தமிழ் பௌத்தர்கள்? தமிழ் பௌத்த பிக்குகள்?

சிறிலங்காவில் தற்போது, 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, நாடாளுமன்றத்தில் நேற்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரனவின் கேள்வி ஒன்றுக்கு அமைச்சர் கயந்த கருணாதிலக பதிலளித்த போதே இந்த தகவல்களை வெளியிட்டார். தமிழ் பௌத்தர்கள் பற்றிய கணக்கெடுப்பை புத்தசாசன அமைச்சு மேற்கொள்ளாவிடினும், 2012ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின் மூலம், நாட்டில் , 22,254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் இருப்பதாக, தெரியவந்துள்ளது. இவர்களில் 470 தமிழ் பௌத்தர்கள் வடக்கில் வாழ்கின்றனர். சிறிநந்தராம என்ற பெயரில் தமிழ் தம்ம பாடசாலை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அதில் 80 சிறுவர்கள் கல்வி கற்றனர். தற்போது அது செயலிழந்துள்ளது. தம்ம கல்வியை மீண்டும் வழங்குவதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்