இரணைதீவில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்துள்ள மக்கள்

இரணைதீவு கிராம மக்கள் இன்று (23) இரணைதீவில் தங்கி நின்று போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளனர். கிளிநொச்சி இரணைதீவு கிராம மக்கள் 1992 ஆம் ஆண்டு தமது சொந்த மண்ணில் இருந்து இடம்பெயர்ந்து சென்று முழங்காவில் கிராமத்தில் உள்ள இரணை மாதா கிராமத்தில் குடியேறியுள்ளனர்.

சுமார் 183 குடும்பங்கள் கடந்த 27 வருடங்களுக்கு முன் இடம் பெயர்ந்துள்ள நிலையில் தற்போது 400 குடும்பங்களுக்கு மேலாக தமது சொந்த இடத்தை விட்டு நிர்க்கதியான நிலையில் முழங்காவில் இரணை மாதா கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

தமது சொந்த மண்ணில் மீள் குடியேற்றம் செய்ய கோரி சுமார் ஓராண்டுக்கு மேலாக தமது போராட்டத்தை தொடர்ந்த குறித்த கிராம மக்கள் தமது சொந்த நிலமான இரணைதீவு கிராமத்துக்கு இன்று (23) காலை படகுகள் மூலம் சென்று ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

படகுகள் மூலம் இரணைதீவுக்குச் சென்ற மக்கள் அங்குள்ள தேவாலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து தமது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் செய்ய முயற்சித்தனர்.

எனினும் பேச்சுவார்த்தைகயில் ஈடுபட்ட கடற்படையினர் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர்.

எனினும் கோரிக்கையினை ஏற்றுக்கொள்ளாத இரணைதீவு கிராம மக்கள் தமது கிராமத்தில் உள்ள கோயிலுக்கு அருகாமையில் தமது போராட்டத்தை மேற்கொண்டனர்.

குறித்த பிரச்சினை தொடர்பில் தீர்வு கிடைக்காத நிலையில் இரணைதீவு கிராமத்தில் தங்கி நின்று போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் முடிவுகளை மேற்கொண்டனர்.

அதற்கு அமைவாக சுமார் 400 குடும்பங்கள் வரை இரணை தீவு கிராம மத்தில் தங்கியிருந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தகக்து.