இந்தியாவிலிருந்து பாகிஸ்தானிய அதிகாரி வெளியேற்றம்

அணுவாயுதவல்லமை பொருந்திய நாடுகளான இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே, ஏற்கெனவே உயர் பதற்றம் நிலவுகின்ற நிலையில், இரகசியமான பாதுகாப்பு ஆவணங்களை வைத்திருந்தமைக்காக, குறிப்பிட்ட நேரம் தடுத்து வைக்கப்பட்டிருந்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானிய விசா அதிகாரியொருவரை வெளியேற்றுவதாக, நேற்று வியாழக்கிழமை (27), இந்தியா அறிவித்துள்ளது.

குறித்த அதிகாரி, பணத்துக்காக, பாகிஸ்தானின் சக்திவாய்ந்த ஐ.எஸ்.ஐ-க்காக உளவு பார்ப்பதற்கு, இரண்டரை ஆண்டுகளாக, இந்தியர்களைச் சேர்த்ததாக, புது டெல்லிப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

எல்லைக்கு துருப்புகள் தரையிறக்கப்படுவது குறித்த தகவல்களை, சந்தேகத்துக்கிடமான இரண்டு இந்திய சதிகாரர்களிடம் பெறுவதற்கான சந்திப்பை ஒழுங்குபடுத்தியபோதே, குறித்த அதிகாரி, டெல்லி மிருகக்காட்சிசாலையில் வைத்தே, நேற்று முன்தினம் புதன்கிழமை (26), கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே, குறித்த அதிகாரியை 48 மணித்தியாலத்துக்குள் வெளியேற்றும் முடிவை, பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரை அழைத்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சுப்ரமண்யம் ஜைஷங்கர், அறிவுறுத்தியுள்ளார்.