‘தை பிறக்கட்டும்’

கதிரவன் துயில்கொள்ள ஆரம்பிக்க, குருவிகளும் கூடுகள் சேர்க்கின்றன. மனை இருள் சூழ்கிறது. நாடியில் கையை ஊண்டி பிடித்தவளாக வீட்டின் முன்வாசலில் அமர்ந்திருக்கின்றாள் பார்வதி. பக்கத்துவீட்டில் பிள்ளைகளின் ஆராவரா ஒலிகளும், வீதிகளில் உடை, மரக்கறி வியாபாரிகளின் நடமாட்டமும், குருத்துவெட்டுவதும், கரும்பு தேடித்திரிவதுமாக சனங்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றனர். இச்சத்தங்கள் எதுவுமே பார்வதியின் செவிகளுக்கு கேட்கவில்லை. அவளின் ஆறுவயது மகளும் மண்ணில் உருவங்கள் செய்து விளையாடிக்கொண்டிருக்கின்றாள். அம்மா! அம்மா! என்று பிள்ளை கூச்சலிடும் சத்தமும் அவளின் காதுகளுக்கு எட்டவில்லை.