இலங்கை: கொரனா நிலவரம்

காலி மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் கொவிட் 19 தொற்றாளர்களாக 202 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என, காலி மாவட்ட தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது. கொவிட் இரண்டாவது அலையின் பின்னர், நேற்றைய தினம் (23) வரை காலி மாவட்டத்தில் 2,067 பேர் கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இன்று (25) காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தனிமைப்படுத்தல் சட்ட விதிமுறைகளை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின்  பேரில், 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி முதல் தற்போது வரையான காலப்பகுதியில், 3,233 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்தோரில் மேலும் 447 பேர் இன்று(25) பூரண குணமடைந்த நிலையில் வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 79,961 ஆக அதிகரித்துள்ளது.