ஆறடி வெள்ளத்தில் மிதக்கும் நூறு தீவுகள் கொண்ட வெனிஸ் நகரம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய தலங்களில் ஒன்றான வெனிஸின் 80 சதவீத இடங்கள் கடல் அலையின் தீவிரத்தால் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெனிஸ் நகரத்தில் ஏற்பட்டுள்ள சேதங்கள், நாட்டு மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டின் பிரதமர் ஜூசப்பே காண்ட்டே, மீட்பு நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்கு தேவையான நிதி உள்பட அனைத்து விதமான உதவிகளும் வெனிஸுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

முற்றிலும் கடலால் சூழப்பட்டுள்ள வெனிஸ் நகரத்தில் உயர்ந்து வரும் கடல் நீர்மட்டம் மற்றும் பருவகாலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தவிர்க்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நீரழுத்த தடுப்பு கட்டமைப்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வெனிஸ் நகரத்திலுள்ள பெரும்பாலான அருங்காட்சியகங்கள் மூடப்பட்டுள்ளதாக ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு வெனிஸ் நகரத்தில் கடலலைகளின் பாதிப்பு தொடர்ந்து அதிகமாகவே இருக்கும் என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள வெனிஸின் மேயர் லூய்கி ப்ருக்னாரோ, கடந்த ஐம்பதாண்டுகளில் இந்த வாரம்தான் வெனிஸில் அதிகளவு தண்ணீர் புகுந்துள்ளதாகவும், இதன்பாதிப்பு “மிகப்பெரியது” என்பதால், இது “நிரந்தர அடையாளத்தை” விட்டுச்செல்ல கூடும் என்று கூறுகிறார்.


வெனிஸ் நகரத்தின் தாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மார்க்ஸ் சதுக்கம் உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கி மிகவும் சேதமடைந்துள்ளன.

வெனிஸ் நகரத்திலுள்ள பழமையான கட்டடங்கள் மற்றும் தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரிசெய்வதற்கு பல மில்லியன்கணக்கான யூரோக்கள் செலவிடப்பட வேண்டியிருக்கும் என்று கருதப்படுகிறது.

எண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான தேவாலயங்கள் காணப்படும் வெனிஸ் நகரத்தில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

முற்றிலும் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி வெனிஸ் நகரத்தில் வியாபாரம் செய்து வருபவர்கள், இந்த வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தாலியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள வெனிஸ் நகரம், நூற்றுக்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கியது. வெனிஸ் நகரத்தில் கடல்நீர் மட்டம் அளக்கப்பட தொடங்கியதிலிருந்து இதுவரையிலான 96 ஆண்டுகளில் நடந்த இரண்டாவது மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது.

நீருக்கு இடையில் வாழும் வெனிஸ் நகரில் வெள்ளம் சூழ்ந்தால்…
ஒவ்வோர் ஆண்டும் கடல்நீர் மட்டம் அதிகரிப்பதால் பிரச்சனைகளை சந்திக்கும் வெனிஸ் நகரத்தின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு கடந்த 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மோஸ்’ எனும் திட்டம் வரும் 2021ஆம் ஆண்டு இறுதியில்தான் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெள்ளத்தடுப்பு திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பில்லியன்கணக்கான யூரோக்கள் செலவிடப்பட்டாலும், அவ்வப்போது ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது இந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்துகிறது.