ஒரு கூட்டம் புலம்பிக் கொண்டு திரிந்தது.

பெரியாரின் தீர்மானம் நிறைவேறி ஏறக்குறைய 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இன்றைக்கும் ஈழத்தில் வேறொருவரின் மீது ஆசைப்படுகின்ற பெண்ணை கொலை செய் என்று கதறிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் திருந்தவதற்கு இன்னும் நூறு ஆண்டுகள் ஆவது ஆகும்.