அரசியலமைப்பு: புதிதாகவே வரும்….? திருத்தம்தான் வரும்…..?

அரசியலமைப்பு விவகாரம் தொடர்பில், அரசாங்கத்தில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளிடையே முரண்பாடான கருத்துகள் உள்ளமையை, நேற்று (01) இடம்பெற்ற இருவேறு ஊடகவியலாளர் மாநாட்டில் அவதானிக்க முடிந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (01) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து​ தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழித்து, புதிய அரசியலமைப்பை தயாரித்து, தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்றார்.

“புதிய அரசியல் அமைப்புக்கு சர்வஐன வாக்கெடுப்பு நடத்தப்படுவது உள்ளிட்ட விடயங்களுக்கு அரசாங்கத்திலுள்ள சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே?” என, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,

“இவ்வாறானவர்கள் தெரிவிக்கும் கருத்து தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை. தேர்தலுக்கு முன்னர் அவர்கள் எங்கிருந்தனர். அரசாங்கத்துடன் காலதாமதமாக இணைந்து கொண்டவர்களே இதனைக் கூறுகின்றனர்.

எவ்வாறாயினும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதே எமது ​நோக்கம். வாக்குறுதி கொடுத்தமைக்கு அமைய அதனை நாம் நிறைவேற்றுவோம்” என்றார்.

இதேவேளை, பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரகொடி,“அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் முயற்சிக்கின்றதே தவிர, புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை” என்றார்.

“கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமையவே அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டு வரப்படும். இதற்காகவே, வழிநடத்தல் குழு நியமிக்கப்பட்டு பொதுமக்களின் கருத்துகளையும் கட்சி மட்டத்திலான கருத்துகளையும் பெறப்பட்டு வருகின்றது. இவற்றையெல்லாம் ஆராய்ந்து நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் பொருத்தமான வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவரப்படும். மாறாக இவ்வாறாக பெறப்படும் கருத்துகளைக்கொண்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது.

ஆகவே, புதிய அரசியலமைப்பை உருவாக்காது, அரசியலமைப்பில் திருத்தங்களை கொண்டுவரும் நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது” என்றார்.