அரசின் உள்ளிருந்து முணுமுணுக்கும் பேரினவாதம்!?

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை ஓர் தூரநோக்கற்ற செயலாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஜாதிக ஹெல உறுமய கட்சி நல்லாட்சிக்காக ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணி கட்சிகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடுவது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கட்சியின் ஊடகப் பேச்சாளர் நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டு மொழியில் தேசிய கீதம் பாடுவது இனங்களுக்கு இடையிலான பிணைப்பை ஏற்படுத்துவதனை விடவும், விரிசலையே அதிகரிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்பொதைய அரசாங்கத்திற்கு பல்வேறு முக்கிய கருமங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்பு காணப்படும் நிலையில் இவ்வாறான பணிகளில் நேரத்தை செலவிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய கட்சி எந்தவொரு நேரத்திலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதனை அனுமதிக்காது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடுவது அரசியல் சாசனத்திற்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாகவே, தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.