இன்று பேரவை கூடுகிறது! கொழும்பில் இருந்து சட்டத்தரணிகள் வருகை!

முதலமைச்சரை இணைத்தலைவராக கொண்ட தமிழ் மக்கள் பேரவை இம்மாத இறுதியில் உத்தேச தீர்வுத்திட்ட வரைபை வெளியிடுவதாக அறிவித்திருந்தது. அதன் பிரகாரம் திங்கள் [18-01-2016] கூடும் பேரவை அமர்வில் சட்ட ஆலோசனை வழங்க கொழும்பில் இருந்து இரண்டு சட்டத்தரணிகள் இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். முன்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இலிகிதராக பணிபுரிந்து பின்னர் சட்டத்தரணியாகி கடந்த பத்து வருடங்களாக மூத்த சட்டவாளர் திரு சுரேந்திரன் அவர்களின் கீழ் பணிபுரியும் திரு நடராஜா காண்டீபன் மற்றும் மூத்த சட்டத்தரணி சி வி விவேகானந்தனின் மகனும் மூத்த சட்டவாளர் திரு சேதுகாவலரின் கீழ் பயின்றவருமான சட்டத்தரணி திரு புவிதரன் அவர்களுமே யாழ் வந்துள்ளனர்.

சட்டத்தரணி திரு நடராஜா காண்டீபன் கடந்த வட மாகாண தேர்தலின் போது முன்நாள் நீதியரசர் திரு விக்னேஸ்வரன் அவர்களின் வெற்றிக்காக தேர்தல் காலத்தில் யாழ் வந்து பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டவர். முதல்வர் மீதான தனிப்பட்ட விருப்பு காரணமாகவே அவர் தற்போது உத்தேச தீர்வு வரைவுக்கு ஆலோசனை வழங்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதே வேளை திரு புவிதரன் அவர்களும் திரு சுமந்திரன் அவர்களும் சட்டக்கல்லூரியில் சமகால மாணவர். இருவரும் ஆரம்பத்தில் மூத்த சட்டவாளர் திரு சேதுகாவலர் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள். பின் திரு சுமந்திரன் மூத்த சட்டவாளர் திரு கனகஈஸ்வரனின் சட்ட நிறுவனத்தில் இணைந்து கொண்டார்.

இதே வேளை 11-01-2016 ல் நடந்த கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின் முடிவில் மீண்டும் 17-01-2016 சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிய முதல்வர் அந்த கூட்டத்தை ரத்து செய்தமைக்கு அதற்கு முன்தினம் 16-01-2016ல் அவரை சந்தித்த மூவர் அணியே காரணம் என கூறப்படுகிறது. தமக்குள் முரண்நிலை இருந்த போதும் புலம்பெயர் அமைப்பின் வழி நடத்தலில் அவர்கள் மூவரும் முதல்வரை சந்தித்து உள்ளனர். 11-01-2016ல் முதல்வர் சற்று தடுமாற்றம் அடைந்த நிலை அறிந்த புலம்பெயர் அமைப்பு அவரின் மன மாற்றத்தை தடுக்கவே சிவாஜிலிங்கம்,

அனந்தி, ரவிகரன் மூவரையும் ஓரணியாக அனுப்பி முதல்வரை தடுத்தாட்கொண்டதாக தகவல்.

அனந்தி இந்தியா ஊடாக மேற்கு நாடு ஒன்றிற்கு பயணம் மேற்கொள்ளுமுன் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். பாராளுமன்ற தேர்தல் காலத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு ஏழரை கோடி ரூபா தேர்தல் நிதியாக அனுப்பப்பட்டதாகவும் அதில் அனந்திக்கும் இரண்டு கோடி ஒதுக்கப்பட்டதாகவும் அறியக்கிடக்கிறது. தன்னை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் கேட்பதாக சம்மந்தரை சந்தித்த அனந்தி கூறி உள்ளார். அதற்கு மக்களுக்கு உதவத்தானே உங்களை மாகாண சபை உறுப்பினராக அனுப்பி உள்ளோம் என சம்மந்தர் பதில் கூறியுள்ளார். அதற்கு அதிகாரம் இல்லாத மாகாண சபையால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லை என பதில் கூறிய அனந்தி ஒரு முக்கிய தகவலையும் சொன்னார்.

புலம்பெயர் அமைப்பினர் தன்னை பாராளுமன்றம் அனுப்ப விரும்புவதாகவும், தனது தேர்தல் செலவுக்கு இரண்டு கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தான் போட்டியிடுவதேன்றால் கூட்டமைப்பில் மட்டுமே போட்டியிட விரும்புவதாகவும் கூற, சம்மந்தர் பாராளுமன்ற தேர்தல் பற்றி எதுவும் பேசாமல், கூடியவிரைவில் பூரண அதிகாரம் கொண்ட அமைப்பொன்றை உருவாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுகொண்டிருக்கிறோம், நீங்கள் தொடர்ந்து மாகாண சபையில் இருந்து மக்களுக்கு சேவை ஆற்றுங்கள் என கூறிவிட்டு. தனக்கு இன்னொரு சந்திப்பு இருப்பதாக கூறி சென்றுவிட்டார்.

கூட்டமைப்பை விட்டு வெளியேறமாட்டேன் என சம்மந்தரிடம் கூறிய அனந்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட எடுத்த முயற்சி கைகூடவில்லை. அனந்தியை தன் கட்சியில் போட்டியிட அனுமதித்தால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என கணிப்பிட்ட கஜேந்திரகுமார் அனந்திக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுக்க விரும்பவில்லை. அனந்தியிடம் சுயேட்டைசையாக கேட்கும் படி சிலர் கூறியபோதும் வெற்றிக்கான வாய்ப்பு இல்லை என்பதை அறிந்த அனந்தி இருப்பை தக்க வைக்க தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை கைவிட்டுவிட்டார். தற்போது பேரவை விடயத்தில் முதல்வருக்கு ஆதரவாக செயல்படும் அணியில் ஆனந்தியும் உள்ளார் என்பது உள்வீட்டு தகவல்.