அமைச்சரானார் சரத் பொன்சேகா!

பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பதவியேற்றுள்ளார். இன்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், அவர் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டார். சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இந்த பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றதாக, அதிபரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஊவா, மத்திய, சபரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களின் மாநகரச அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என முன்னதாக ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் காலமான காணி அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் வெற்றிடத்திற்காக சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக கடந்த 9ம் திகதி நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்பட்டுள்ளார்.