ஆசிரியர்களின் சேவை உளளீர்ப்பில் குளறுபடிகள் – மக்கள் ஆசிரிய சங்கம்

இலங்கை ஆசிரிய சேவையின் புதிய சேவை பிரமாணக் குறிப்பு 1885/38 இலக்கமும் 2014/10/23 திகதியும் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பு 2008/07/01 திகதி முதல் அமுல்படுத்தப்படுவதுடன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 1994 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது. இப்புதிய சேவை பிரமாணக் குறிப்பே இனிவரும் காலங்களில் இலங்கை ஆசிரிய சேவையில் ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள ஏற்றம் என்பவற்றை தீர்மானிக்கப் போகின்றது. இச்சேவை பிரமாணக் குறிப்பின்படி, ஆசிரிய சேவையில் இருப்போரை உள்ளீர்க்கும் நடவடிக்கைகள் நாடெங்கிலும் உள்ள வலய கல்விப் பணிமனைகளால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்புதிய ஆசிரிய சேவைப் பிரமாணக் குறிப்பின்படி ஆசிரியர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கையின் போது பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதாக மக்கள் ஆசிரிய சங்கத்தின் செயலாளர் திரு. நெல்சன் மோகன்ராஜ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் புதிய சேவை பிரமாணக் குறிப்பின்படி சேவை உள்ளீர்ப்பின் போது பல ஆசிரியர்களின் பதவியுயர்வுகள் பின்தள்ளப்பட்டுள்ளதாகவும் அடிப்படை சம்பளம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது. புதிய சேவை பிரமாணக் குறிப்பு தொடர்பில் போதிய தெளிவில்லாமல் எழுதுவினைஞர்கள் இவ்வாறு செய்வதாகவும் அவர்களை வழிப்படுத்த வேண்டிய அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறையின்றி இருப்பதாகவும் குறிப்பிட்டார். அவ்வாறான பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் தமது சங்கத்திற்கு 071 62 70703, 071 60 70644 எனும் தொலைபேசி இலக்கங்களுக்கோ ptusrilanka@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ 52/3, ஆலய வீதி, கஹவத்தை எனும் தபால் முகவரிக்கோ தமது முறைப்பாடுகளை சமர்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.