இலங்கை அரசில் இருந்து: ‘வெளியேறுவோர் வெளியேறலாம்’

தேசியப் பட்டியலின் ஊடாக பசில் ராஜபக்‌ஷ, பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார் என உத்தியோகபூர்வமற்ற அறிவிப்புகள் வெளியானதன் பின்னர், ஆளும் பங்காளி கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை
முன்​வைத்திருந்தனர்.

இதனிடையே, சில அமைச்சர்களின் கீழிருந்த நிறுவனங்களும் மாற்றப்பட்டன. அதனால், பங்காளி கட்சிகளின் தலைவர்களிடத்தில் ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டிருந்தது. எனினும், ஆளும் தரப்பினரின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் பங்காளித்
தலைவர்கள் சிலர் முயற்சித்துள்ளனர் என்றும் அம்முயற்சிகள் நேற்றுக்காலை வரையிலும் கைகூடவில்லையென்றும் அறியமுடிகின்றது.

இந்நிலையில், அரசாங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, இணைந்து பணியாற்ற விரும்பாதவர்களை, கண்டுகொள்ளாமல் விடுவதற்கும், அரசாங்கத்திலிருந்து வெளியேறினால், வெளியேறிச் செல்வதற்கு இடமளிக்கவும் உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக
அறியமுடிகின்றது.

இதேவேளை, ஊடக​மொன்றுக்கு கருத்துரைத்திருந்த பிரதமர் மஹிந்தராஜபக்‌ஷ, “ கூட்டணி அரசாங்கத்துக்குள் பங்காளிகள் இருப்பர், அவர்களிடத்தில் பல்வேறான கொள்கைகள் இருக்கும். எனினும்,அரசாங்கம் என்ற ரீதியில் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். அவ்வாறு செயற்படாதவர்களுக்காக அரசாங்கத்தின் கதவுகள் திறந்தே இருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

“மக்களின் நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள பிரதமர், ஏனையவர்களை போலன்றி உள்ளக ஜனநாயகத்தை தாங்கள் பேணுகின்றோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆளும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கான கூட்டங்கள், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில், அலரிமாளிகையில், அண்மைய காலங்களில் நடைபெற்றன. அதில், பசில் ராஜபக்‌ஷவும் பங்கேற்றிருந்தார். அதுவும், தலைமைத்தாங்கும் அணியினர்
அமர்ந்திருந்த வரிசையிலேயே அமர்ந்திருந்தார்.

எனினும், கட்சியில் அங்கம் வகிக்காதவர்கள் பங்கேற்கும், கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தாங்கள் பங்கேற்கமாட்டோமென, பங்காளி கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார மற்றும்திஸ்ஸவித்தாரண உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.