‘கேப்பாப்புலவுமுகாம் இருக்கும்’

“முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, பிலவுக்குடியிருப்பு பகுதியிலுள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி, உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு, முல்லைத்தீவு அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று(01) நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். மக்களின் காணிகள் இன்று (நேற்று) விடுவிப்பதாக கூறப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போதே, அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார். தனக்கு அறிவிக்கப்பட்ட உத்தியோகபூர்வ தகவலின் படி, 42 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், அங்குள்ள விமானப் படை முகாம் அகற்றப்படமாட்டாது, பலாலி பகுதியில் எவ்வாறு படையினரும் பொதுமக்களும் இணைந்ததாக இருக்கின்றனரோ, அதனைபோல இங்கேயும் இருப்பர்” என்றார்.