இந்தியாவின் காலனித்துவ நாடாகும் சிறிலங்கா?!

கலிங்கப் பேரரசின் காலத்தைப் போன்று, மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “கலிங்க பேரரசின் காலத்தைப் போன்று மீண்டும் இந்தியாவின் காலனித்துவ நாடாக சிறிலங்கா மாறும் சூழல் தோன்றியுள்ளது. அனுமார் பாலம் தொடக்கம் சீபா ஊடாக இந்திய அம்புலன்ஸ் சேவை வரை பல்வேறுபட்ட சிகப்பு சமிக்ஞைகள் ஒளிர்ந்த வண்ணம் உள்ளன. இந்தியாவினால் நியமிக்கப்பட்ட ஆளுநரைப் போன்று எமது நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனவினதும், முதலமைச்சரைப் போன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின தும் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இந்தியாவின் பிராந்தியமாக சிறிலங்காவையை மாற்றுவதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். எமது நாட்டு மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் அரசியலமைப்பே எமக்குத் தேவையே தவிர, இந்தியாவின் அபிலாசைகளை நிறைவேற்றும் புதிய அரசியலமைப்புக்கு இடமளிக்கமாட்டோம். நிறைவேற்று அதிகாரம் கொண்டஅதிபர் முறைமையை ஒழிப்பதற்கும் 13 ஆவது திருத்தச்சட்டத்தை மீறிய அதிகாரப் பரவலாக்கலையும் எதிர்க்கிறோம். ஆனால் தேர்தல் முறைமை மாற்றத்தை ஆதரிக்கின்றேன். புதிய அரசியலமைப்பு நாட்டுக்கு தேவையில்லை. அதற்கு பதிலாக திருத்தங்களே கொண்டுவரப்பட வேண்டும். இந்தியா எமக்கு 13ஆவது திருத்தச்சட்டத்தை மீறிய அதிகார பரவலாக்கங்களை வழங்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றது.” என்றும் அவர் தெரிவித்தார்.