மார்கழி 13

நேற்றைய இரவுகள்
இப்படித்தான் விடிந்தன…

காற்றுப் புகமுடியாத
இடங்களில் எல்லாம்
தோற்றுப் போனவர்கள்
கண்ணி வைத்து
காவல் இருந்தனர்……

ஆம்….. மார்கழி 13
அதுவும் ஓர் .கர்நாள்…….

கார்முகில்க் கூட்டம்
ஆகாய வெளிகளை
ஆக்கிரமித்துக் கொண்டன.

மழை வரும்
மண் செழிக்குமென
மகிழ்ந் திருந்தோர்க்கு
வெள்ள அனர்த்தம்
காத்திருந்தது….

ஈழ விடுதலையை
ஆளத் தலைப்பட்டான்
குண்டுச் சட்டிக்குள்
குதிரை ஓட்டும்
குத்தகைக்காரன்….

எதிரியோடு போராடும்
உரிமையை எதிரியல்ல
சகோதரனே
மறுதலித் துக்கொண்டான்…

தரகு முதலாளிகளின்
தலைவன் ஒருவன்
தனக்குத் தானே
மகுடம் சூட்டிக்கொண்டான்.

இதிகாசத் துரியோதனர்களாய்
துகில் உரிந்தனர்
விடுதலை வேட்கையை…..

சுதந்திரச் சுவாசங்கள்
நிறுத்தப்பட்டன….

துப்பாக்கித் துரையர்களால்
சுதந்திரக் குரல்வளைகள்
நெரித்து மௌனிக்கப்பட்டது….

தேசவரைபடத் தூரிகைக்கு
நேசமோடு செங்குருதி கொடுத்த
பாசமிகு தோழர்கள்
சுவாசம் இழந்தனர்……

மரணத்தை எண்ணி
நான் கலங்கவில்லை
அனாதையாய் தெருக்களில்
மரணித்துப் போவதைத்தான்
வெறுக்கிறேன் என
எழுதிவைத்துவிட்டுச் சென்ற
தோழர்கள் ஆயிரம்…….

மீண்டும் வருவோமென
உறுதிவார்த்தை கூறிச் சென்ற
தோழன் ஒருவன்
தெருவோரக் கண்ணியில்
மாண்டுபோனான்……

நந்திக் கடல்வரை
மரணசாசனம் எழுதிவத்துவிட்டு
சவ ஊர்வலம் நடத்திச் சென்றான்
முடிவுரை எழுதி
தேச விடுதலைக்கு……

(Ganeshalingam Kanapathipillai)