அரசாங்கம் 20 ஐ கைவிடும்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாக மிகவும் நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது. இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில், தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலான வியாக்கியானம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் இணைந்து, உயர்நீதிமன்றத்தில் பத்து மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

சட்டமா அதிபரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டே ​மேற்குறிப்பிட்ட மனுக்கள் யாவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டம், அர​சமைப்புக்கு எதிரானது என்றும். அது தொடர்பில் விசேடமான வியாக்கியானத்தை வழங்குமாறு​மே இந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தன.
1988 இலக்கம் 2 மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் ஏற்பாடுகளை திருத்துவதற்கான, அமைச்சரவை பத்திரத்துக்கு, ஜூலை மாதம் 25ஆம் திகதியன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது அங்கிகாரம் கிடைத்தது.

அதன்பிரகாரம், சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கான யோசனையை, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, ​ அரசாங்கம் வெளியிட்டிருந்தது.
அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலையே, அரசமைப்பின் 20ஆவது திருத்தமாக, நாடாளுமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்திருந்தது.

அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை, நாடாளுமன்றத்தில் ஆற்றுப்படுத்துவதற்கு முன்னர், அந்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அவரின் முடிவும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், அந்தத் திருத்தத்துக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் (கபே) உள்ளிட்ட தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகளும் மற்றும் சிவில் பிரதிநிதிகளுமே இவ்வாறு மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்), அமைப்பு ஓகஸ்ட் (28) திகதி தாக்கல் செய்திருந்த மனுவில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

20ஆவது திருத்தத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரைக்கும் ஒத்திவைக்கப்படுவதற்கான இயலுமை.

இந்த கால வரையறைக்குள், மாகாண சபைகள்/சபைகளின் ஆட்சிக்காலம் நிறைவடைந்து விட்டால், அவற்றின் அதிகாரங்களை நாடாளுமன்றத்துக்கு ஒப்படைத்தல்,
சுயாதீன ​தேர்தல்கள் ஆணைக்குழு, பலப்படுத்தப்படவேண்டிய நிலையில், தேர்தல்களுக்கான திகதிகளை அறிவிக்கும் அதிகாரத்தை அந்த ஆணைக்குழுவிடமிருந்து அபகரித்து, நாடாளுமன்றத்துக்குப் பொறுப்பேற்றல் ஆகிய மூன்று காரணங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

20ஆவது திருத்தத்தின் ஊடாக மக்களுக்கான வாக்களிக்கும் உரிமைக்கும் மற்றும் ஜனநாயக உரிமைக்கும் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆகையால், அந்தத் திருத்தச் சட்டத்தை, நாடாளுமன்றத்தில் பெருபான்மையை மட்டும் கொண்டு தீர்மானிக்காமல், சர்வஜன வாக்கெடுப்பை நடத்தவேண்டும்.

அரசமைப்பை தயாரிப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைக்குக் கௌரவமளித்து மற்றும் அதனை ஏற்றுக்கொண்டு, அந்த செயற்பாட்டின் ஊடாக மக்களின் அரசுரிமை மீறப்படக்கூடாது. அந்த அடிப்படையிலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் அதனை நாங்கள் முழுமையாக நம்புகின்றோம் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தத்தின் ஊடாக அரசாங்கம் மேற்கொள்ள உள்ள முயற்சியைத் தாங்கள் வரவேற்பதாகவும் எனினும், அந்த நோக்கத்தில் தேர்தல்களை ஒத்திப்போடுவதற்காக எடுக்கப்படும் முயற்சிகளை தாம் வன்மையாக எதிர்ப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட மூன்று அடிப்படைக் காரணங்களை முன்வைத்து, இந்தத் திருத்தம் தொடர்பிலான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை கேட்டறிந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெப்ரல்) அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாண சபைகளின் பதவிக்காலம், அடுத்துமாதத்துடன் நிறைவடைய உள்ளன. அந்த மாகாண சபைகள் உள்ளிட்ட சகல மாகாண சபைகளுக்கான தேர்தல்களையும் ஒரேநாளில் நடத்தும் நோக்கிலேயே, இந்தத் திருத்தத்தை கொண்டுவருவதற்கு, நடவடிக்கை எடுத்திருந்ததாக அரசாங்கம், ஏற்கெனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதனடிப்படையில், இந்த மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு, கடந்த வியாழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, அறியமுடிகின்றது.
அந்த வியாக்கியானத்தின் பிரகாரம், அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக நடத்தப்படவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய, ​நாளை செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.

இதேவேளை, மாகாண சபைகளின் அங்கிகாரத்துக்காக, அரசாங்கத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருந்த அரசமைப்பின் 20ஆவது திருத்தம், மாகாண சபைகள் பலவற்றில் தோல்வியை தழுவியுள்ளன. இந்நிலையிலேயே, இந்த 20ஆவது திருத்தச் சட்டமூலத்தை, அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளவுள்ளதாக நம்பகரமான தகவல் தெரிவிக்கின்றது.